எனக்கு மிகவும் பழகிய நறுமணம் இந்தப் பூமியில் வீசுகிறது-ஜோ பைடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

எனக்கு மிகவும் பழகிய நறுமணம் இந்தப் பூமியில் வீசுகிறது-ஜோ பைடன்


அமெரிக்கத் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிசுக்கு தமிழகத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், அதிபராகத் தேர்வுசெய்யப்பட் டிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்புகள் இருக்கின்றனவா?


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியரான டிம் வில் லாஸே - வில்ஸே, ஜோ பைடனின் முன் னோர்கள் சென்னையில் இருந்திருக்கலாம் என சுட்டிக்காட்டி gatewayhouse.in   இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதி யிருந்தார்.


ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அந்தக் கட்டுரையில் இருந்த தகவல்கள் பலரது கவனத்தைக் கவர்ந் திருக்கின்றன.


ஜோ பைடன் 2013 ஜூலை 24ஆம் தேதி துணை அதிபராக மும்பைக்கு வந் திருந்தபோது, தன்னுடைய முன்னோர்கள் அங்கு வசித்திருப்பதாகக் குறிப்பிட்டார். மும்பை மிரர் என்ற நண்பகல் ஆங்கில இதழில் அவர் கொடுத்த பேட்டியில் “எனக்கு மிகவும் பழகிய நறுமனம் இந்தப் பூமியில் வீசுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.


 இதற்குப் பிறகு 2015ல் வாஷிங்டன் டிசியில் பேசிய பைடன், தன்னுடைய "தாத் தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா வுக்கு தாத்தா" கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக பணியாற்றியிருப்பதாகத் தெரி வித்தார். தான் பல ஆண்டுகளுக்கு முன் பாக, 1972ல் செனட்டராகத் தேர்வுபெற்றதும் மும்பையிலிருந்து வந்த ஒரு கடித்தில் இந்தத் தகவல் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவித்தார்.


அந்தக் கடிதத்தை பைடன் என்பவர் தான் அனுப்பியிருந்தார் என்றும், ஆனால், தான் அது தொடர்பாக அந்த நேரத்தில் ஆர்வம் காட்டவில்லையென்றும் தெரி வித்தார். பைடன் என்ற பெயருடன் அய்ந்து பேர் மும்பையில் வசிப்பதாகவும் தெரி வித்தார். மேலும் கிழக்கிந்திய நிறுவனத்தில் கேப்டனாகப் பணியாற்றிய ஜார்ஜ் பைட னின் வழிவந்தவர் தான்" என்றும் தெரி வித்தார்.


இந்தத் தகவல்களை வைத்துத்தான் டிம் வில்லாஸே தனது கட்டுரையை எழுதி யிருக்கிறார். அவர் தரும் தகவல்களின்படி, ஜோ பைடன் குறிப்பிடுவதைப் போல இந் தியாவில் ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை; ஆனால், வில்லியம் ஹென்ஹி பைடன், க்ரிஸ்டோஃபர் பைடன் என இரண்டு பைடன்கள் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.


இந்த இருவரைப் பற்றியும் டிம் வில்லாஸே தரும் தகவல்கள் இதுதான்: வில்லியன் ஹென்றி பைடனும், க்ரிஸ் டோஃபர் பைடனும் சகோதரர்கள். தங்கள் பதின்ம வயதின் துவக்கத்திலேயே லண் டனிலிருந்து இந்தியா வரும் கப்பலில் மூன் றாம் நிலை, நான்காம் நிலைப் பணியா ளர்களாக வேலைக்குச் சேர்ந்தனர். அந்த காலகட்டத்தில் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாக இந்தியா வுக்கு வருவது மிக அபாயகரமான கப்பல் பயணம்தான் என்றாலும் முன்னேறுவதற்கு வாய்ப்பிருக்கும் என்பதால் பலரும் இதில் ஆர்வம் காட்டினர்.



வில்லியன் ஹென்றி பைடன் 'மிடாஸ்' என்ற கப்பலில் வேலைக்குச் சேர்ந்தார். பிறகு அவர் படிப்படியாக முன்னேறி 'அன்னா ராபர்ட்ஸன்', 'கேஞ்சஸ் அண்ட் தாலியா' ஆகிய கப்பல்களின் கேப்டனா னார். 1843ல் தனது 51வது வயதில் ரங்கூனில் அவர் காலமானார்.


இவருடைய மூத்த சகோதரனான க்ரிஸ்டோஃபர் பைடன், சென்னையிலேயே வசித்ததோடு நகரில் ஒரு பிரபலமான மனிதராகவும் விளங்கினார். 1807ல் ராயல் ஜார்ஜ் என்ற கப்பலில் கீழ் நிலைப் பணியாளராக வேலைக்குச் சேர்ந்தார் க்ரிஸ்டோஃபர். 1818ல் அவர் முதன்மைப் பணியாளராக உயர்ந்தார். 1821ல் 'பிரின்சஸ் சார்லெட் ஆஃப் வேல்ஸ்' கப்பலின் கேப்டனானார் க்ரிஸ்டோஃபர். பிறகு புதிய 'ராயல் ஜார்ஜ்' கப்பலின் கேப்டனானார். 1819ல் ஹரியர் ஃப்ரீத் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் பிறந்தனர்.


