ரிசர்வ் வங்கி
புதுடில்லி, நவ.13 இந்தியப் பொருளாதாரம் செப்டம்பர் - நவம்பர் காலாண்டிலும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும், மைனஸ் 8.6 சதவிகிதமாக இந்த வீழ்ச்சி இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், இந்த தொடர் வீழ்ச்சியின்மூலம், இந்தியப் பொருளாதாரமானது, வரலாற்றில் முதல்முறையாக, பொருளாதார மந்த நிலைக்குள் (Recession) நுழைவதாகவும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம் முதலே இந்தியாவின் பொருளாதாரம் சரியத் துவங்கி விட்டது. ஜிஎஸ்டி அமலாக்கம் அதனை அதிகப்படுத்தியது. கரோனா காலப் பொதுமுடக்கம், பொரு ளாதாரத்தை படுமோசமான நிலைக்குத் தள்ளிவிட்டது.அந்த வகையில், 2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 23.9 சத விகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதை மத்திய அரசின் புள்ளியியல் அலுவலகமே அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது. கடந்த 1996 ஆம் ஆண்டிற்குப்பின், இதுபோன்றதொரு மோசமான பாதிப்பு ஏற்படுவது, இதுதான் முதல் முறை என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. கரோனா பொதுமுடக்க காலத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் இந் தியாதான் அதிகபட்சமாக ‘மைனஸ் 23.9 சதவிகிதம்’ என்ற அளவிற்கு ஜிடிபி வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெளியான பல்வேறு ஜிடிபி கணிப்புகள், இந்த ஆண்டு முழுமையுமே இந்தியப் பொருளாதாரம் மீட்சி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறின. நடப்பு 2020-2021 நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரம் மைனஸ் 10.5 சதவிகிதமாக வீழ்ச்சி அடையும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ (Fitch Ratings) நிறுவனமும், 11.8 சதவிகிதம் வீழ்ச்சி அடையும் என்று ‘இந்தியா ரேட் டிங்ஸ்’ (India Ratings) நிறுவனமும் கணிப்பு களை வெளியிட்டன.
இதேபோல, ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ‘கிரிசில்’, எஸ் & பி குளோபல் ரேட்டிங்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் 9 சதவிகிதம் என்றும்,‘மூடிஸ்’ நிறுவனம் 11.5 சதவிகிதம்- யுபிஎஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் 8.6 சதவிகிதம் என்றும் ஜிடிபி வீழ்ச்சியைக் கணித்தன. இந்நிலையில்தான், நடப்பு நிதியாண்டின், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 8.6 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது மாதாந்திர (Nowcast) அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதாரம் 2 காலாண்டுகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால், அந்த நாடு, பொருளாதார மந்த நிலைக்குள் (Recession) நுழைந்துள்ளதாக பொருள் கொள்ளப்படும்.
அந்த வகையில், ஏப்ரல் - ஜூன் காலாண் டில் மைனஸ் 23.9 சதவிகிதம், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மைனஸ் 8.6 சதவிகிதம் என்று தொடர் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதால், இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குள் நுழைந்திருப்பதாக பொரு ளாதார வல்லுநர் பங்கஜ் குமார், தனது கட்டுரை ஒன்றில் மதிப்பிட்டுள்ளார். “நடப்பு 2020 - 2021 நிதியாண்டின் முதல் பாதியில் இந்தியா ஒரு தொழில்நுட்ப மந்த நிலையை அதன் வரலாற்றில் முதல் முறையாக (HistoricTechnical Recession) அடைய உள்ளது” என்று பங்கஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தையே வேறு பல பொருளாதார அறிஞர்களும் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதார வளர்ச்சிகுறித்து, ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை ஆய்வுக் குழுவின் மைக்கேல் பத்ரா உடன் பல முன்னணி பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையிலான செப்டம்பர் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கை மற்றும் அரசின் ஒப்புதல் பெற்ற தரவுகள் நவம்பர் 27 அன்று வெளியாகின்றன. எனினும், அது தொடர்பான ஆய்வு உண்மைகள் முன்கூட்டியே வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment