நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல இளந்தென்றல் - விஷ்ணுமகேஸ்வரன் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காணொலி வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

நெய்வேலி ஆர்.பி.எஸ். இல்ல இளந்தென்றல் - விஷ்ணுமகேஸ்வரன் மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் காணொலி வாழ்த்துரை


வடலூர், நவ. 28- கடலூர் மண்டல கழகத் தலைவரும், நெய்வேலி தொழில் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலா ளருமான ஆர்.பி.எஸ். குழுமத் தொழில் வர்த்தக நிறுவனங் களின் உரிமையாளர் (ஆர்.பி.எஸ்.)  அரங்க. பன்னீர்செல்வம் - தங்கம் ஆகியோரின் மகள் இளந்தென்றலுக்கும், திண்டி வனம் தாகூர் கல்விக்குழுமத்தைச் சார்ந்த விஷ்ணுமகேஸ் வரனுக்கும் வாழ்க்கை துணைநல ஒப்பந்த விழா 26.11.2020 வியாழன் காலை 9.00 மணிக்கு வடலூர் மங்கையர்க்கரசி மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது.


மணவிழாவினை காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். மணவிழாவிற்கு கழக செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்து, மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினை ஏற்கச்செய்து, இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.


மணவிழாவிற்கு முன்னிலை வகித்த மணமகன் குடும்பத் தைச் சார்ந்த பிரபல கல்வித் தொண்டரச் செம்மலும், திண்டி வனம் தாகூர் கல்விக்குழுமத்தின் நிறுவனர், தலைவருமான செவாலியர் சர் பேராசிரியர் கே.சி. இராஜாபாதர் அருமையான தொரு வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகி கள், கல்வியாளர்கள், தோழமைக் கட்சியின் பொறுப்பாளர்கள் பலரும் மணவிழா வாழத்துரை வழங்கினர். நிகழ்ச்சியினை முனைவர் த. ஜெயக்குமார் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். முன்னதாக 25.11.2020 புதன் மாலை நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்வில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான அறிவியல் விளக்க நிகழ்ச்சியினை ஜெயங் கொண்டம் கலைவாணன் குழவினர் சிறப்பாக செய்து காண்பித்தனர்.


வாழ்த்துரை வழங்கிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமது வாழ்த்துரை யில் குறிப்பிட்டதாவது:


நண்பர் செவாலியர் பேராசிரியர் டாக்டர் கே.சி.இராஜா பாதர் அவர்களே! இந்த இயக்கமான நம்முடைய திராவிடர் கழகத்தினுடைய முக்கியப் பொறுப்பாளர்களே! மணமக்களது பெற்றோர்களான அரங்க. பன்னீர்செல்வம் - தங்கம் அவர் களே! அதேபோல கே.சி.தினகரன்-போதி அவர்களே! மற்றும் உற்றார் உறவினர்களே! கழகக் குடும்பத்தவர்களே! பகுத்தறி வாளர்களே! வணகப் பிரமுகர்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.


ஆர்.பி.எஸ். என்று நாங்கள் அன்போடு அழைக்கக்கூடிய அரங்க. பன்னீர் செல்வம் அவர்கள் திராவிடர் கழகத்தினு டைய கடலூர் மண்டலத் தலைவர், இயக்கத்தினுடைய முக்கியப் பொறுப்பாளர்களிலே அடக்கமும், ஆழமும், கட்டுப்பாடும், மிகுந்த பாச உணர்வும் கொண்ட அருமையான ஒரு நண்பர். அவருடைய குடும்பம் திராவிடர் கழகக் குடும்பம் மட்டுமல்ல! பெரியார் குடும்பம் மட்டுமல்ல! அது எங்கள் குடும்பம் என்ற அந்த உரிமையோடு நாங்கள் பழகக்கூடிய மிக நெருக்கமானவர்கள்.


இந்தக் கரோனா தொற்று இல்லாதிருக்குமேயானால், நேரிடையாகவே நான் வந்து தலைமையேற்று இந்த விழாவினை நடத்தியிருக்கக்கூடிய வாய்ப்பை நிச்சயம் பெற்றிருப்பேன்.என்றாலும், ஆர்.பி.எஸ். அவர்கள் மணவிழா எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் உங்களுடைய உடல் நலமும் என்று அவர்கள் எங்களிடத்திலே எடுத்துச் சொல்லி, நீங்கள் ஒரு வாழ்த்துச் செய்தியை காணொலி மூலமாக அனுப்புங்கள், அதைப் பயன்படுத்திக்கொள்கிறேன். மற்றபடி உங்களை தொந்தரவு செய்ய விருப்பமில்லை என்று மிகுந்த கனிவோடும், அன்போடும் எடுத்துச்சொன்னார்கள். அதுவும் அவர்களைப் பொறுத்தவரையிலே எந்தப் பணியினை நாங்கள் இயக்கத்திலே கொடுத்தாலும், அந்தப் பணியினை மனம் உவந்து ஏற்று முழுமையாக, தெளிவாக, கட்டுப் பாடாக, வெற்றிக்கரமாக செய்யக்கூடிய ஒரு எடுத்துக்காட் டான இயக்கச் செம்மல் ஆர்.பி.எஸ் அவர்கள் ஆவார்கள்.


