செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

செய்தியும், சிந்தனையும்....!

கசப்பான இனிப்பு!


அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் வெளியிட்ட தீபாவளி வழிபாட்டு பாடல் ''ஓம் ஜெய் ஜகதீஷ் ஹரே'' பாடல் அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்துள்ளது.


'ஓம்' உள்ளிட்ட சொல்லுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் அமெரிக்கப் பாடகி அதிர்ச்சி அடைந்திருப்பார்; ஆமாம், இப்பொழுது மட்டும் இந்துப் பண்டிகைப் பாடலை கிறித்தவரான ஓர் அமெரிக்கப் பாடகி பாடினால் இனிக்கிறதோ!


ஆசியா? ஆதங்கமா?


பீகாரில் தேஜஸ்விக்கு அனுபவம் போதவில்லை  - இன்னும் காலம் இருக்கிறது: - உமாபாரதி.


ஆசியா- ஆதங்கமா? உங்களுக்குத்தான் அனுபவம் நிரம்பவே இருக்கிறதே - ம.பி. முதலமைச்சர் நாற்காலியைத் தங்களிடமிருந்து பறித்தது ஏனோ?


பா.ஜ.க. என்றால் பா.ஜ.க.தான்!


மீண்டும் வேல் யாத்திரை தொடங்கப்படும்; மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் முதலியோர் பங்கேற்பர்: - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்.


எந்த வகையிலாவது ரகளை செய்யவேண்டும், விளம்பரம் பெறவேண்டும் - பா.ஜ.க.வின் பண்பாடோ? பண்பாடு!


அண்ணாமலைக்கு அரோகரா!


திருவண்ணாமலை தீபத் திருவிழாவை பெயரளவில் நடத்தத் திட்டமிட்டதால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்.


கரோனா காலத்தில் பெரிய கூட்டத்தைக் கூட்டி கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை பெருகியிருந்தால் அருணாசல ஈசுவரனா காப்பாற்றப் போகிறான்?


கிழிகிறது பார் முகமூடி!


கேந்திரிய வித்யாலயாவில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால்தான் 6 ஆம்வகுப்பிலிருந்து தமிழ் கற்பிக்கப்படும்: - மத்திய பா.ஜ.க. ஆட்சி அறிவிப்பு.


அதேபோல, மூன்றாவது மொழிக்கும் நிபந்தனை விதிக்கப்படுமா? பா.ஜ.க. என்னும் பார்ப்பன ஜனதா ஆட்சியின் முகமூடி கிழிகிறது.


கடவுள்களுக்குள்


மல்யுத்தம்!


தீபாவளி - பட்டாசு வெடிப்பால் தீக்காயங்களுக்கு ஆளாகி வருவோர்க்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிறப்பு வார்டுகள் தயார்.


மகாவிஷ்ணுவுக்கும் - அக்னி பகவானுக்கும் மல்யுத்தமோ?


தீபாவளியா - தீய மூளியா?


‘பேண்ட்' நோ -


வேட்டி ‘யெஸ்!'


திருப்பதியில் மூலவரைத் தரிசக்க பேண்ட் அணிந்து வந்தவர்களுக்கு அனுமதியில்லை.


ஓ, வேட்டி வியாபாரமோ என்று தமாஷாகப் பதிவு போடலாம் என்று நினைத்தால், தமாஷ் அல்ல - வேட்டி வியாபாரம் தானாம் - பேண்ட் அணிந்து செல்பவர்கள் தடுக்கப்படும்போது - இன்னொருவர் அங்கு வந்து, 'அதோ அந்தக் கடையில் வேட்டி கிடைக்கும்' என்பாராம். நாம் சொல்லவில்லை, 'குமுதம் ரிப்போர்ட்டர்' சொல்லுகிறது.


பக்தி - நல்ல பிசினஸ்தானே!


‘குடி'யைக் கெடுக்கும்


நாள் ஒன்றுக்கு இந்தியாவில் மதுவால் 10 பேர் உயிரிழக்கிறார்கள்.


'குடி' குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்!


திருமாவின்


குமுறல்!


37 சதவிகிதம் வழக்குகள் 20 சதவிகித தாக்குதல்கள் பட்டியல் ஜாதி பெண்களுக்கு எதிராக அதிகரித்துள்ளன: - கிரைம் இந்தியா தகவல்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் குமுறுகிறார் என்றால், இதுதான் காரணம் - மனு விதைத்த விஷ விதை விருட்சமாக வளர்ந்துவிட்டதே!


No comments:

Post a Comment