‘வேத வெறி இந்தியா' நூலுக்குத் தடை - நூலாசிரியர்மீது கிரிமினல் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

‘வேத வெறி இந்தியா' நூலுக்குத் தடை - நூலாசிரியர்மீது கிரிமினல் வழக்கு

தமிழக அரசு ஆரியத்தின் குரலாக மாறலாமா?


வழக்கு நடந்தால் பல உண்மைகள் மக்கள் மன்றத்திற்கு வெளிச்சத்திற்கு வரும்!



தமிழ் இன உணர்வாளர் பொழிலன் எழுதிய ‘வேத வெறி இந்தியா' நூலுக்குத் தடையும், நூலாசிரியர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது; வழக்கைத் திரும்பப் பெறுக என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:


தமிழ் இன உணர்வாளர் மானமிகு திரு.பொழிலன் அவர்கள் எழுதி, 2018 இல் வெளிவந்த  ‘வேத வெறி இந்தியா' என்ற நூலைத் தடை செய்து, அதற்காக அவர்மீது பல கிரிமினல் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



அந்நூலில் எழுதப்பட்டுள்ள கருத்துகள் எல்லாம் பல அறிஞர்களின் நூல்களிலிருந்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டப்பட்ட ஒரு தொகுப்புப் போன்றதே, அந்நூல்!


வேதங்கள் குறித்து இரு சாராரின் (ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்களின்) கருத்துக்கோவை போல் உள்ள அந்நூல்பற்றிய தமிழக அரசின் நடவடிக்கை ஆரியத்தை திருப்தி செய்யும் வகையில் அமைந்துள்ள ஒன்றாகும்.


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமை கருத்துரிமை. அதைப் பறிப்பது ஒரு ஜனநாயக அரசிற்கு அழகல்ல.


சட்டப் போராட்டத்தில் நிச்சயம் அரசு தோற்கும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பல உள்ளன என்பதை ஏனோ மறந்து, எதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாக தமிழக அ.தி.மு.க. அரசு ஆரியத்தின் குரலாக மாறலாமா?


அடுத்து அண்ணாவின் ‘ஆரிய மாயை' நூலை யும் தடை செய்வார்களா? அண்ணா பெயரில் நடக்கும் ஒரு ஆட்சியின் தகுதி இதுதானா?


உடனே இந்த வழக்கைத் திரும்பப் பெறுவது தான் புத்திசாலித்தனம்.


நீதிமன்றங்களில் வழக்கு நடந்தால், வேதங்கள் பற்றிய பல உண்மைகள் மக்கள் மன்றத்திற்கு வெளிச்சத்திற்கு வருவது உறுதி!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


28.11.2020


No comments:

Post a Comment