அவர்களுடைய குடும்பத்தில் இருக்க கூடிய இந்த செல் விக்கு மணவிழா என்று சொன்னால், எங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய மணவாழ்வு வருகின்ற நேரத்திலே, அதை நேரில் பார்த்து மகிழக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இன்றைக்கு இல்லையென்றாலும், காணொலி அதற்கு நிச்சயமாக பெருமளவிற்கு உதவி செய்கின்றது. அந்த வகையிலே இரண்டு நல்ல குடும்பங்கள் இணைகின்றன. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களுடைய நெறியை சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று பற்றி, அதன் அடிப்படையிலேயே வாழ்ந்து, அதன் மூலமாக தனது அயராத உழைப்பு, தணியாத வற்றாத தொண்டறம், இவைகளோடு இணைத்துக்கொண்டு, நண்பர்கள் அத்துணை யர்களையும் ஒரு பெரிய வட்டமாக ஆக்கிக் கொண்டு வளர்ந்துகொண்டிருப்பவர் நம்முடைய அரங்க.பன்னீர் செல்வம் அவர்கள்.


எனவே, இந்தக் குடும்பத்தோடு இன்னொரு குடும்பம் அதுவும் இராஜாபாதர் அவர்களுடைய கல்விக்குடும்பத்து மணமகன் அவர்கள் இங்கே சிறப்பாக தேர்வு செய்யப் பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தகுந்த ஒன்று. மணமக்களைப் பொருத்தவரையிலே, சிறப்பான வகையிலே ஆர்.பி.எஸ். இளந்தென்றல் ஆனாலும், கே.சி.டி.விஷ்ணுமகேஸ்வரன் ஆனாலும், இருவருமே படித்த பட்டதாரிகள், பொறுப் பாளர்கள், பணியாற்றக்கூடியவர்கள். இந்த நிலையிலே அவர்களுக்கு ஒன்றும் பெரிய அறிவுரை தேவையில்லை. ஆனால், இந்த மணவிழா என்பது, இப்போது காணொலி மூலமாக நடைபெறுகிறது என்று சொன்னால், இதை எண்பது ஆண்டுகளுக்கு முன்னாலேயே முன்னோக்கோடு சொன்ன வர் தந்தைபெரியார் அவர்கள்.


‘இனி வரும் உலகம்' என்ற அந்த சிறிய நூலிலே, இதே போன்று ஒரு திருமண விழா செய்யாறு பக்கத்திலுள்ள திருவத்திபுரத்திலே அறிஞர் அண்ணா அவர்களோடு சென்று, பெரியார் தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருக்கிற போது ஆற்றிய ஒரு சொற்பொழிவுதான், அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்று, எழுதப்பட்டு, பின் அது விரிவாக்கப்பட்டு, ‘இனி வரும் உலகம்' என்ற புத்தகமாக வந்து பல இலட்சம் பிரதிகள் இதுவரை பரவியிருக்கின்றன. அதிலே தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள். இனி வரும் உலகத்திலே காணொலி அதனுடைய வேலையைச் செய்யும் என்று. ஒவ்வொருவருடைய சட்டைப்பையிலும் கைப்பேசி இருக்கும் என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆள் உருவம் காட்டி பேசக்கூடிய நிலையும் ஏற்படும். மனிதன் தானே பார்க்கக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும், என்றெல்லாம் தந்தை பெரியாருடைய, பகுத்தறிவு பகலவனுடைய ஆழ்ந்த தொலைநோக்கு, முன்னோக்கு விரிவாகச் சொல்லப்பட்டு உள்ளது.


