போலி விஞ்ஞானம் 'அற்புத' மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கப் போராளி
ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல் சூளுரை
உலகப் புகழ் பெற்ற 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச் சிகளை நடத்தி வந்த மேடைக் கலைஞர் ஜேம்ஸ் ராண்டி (James Randi) கடந்த அக்டோபர் 20 அன்று அமெரிக்காவில் காலமானார். இயல்பை மீறி நடக்கும் செயல்களை தமது 'அதீத சக்தியால்' நடக்கிறது எனப் பெருமை பேசும் மந்திரவாதிகளை (magician) தோலுரித்துக் காட்டும் வகையில் 'இதில் மந்திரம் எதுவும் இல்லை; வெறும் தந்திரம்தான் - வித்தை காட்டும் கை சாதுரியம்தான்; பார்ப்பவர்களை மயக்கிடும் காட்சித் தந்திரம்தான்' என தனது
தொடர் நிகழ்ச்சிகளால் உலகிற்கு உண்மைகளை உணர்த்திய உன்னதக் கலைஞர் ஜேம்ஸ் ராண்டி ஆவார்.
கனடா நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று, ‘உண்மை விளக்கங்களை' மக்களுக்குப் பொது வெளியில் உரைத்திடும் - காட்டிடும் - உணர்த்திடும் சேவையினைப் பிரச்சாரமாகவே தனது வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார். மந்திரவாதிக ளும், 'அற்புதம்' விளைவிப்பதாகக் கூறிடும் மதவாதி களும் தங்களது செப்படி வித்தைகளுக்கு ஒரு 'புனிதத் தன்மை', 'கடவுளின் அனுகிரகம்' உள்ளது என ஏமாற்றி வரும் வேளையில், இப்படிப்பட்ட அதீத செயல்களுக்கும் 'கடவுளுக்கும்' எந்தத் தொடர்பும் இல்லை என ‘உண்மை விளக்கம்' பணியின் மூலம் பல்வேறு தளங்களில் ஜேம்ஸ் ராண்டி நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டி வந்தார்.
'மந்திர சக்தியால்' நடத்தப்படுவதாகக் கூறப்படும் செயல்களை மறுத்து நிகழ்ச்சி நடத்தியதால் 'நான் மந்திரவாதி அல்ல (I am not a magician) எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியவர். அந்த வகை யான அதீத செயல்களை ஆய்வு நோக்கில் அணு கிடும் அய்யுறவாளராக (Skeptic) திகழ்ந்தவர் ஜேம்ஸ் ராண்டி. மானுடப் பற்றாளரான ஜேம்ஸ் ராண்டி மறைவிற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு பகுத் தறிவாளர் கழகம் 1.11.2020 அன்று மாலையில் ஜேம்ஸ் ராண்டியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் இணைய வழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஜேம்ஸ் ராண்டி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் ஜேம்ஸ் ராண்டியின் படத்தினைத் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தலைமை வகித்தார். ஜேம்ஸ் ராண்டி பற்றிய வாழ்நாள் குறிப் பினை எடுத்துக் கூறி அய்யுறவு செயல்பாட்டாளர் டாக்டர் கணேஷ் வேலுசாமி அறிமுக உரை ஆற்றினார். ஜேம்ஸ் ராண்டி ஆற்றி வந்த மானுட மேம்பாட்டுப் பணிகளை எடுத்துக் கூறி நினைவேந்தல் உரைகளை, அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், மகாராட்டிர அந்தசிரத்த நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations - FIRA) தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் வழங்கி ஜேம்ஸ் ராண்டியின் சமுதாயப் பங்களிப்பினை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மா. அழகிரிசாமி பேசினார். நிறைவாக கழகத்தின் பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.
படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல்
பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் 25 நிமிடங்கள், முழுவதும் ஆங்கி லத்தில் - பங்கேற்றோர் அனைவரும் புரிந்திடும் வகையில் உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் சுருக்கம்:
போலி விஞ்ஞானம், 'அற்புதம்' என்பதாக நடத்தப்படும் மோசடி நிகழ்ச்சிகளை - அதன் தந்தி ரத்தை அம்பலப்படுத்தி அத்தகைய பணிகளையே தனது வாழ்நாள் குறிக்கோளாகக் கடைப்பிடித்து 92ஆம் வயதில் மறைந்துள்ள மாபெரும் உண்மை விளக்க மேடைக் கலைஞர் ஜேம்ஸ் ராண்டி, மானுட மேம்பாட்டிற்கு அரிய பெரிய பணியினை ஆற்றி வந்தார். எதையும் கேள்விக்கு ஆட்படுத்திடும் அணுகுமுறையை Spirit of Inquiry அணுகுமுறையினை கடைப்பிடிக்க மேடைதோறும் முழங்கியவர் ஜேம்ஸ் ராண்டி. தான் தொடர்ந்து நடத்திய பிரச்சாரங் களின் மூலம் தன்னை பகுத்தறிவாளராக வெளிப் படுத்திக் காட்டிய பெருமகனார் ஜேம்ஸ் ராண்டி.
