மேடையில் வீசிய மெல்லிய ஆய்வுப் பூங்காற்று! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 12, 2020

மேடையில் வீசிய மெல்லிய ஆய்வுப் பூங்காற்று!


தமிழ்நாட்டில் வெளியாகும் திங்கள் இதழ் களில் தனிச் சிறப்பு வாய்ந்த ஏடு - எடுத்துக் காட்டான ஏடு - மொழி உணர்வு, இன உணர்வு, பகுத்தறிவு - அனைத்துக்கும் அறிவு ஊற்றாக மாதந்தோறும் வெளிவரும் ஏடு, வலிவும் பொலிவும் உள்ள ஏடு ஆசிரியர் ‘முகம்' மாமணி அவர்களால் நிறுவப்பட்டு, அவரது தொண்டைப் பகிர்ந்து, முனைவர் இளமாறன் அவர்களது சீரிய முயற்சியால் கரோனா கொடுந்தொற்று காலத் திலும் அறிவு நீர் பாய்ச்சும் தமிழ்க் கலங்கரை வெளிச்சம் ‘முகம்' ஏடாகும்.


பெரியவர் ‘முகம்' மாமணி அவர்கள் ‘விடுதலை'ப் பண்ணையில் விளைந்து இன்று பலருக்கும் பயன்படும் விதை நெல்லாகும்!


அவரது கிந்தனார் பதில்களைப் படித்துச் சுவைத்துப் பாராட்டாதவர்களே எவரும் இருக்க மாட்டார்கள்!


‘பிலிம் இண்டியா' என்ற பழைய பம்பாய் ஏட்டின் ஆசிரியர் பாபுராவ் பட்டேலின் பதில் களுக்காகவே அவ்வேட்டைப் பலரும் வாங்கிப் படிப்பார்கள் - அக்காலத்தில்.


அதற்கு இணையானவர் அல்ல; அதற்கும் மேலான ‘பதிலாளி' அய்யா முகம் மாமணி என்ற ‘கிந்தனார்!' - கலைவாணர் மீதுள்ள காதல் காரணமே இந்தப் புனை பெயர்!


இவ்விதழில் (நவம்பர் 2020) ஒரு வினா - விடை:


வினா: கிந்தனாரே, உங்களை 'விடுதலை' நாளேடு பாராட்டக் காரணம் என்னவோ?


விடை: அது தாய் - பிள்ளை உறவம்மா!


என்னே அருமையான உண்மையை அடிப் படையாகக் கொண்ட பதில்! (‘விடுதலை'யில் அச்சுக் கோர்த்த தொழிலாளியாக நுழைந்து, பிரபல எழுத்தாளர் - கருத்தாளராக ஒளி பாய்ச் சும் ஏட்டுலகக் கலங்கரை வெளிச்சமாகியவர் அய்யா முகம் மாமணி அவர்கள்.


அவ்வேட்டில்,


இத்திங்கள் (நவம்பர் 2020) முனைவர் திருமதி சரளா ராஜ கோபாலன் அவர்கள், ஆய் வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களது கடும் உழைப்புப் பற்றியும், அத்தகைய அறிஞர் களுக்குரிய முக்கியத்துவத்தைத் தமிழ் கூரும் நல்லுலகம் அளிக்கத் தவறியது பற்றியும் மிக அருமையாக எழுதியுள்ள ஒரு அரிய  செய்திக் கோவை இதோ:


ஆய்வுத் தேனீயின்


‘சமணமும் தமிழும்' நூல்


“எந்தப் பயனையும் எதிர்பாராமலும், எண் ணற்ற இடர்ப் பாடுகளுக்கு நடுவிலும், எவரின் துணையும் இல்லாமலும் ஆய்வறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் ஆற்றிய ஆய்வுப் பணி வியக்கத்தக்க பணியாகும். அவருடைய இந்தத் தொண்டினை மதித்துப் போற்றுவா ரில்லை.


‘சமணமும் தமிழும்' என்ற நூலை, நான் காண்டுக் காலம் கடும் உழைப்பிற்குப் பின்னால் அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிட அவருக்கு வசதியில்லை . வெளியிட யாரும் முன் வரவில்லை. இதைப்பற்றி அவரே மனம் நொந்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


‘நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி ஏன் என் ஆயுளை வீணாக் கினேன் என்று கருதி இதை வெளியிடாமலேயே இருந்து விட்டேன்.


அதற்கும் சில காரணங்கள் உண்டு. உண்மை யாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப் பாளிகளுக்குத் தமிழ் நாட்டில் இடமில்லை' என்று வருந்தி எழுதியிருந்தார்.


பத்தாண்டுகளுக்குப் பிறகு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இந்நூலை வெளியிட முன் வந்தது. நூலின் கையெழுத்துப் பிரதியைத் தேடிய போது தன் வாழ்நாளில் என்றும் அடையாத அதிர்ச்சியை அவர் அடைந்தார். கறையான்கள் அரித்துத் தின்று விட்டன.


பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தையைப் பறிகொடுத்த தாயின் வேதனையை அவர் அடைந்தார். ஆனாலும் சோர் வடையாமல் மீண்டும் அந்த நூலினை எழுதி முடித்தார். அவருடைய நூல்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இத்தகைய வேதனையான வரலாறு உண்டு.''


திராவிடர் இயக்கத்தவர் பெரிதும் போற்றிக் கொண்டாடி அவர்தம் கருத்து வளம், ஆய்வறிவு, தொண்டறம் பற்றி மேலும், முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிஞர்கள், ஆய்வுப் புலவர் கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், நாவலர் மு.சோமசுந்தர பாரதியார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பரிதிமாற் கலைஞர் போன்றவர்கள். தனித்தமிழ் செம்மொழி தலைமுறை தாண்டிய அடுத்த வரிசையில் வரும் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், புலவர் குழந்தை, மயிலை சீனி.வேங்கட சாமி, திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், பேராசிரியர் சி.இலக்கு வனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற பலரது ஆய்வுக் கருவூலங்களை, இளைய தலைமுறைக்குப் போய் சேரும் வண்ணம் பரப்பிட வேண்டும்.


No comments:

Post a Comment