அது இந்தகரோனா தொற்று காலத்திலே எப்படியெல்லாம் எல்லோருக்கும் பயன்படுகிறது என்று தெளிவாகிவிட்டது. வகுப்புகளோ காணொலி, அதேபோல அரசுகளுடைய நடைமுறையோ காணொலி, இப்படி எங்கு பார்த்தாலும் காணொலிப் புரட்சி ஒரு பக்கத்திலே நடந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால், இது அறிவியல் தந்தது. எதற்காக சுட்டிக்காட்டுகிறோம். அறிவியலைக் கண்டு அதை நாம் ஏற்றால்தான் வளர்ச்சி அடைய முடியும். மூடநம்பிக்கைகள் தன்னம்பிக்கைகளை அழித்துவிடும். இன்றைக்கு கூட எவ்வளவுக்கெவ்வளவு மூடநம்பிக்கையை விட்டொழிக்க முடியுமோ அவ்வளவுக்களவு நாம் முன்னேற முடியும். இன்றைக்கு மனிதனின் சராசரி வயது எண்பதைத் தாண்டிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதற்கு என்ன காரணம்? இதற்கு முன்னாலே, ஒரு நூற்றாண்டுக்கு முன் னால் அது இருபத்தைந்தைக்கூட எட்டிப்பார்க்க முடியாது. அதற்கு என்ன காரணம்? மூடநம்பிக்கைதான்.


நோய்கள் என்பது ஏதோ பாவத்தினால் ஏற்படுவது என்றெல்லாம் ஒரு காலத்திலே கருதப்பட்டது. இன்றைக்கு எத்தகைய நோயாக இருந்தாலும், இதற்கு தடுப்பூசி கண்டுப் பிடிக்கப்படலாம், தடுக்காலம், வரும்முன் காக்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அறிவியல் வளர்ந்திருக்கிறது.


எனவேதான், இதுபோன்ற மணவிழக்கள் என்றுசொல்லும் போது, அந்த மணவிழாக்கள் கூட மிகப்பெரிய ஆடம்பரமாக நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள். எளிமையாக, சிக்கனமாக நடத்திக் கொள்ளுங்கள். அந்த செலவை மிச்சப்படுத்தி, மணமக்களு டைய எதிர்காலத்திற்குப் பயன்படக்கூடிய, அவர்களுடைய வாழ்வை வளமாக்கிக்கொள்ளக் கூடிய வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று அழகாக தந்தை பெரியார் அவர்கள் அற்புதமான வாழ்வியலை அமைத்துக் கொள்ளச் சொன்னார். அதனால்தான் ‘சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு' என்று பாராட்டப்படுகின்றது, பின்பற்றப்படுகின்றது. அந்த நிலையிலே, மிக அருமையான, ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையை நம்முடைய அரங்க.பன்னீர்செல்வம் அவர் களுடைய குடும்பத்தினர் பின்பற்றியிருக்கிறார்கள். அதனால் அவர்கள் வளர்ந்தோங்கி இருக்கிறார்கள். இந்தக் கொள் கையை ஏற்றதினால் அவர்களுக்கு வளர்ச்சி ஏற்பட்டிருக் கிறதே தவிர, தளர்ச்சி ஏற்பட்டது கிடையாது!. அதைத்தான் மற்றவர்கள் வைதீக உணர்வுள்ளவர்கள் இன்னமும் பழமையை விடமுடியாதவர்களாக உள்ளனர் என்பதனை இங்கே இருக்கக்கூடியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


அந்த வகையில், இந்த மணமக்கள் இருவரும் அறி வார்ந்த மணமக்கள். கல்வியை, படிப்பை, தங்களுடைய அறி வைப் பக்குவப்படுத்தக்கூடிய கருவியாக பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள். எனவே, இந்த இருவரும் உற்ற நண்பர்களாக வாழவேண்டும். ஒருவர் எஜமானரும், இன் னொருவர் அடிமையானவர் என்ற தத்துவம் சுயமரியாதை திருமணத்திலே கிடையாது. இருவருடைய மனமும் ஒத்துப் போக வேண்டும். புரட்சிக்கவிஞர் சொன்னதைப்போல, ‘ஒருமனதாயினர் தோழி! திருமண மக்கள் நன்கு வாழி!!' என்று சொல்லக்கூடிய அந்த அற்புதமான வரிகளுக்கு இணங்க உங்கள் வாழக்கையை அமைத்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையிலே என்றைக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து பழகக்கூடிய தன்மையை உருவாக்கிக் கொண்டால், வெற்றி எப்போதும் உங்கள் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும். அதுதான் மிக முக்கியமானது.


