வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரி யர் அய்யா அவர்களுக்கு வணக்கம். தங்களின் நலம் காண விழைகிறேன். நேற்றைய ‘விடுதலை' வாயிலாக ‘கழகமும் - கடமையும் பிரிக்கப்பட முடியாதவை' தங்களின் அறிக்கையைப் படித்து மெய்சிலிர்த்துப் போனோம். அதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சை வருடுகிறது. எங்களுக்கு வேண்டுகோள் - இயக்க வளர்ச்சி - எதிர்காலம் - அன்புக் கட்டளை. இது தாங்கள் சொன்னது போல ஒரு வகை தண்டனை தான்.
ஆனாலும் சுகமான தண்டனை. தண்டனை முடித்து வெளியே வரும் மற்றவர்களுக்கு அது ஒரு பாடம் - படிப்பினை. ஆனால் இக் கரோனா கால தண்டனை முடித்து தாங்கள் வெளியே வரும்போது நம் இயக்கத்திற்கும் - நம் தமிழ் கூறும் நல்லுலகிற்கும் கிடைக்கப் போகும் பயன் எண்ணற்றது - எல்லையில்லாதது என்பதை உணரக் காத்திருக்கிறோம்.
8 மாத காலமாக தாங்கள் வழங்கிய எண் ணற்ற அறிவுரைகள் எங்களுக்கு நலமான வாழ்க்கையைத் தந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக சேலத்தில் நடைபெற்ற மணவிழாவிற்கு சென்று விட்டு பேருந்து ஏறும் நிலையில் செல் போன் மணி ஒலித்தவுடன் தங்களின் தொடர்பு - வழக்கமாக ஏற்படும் படபடப்பு பேருந்தை விட்டு இறங்கி பேச தொடங்கி தென் மாவட்ட பயணம் குறித்து நான் சொல்ல குமரி - தூத்துக்குடி - நெல்லை - தென்காசி - விருதுநகர் - மதுரை புறநகர் - தேனி - பழனி - திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர்களின் தோழர்களின் ஒவ்வொருவரின் நலன் குறித்து ஆவலுடன் கேட்டது உங்கள் உள்ளக் கிடக்கையில் ஆழ்ந்த எண்ணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை உணர முடிந்தது. மதுரைக்குச் சென்று தோழர்களிடம் உரையாடி தாங்கள் பேசியதை சொன்னபோது மகிழ்ந்து போனார்கள்.
‘விடுதலை' சந்தாக்களை முடித்து டிசம்பர் 2 சென்னை வந்து ஒப்படைத்து விட்டு, எங்காவது ஒரு மூலையில் இருந்து தங்கள் முகத்தை ஒரு நிமிடம் பார்க்க சமூக இடைவெளிக்கு அப்பால் நின்று ஒரே ஒரு முறை பார்த்து விட்டால் அந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எப்படியாவது விளம்பரமில்லாமல் தங்களை பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்த நிலையில்தான் தங்களின் விடுதலை அறிக்கை மேன்மேலும் உணர்வுகளை தூண்டி விட்டது. எவ்வளவு பெரிய உண்மை - தலைவர் களும் தொண்டர்களும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பவர்கள்; அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இயக்கம் - நம் இயக்கம் என்று தாங்கள் சொன் னது மீண்டும் மீண்டும் எங்கள் காதுகளில் ஒலிக்கிறது.
என்றைக்குச் சந்திப்போம் தங்களை,
கண்கள் பணிக்கின்றன.
உதடுகள் துடிக்கின்றன.
வார்த்தைகள் வர மறுக்கின்றன.
தங்கள் கட்டளையினை செய்து முடிப்போம்,
என்றும் தங்களின் உண்மையுள்ள
வே.செல்வம்
அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்
மதுரை.
No comments:
Post a Comment