நீரின்றி அமையாது உலகு - மழைநீர் உயிர்நீர் என்றெல்லாம் மேடைதோறும் முழங்குகின்றோம். ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீரை சேமித்து வைத்து அதனை கோடை காலங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக நீர்நிலைகளான ஏரி, குளம், கிணறு, ஆறுகள், கண்மாய்கள் ஆகியவற்றை அவ்வப்போது தூர் வாரி மழைநீரை பேணிப் பாதுகாக்க ஏனோ மறந்து விடுகி றோம் அல்லது அலட்சியமாக இருந்து விடுகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காக, சுகபோகத்திற்காக இயற்கை அளித்த கொடையான மரங்களையும், காடுகளையும் அழித்தொழித்ததின் விளைவாக நாட்டில் பருவமழை வெகு வாகப் பொய்த்துவிட்டது. இதன் காரணமாக மனிதன் குடிப்ப தற்குக்கூட தண்ணீர் இன்றி அல்லல்படுகின்ற அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனையின் உச்சம். முறையாகப் பருவமழை இல்லாததால் வயிற்றுக்குச் சோறிடும் விவசாயத் தொழில் அழிவுநிலைக்கு உந்தப்பட்டுள்ளது சொல்லொண் ணாத் துயரமாகும். மேலும் கால்நடைகளுக்குப் போதிய தண்ணீரும், உணவும் கிடைக்காததால் கால்நடை வளர்ப்பு என்பது அறவே அற்றுப்போனது.
இத்தகைய வேதனையான சூழலில், நல்வாய்ப்பாக தற்போது கிராமங்களில் உள்ள இளைஞர்கள்-மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து மழைநீர் வீணாகாதவாறு தடுத்து நிறுத்திட - பாதுகாத்திட அவ்வூரில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்களை தூர்வாரி அவற்றில் மழைநீர் சேமித்து வருவதை அறிந்த சமூகநல விரும்பிகள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் இளைஞர்களையும் மாணவர்களையும் பாராட்டி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருவதோடு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய முன்வந்திருப்பது பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பருவமழை துவங்கிவிட்ட இச்சூழலில், 'தங்கத்தைக் காட் டிலும் மேலான மழைநீர்' ஒவ்வொரு சொட்டும் அவசியமான தாகும்.
அவை கடலில் சென்று கலக்காதவாறு அதனைப் பேணிப் பாதுகாத்திட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மழை நீரின் முக்கியத்துவத்தையும், தண்ணீரின் இன்றியமையாத் தேவையையும் கருத்தில் கொண்டு பொழிகின்ற மழைநீரை தேக்கிவைக்கும் உயரிய நோக்கில் நீர்நிலைகளை தூர்வாரவும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை ஆங்காங்கே நட்டு அதனை பராமரிக்கவும் இளைஞர்கள், மாணவர்கள், தன்னார் வலர்கள் முதலியோர் இணைந்து செயல்பட உள்ளனர் எனும் தேனினும் இனிய செய்தி சமூகநல ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களை பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடையச் செய்கிறது.
நமது வருங்காலச் சந்ததியினருக்கு பொன்னையும், பொரு ளையும் சேர்த்து வைப்பதை விட அவர்கள் ஆரோக்கியமா கவும், ஆனந்தமாகவும் வாழ்ந்திட, இருக்கின்ற இயற்கை வளங்களையும், நீர் நிலைகளையும், மரங்கள் - காடுகளையும் பராமரித்து பாதுகாப்பதே எதிர்காலத் தலைமுறையினருக்கு நாம் சேர்த்து வைக்கின்ற பெரும் செல்வமாகும்.
ஆகவே, "மழைநீர் உயிர்நீர்" என்பதை உணர்ந்து மரம் வளர்ப்போம் - மழை பெறுவோம். இயற்கை வளங்களையும், நீர் நிலைகளையும் பேணிப் பாதுகாப்போம்!
- சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.
No comments:
Post a Comment