1830ல் 'பிரின்சஸ் சார்லெட்' கப்பலில் இருந்து ஓய்வுபெற்று லண்டனுக்கு அருகில் உள்ள ப்ளாக்ஹீத்தில் வசித்தார். புத்தகம் ஒன்றையும் எழுதினார். ஆனால், இவ் வளவு இளம் வயதில் (அப்போது அவருக்கு 41 வயது) எதற்கு ஓய்வுபெற வேண்டுமென நினைத்த க்ரிஸ்டோர், 'விக்டரி' என்ற கப்பலை வாங்கி, கொழும்புவுக்கும் பம் பாய்க்கும் பயணங்களை மேற்கொண்டார்.


'விக்டரி' கப்பல் அவருக்கு லாபத்தைத் தந்ததா என்பது தெரியவில்லை. இதன் பிறகு, 1839ல் 'மார்க்வி கேம்டன்' என்ற கப்ப லில் தன் மனைவி, மகள்களுடன் சென் னைக்குப் புறப்பட்டார். அவர் இந்தியாவுக்கு வரும் வழியில் கப்பலில் நோய்வாய்ப்பட்ட அவரது ஒரு மகள் உயிரிழந்தார். சென்னை யில் கப்பல் சரக்கு கிட்டங்கியின் நிர்வாகி யாக வேலைக்கும் சேர்ந்தார் க்ரிஸ்டோஃ பர்.


இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் சென் னையில் வசித்த க்ரிஸ்டோஃபர் பைடன், கடற்பயணங்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆலோசனைகளை முன் வைத்து வந்தார். விதவைகளுக்கான அறக் கட்டளைகள், உயிரிழந்த கப்பல் பணியா ளர்களின் ஆதரவற்ற உறவினர்களுக் கான அறக்கட்டளைகளில் ஈடுபாடுகாட் டினார்.


1846ல் அவரது மகன் ஹொராஷியோ வும் சென்னைக்கு வந்தார். மெட்ராஸ் ஆர்ட்டிலரியில் இணைந்த அவர் அதன் கர்னலாகவும் பதவிவகித்தார். 1858 பிப்ர வரி 25ஆம் தேதி க்ரிஸ்டோஃபர் பைடன் சென்னையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பேராலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவாக கற்பலகை ஒன்றும் அந்தப் பேராலயத் தினுள் இருக்கிறது.


புனித ஜார்ஜ் பேராலய பதிவேட்டில் அவர் ஆஸ்த்மாவின் காரணமாக உயிரிழந் ததாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.


அவரது மறைவுக்குப் பிறகு லண்டன் திரும்பிய அவரது மனைவி 1880வரை உயிரோடு இருந்தார்.  அவரது ஆவணங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வைக் கப்பட்டுள்ளன. க்ரிஸ்டோஃபருக்கு இந் தியாவில் வேறு மனைவிகள் இருந்ததாகத் தெரியவில்லை.


ஜோ பைடன் குறிப்பிடுவதைப் போல ஜார்ஜ் பைடன் என்ற பெயரில் இங்கே யாரும் இருக்கவில்லை. "ஜோ பைடனுக்கு இந்தியாவில் முன்னோர் இருந்திருந்தால் அது க்ரிஸ்டோஃபர் பைடனாகத்தான் இருக்க வேண்டும்" என்று அந்தக் கட்டு ரையில் குறிப்பிட்டிருக்கிறார் டிம் வில் லாஸே.


இது தொடர்பாக லண்டனில் உள்ள டிம் வில்லாஸேவை, பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் ஏன் க்ரிஸ்டோஃபரைப் பற்றி எழுதினேன் என்பதை விளக்கினார்.


நான்  சென்னைக்குச் சென்ற போது ஜார்ஜ் பேராலயத்தில் இருந்த அந்த நினைவுப் பலகையை புகைப்படம் எடுத் தேன்.  அவருக்கும் ஜோ பைடனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஜோ பைடனின் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள் கிழக்கிந்தியக் கம்பனியில் கேப் டனாக இருந்திருக்கிறார்கள் என்று அவரே சொல்லியிருப்பது தெரியவந்தது. ஆகவே தொடர்ந்து ஆராயலாம் என முடிவு செய்தேன். பல புத்தகங்கள், ஆவணங் களை படித்தபோது வில்லியம் பைடன், க்ரிஸ்டோஃபர் பைடன் என இரண்டு பேர்தான் இந்த வரையறைக்குள் பொருந் தினார்கள். க்ரிஸ்டோஃபர் பைடனைப் பற்றிப் படித்தபோது அவர் ஒரு குறிப் பிடத்தக்க மனிதர் எனப் புரிந்தது. அவருக்கு இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் பெரும் மரியாதை இருப்பது தெரிந்தது" என்கிறார் டிம் வில்லாஸே.


க்ரிஸ்டோபர் குறித்து ஜோ பைடன் நிச்சயம் பெருமைகொள்ள முடியும் என் கிறார் அவர். "க்ரிஸ்டோஃபரின் புத்தகத் தைப் படித்தால், அதில் மனித நேயத்தின் கீற்றுகள் பரவியிருப்பது புரியும். மோசமான அரசியல் அமைப்பிலும் நல்லவர்கள் இருக்க முடியும் என்பதைத்தான் இது காட் டுகிறது. ஜோ பைடனுக்கும் க்ரிஸ்டோப ருக்கும் இடையில் எவ்விதமான குடும்ப உறவு இருந்தாலும், அது குறித்து நிச்சயம் அவர் பெருமிதம் கொள்ள முடியும்" என்கிறார் டிம் வில்லாஸே.


- நன்றி: பிபிசி தமிழ் இணையதளம்


No comments:

Post a Comment