எங்கே தன்முனைப்பு இருக்கின்றதோ, அங்கே வாழ்க்கை யினுடைய இணைப்பு குறைவு. அந்த தன்முனைப்புக்கு இடம் தராதீர்கள். எளிமையாக வாழுங்கள். எவ்வளவு வசதி படைத்திருந்தாலும், அவர்களிடத்திலே எளிமை இருக்கும் போதுதான், அந்த எளிமை ஏற்றம் பெருகின்றது. அதே போலத்தான் சிக்கனமாக வாழ்வதன் மூலம் தான் நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்படுகிறது யாருக்கும் நாம் தலை வணங்க வேண்டிய அவசியமில்லை. எவரிடமும் நாம் கைநீட்டவேண்டிய அவசியமில்லை, கெஞ்சவேண்டிய அவசியமில்லை. காரணம் என்னுடைய தன்னறிவு, என்னுடைய தன்னம்பிக்கை, என்ற அளவிற்கு மிகப்பெரிய தன்னார்வத்தை வளர்த்துக்கொள்ளக்கூடிய அந்த முயற் சியை நீங்கள் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.


அருமை மணமக்களே! மற்றபடி இது ஒன்றும் அறிவுரை அல்ல. பொதுவாக நான் எந்த மணவிழாவிலும் மணமக் களுக்கு அறிவுரை கூறுவது இல்லை. தேவைப்படாத காரணத்தினால். அதே நேரத்தில் ஒன்றை உங்களுக்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். உங்களுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தியாகங்கள் செய்தவர்கள் உங்களுடைய பெற்றோர்கள். எனவே நீங்கள் பெரிய நிலைக்கு உயர்வீர்கள் - உயர்ந்தாலும் ஒன்றை மறக்காதீர்கள். உங்கள் பெற்றோர்களிடத்தில் மரியாதை காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், பாசம் காட்டுங்கள். அவர்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். உங்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. எனவேதான் பாசத்தை மறக்காமல், அன்பை மறக்காமல், நன்றியை மறக்காமல் - துறக்காமல் நீங்கள் என்றென்றைக்கும் அதே உணர்வோடு இருந்தால், அதைவிட அவர்களுக்கு நீங்கள் செய்யவேண்டிய கைமாறு வேறு கிடையாது.


அந்த வகையில் அருமை மணமக்களே! சிறப்பாக வாழுங்கள். பகுத்தறிவை பயன்படுத்தி வாழுங்கள். பகுத்தறிவு உங்களைப் பாதுகாக்கும். உங்களை மேலும் முன்னேற்ற அது பெரிய அரிய துணையாக இருக்க வேண்டும், இருக்கும் என்ற காரணத்தாலே இந்த மணவிழாவிலே நான் நேரில் வந்து வாழ்த்தியதைப்போல, நீங்கள் எல்லோரும் உணரவேண்டும். இந்த வகையிலே இந்த மணமக்கள் எல்லா வளங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும். தந்தைபெரியாருடைய நெறி என்பதிருக்கிறதே, அது மக்களை வாழவைக்கக்கூடியது. எல்லோரையும் ஒருமைப்படுத்தக் கூடியது. ஜாதி - மதம்-கடவுள், மூடநம்பிக்கை என்பதாலே மக்கள் பிளவுபட்டிருக் கக்கூடாது ஒன்றுபட்ட ஒரு சமுதாயமாக இருக்க வேண்டும். இதற்கு முன்னாலே இருந்தவர்கள் இல்லறம், அதற்கடுத்து துறவறம் என்றார்கள். அது நமக்கு முக்கியமல்ல. அதைவிட இல்லறம் அதற்குமேலே சிறப்பானதொரு அறம், இல்லறத்திலிருந்துகொண்டே செய்யலாம் அதுதான் தொண்டறம் என்பது.


எனவே தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள். மற்றவர் களுக்காக நீங்களும் வாழுங்கள். உங்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் உதவுங்கள். காரணம் நாம் சமுதா யத்திலே வாழக்கூடியவர்கள். தந்தை பெரியார் அழகாகச் சொன்னார்கள். மனிதன் தானாகவும் பிறக்க வில்லை. தனக்காகவும் பிறக்கவில்லை என்று சொன்னார்கள். அதை நன்றாக மனதில் வைத்துக்கொண்டு என்றைக்கும், சமூகத் தொண்டறச் செம்மல்களாக வாழுங்கள் என்று கூறி இந்த மணமக்களை வாழ்த்துவதோடு, வந்திருப்பவர்களையும் அன்போடு வரவேற்பதோடு, இந்த மணவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பவர்களையும், இந்த மணமுறைக்கு ஒப்புக்கொண்ட நம்முடைய ஆர்.பி.எஸ். அவர்களுடைய சம்பந்தி வீட்டார்கள் தினகரன் குடும்பத்திருக்கும் இயக்கத் தின் சார்பில் பாராட்டு தெரிவித்து மகிழ்கின்றேன். வாழ்க பெரியார்! வாழ்க மணமக்கள் ! வாழ்க பகுத்தறிவு! நன்றி. வணக்கம். இவ்வாறு உரையாற்றினார்.


No comments:

Post a Comment