'எதையும் கேள்வி கேட்கும்' வழக்கத்தால் தான் பகுத்தறிவைப் பயன்படுத்திடும் தன்மையால்தான் மானுடம் மேம்பட்டு வந்துள்ளது; முன்னேற்றம் அடைந்து வருகிறது. தந்தை பெரியார் "நான் சொல்கி றேன் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதீர்! உங்களது சிந்தனைக்கு ஆட்படுத்தி, உடன்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சொல்லித்தான் இந்நாட்டு மக்களிடம் பகுத்தறிவினைப் பயன்படுத்திடும் பழக் கத்தை பரவலாக்கினார். தந்தை பெரியார் போலவே ஜேம்ஸ் ராண்டி அவர்களும் மதம் தொடர்பான விஷயங்களை எதிர்த்து சமுதாயப் பணி ஆற்றியதால் அவரது வாழ்க்கையும் எதிர் நீச்சலடிக்கும் வாழ்க்கை யாவே (swimming against the current) அமைந்தது. இயல்பாக நடக்கும் நிகழ்வுகளையே ஆய்வுக்கு ஆட்படுத்தி அறிவியல் கருத்துகளை வளர்த்தார்கள் அறிஞர் பெரு மக்கள். இயல்புக்கு மீறிய நிகழ்ச்சிகளை (paranormal activities) 'அற்புதம்' என்பதாக நடத்திக் காட்டி, மக்களை அறியாமை இருளில் வைத்த மத வாதிகளுக்கு எதிராக அறைகூவல் விடுத்தார் ஜேம்ஸ் ராண்டி. போலி விஞ்ஞானத்தை தனது நிகழ்ச்சிகளின் மூலம் தவிடு பொடியாக்கினார்.
தந்தை பெரியார் நிறுவிய இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் பொது வெளிப்பிரச்சாரக் கூட்டங்களில் 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சியினை தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறோம். மக்களிடம் உண்மை விளக்கத்தை கொண்டு செல்லும் எளிமையான, வலிமையான நிகழ்ச்சியே 'மந்திரமா? தந்திரமா?' இந்த நிகழ்ச்சியையே தனது வாழ்நாள் பணியாக தொடர்ந்து ஆற்றி, மானுட சேவையாற்றி மறைந்தார் ஜேம்ஸ் ராண்டி. உடலால் ஜேம்ஸ் ராண்டி மறைந் தாலும் அவர் கடைப்பிடித்த அணுகுமுறையால் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டுதானிருப்பார். தந்தை பெரியார் உடலால் மறைந்தாலும் சமுதாயத் திற்கு அவரது கொள்கை அவசியத்தால் இன்றைக்கும் ‘தேவை 100 பெரியார்கள்' என்பதைப் போல உண்மை விளக்கப் பணியாற்றிய ஜேம்ஸ் ராண்டி உடலால் மறைந்தாலும், அவரது பணியின் அவசியம் கருதி 100 ஜேம்ஸ் ராண்டிகள், தேவைப்படுகின்றனர். நாட் டில் நடக்கும் மோசடி சம்பவங்கள் வெளியாகும் பொழுது ஜேம்ஸ் ராண்டி ஆற்றி வந்த பணியின் தேவை அதிகரிக்கிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் ஒரு மருத்துவர் - லண்டனில் படித்துப் பட்டம் பெற்ற படிப்பாளர் 'அற்புத விளக்கு' மோசடியால் பெரும் பணமிழப்பு, பொருளிழப்பிற்கு ஆளாகிய செய்தி, ஊடகங்கள் வாயிலாக வெளி வந்துள்ளது. ஒருவர் விரும்பியதெல்லாம் வழங்கக் கூடிய ‘அலாவுதீன் அற்புத விளக்கு' தன்னிடம் உள்ளது என ஆசை காட்டிய ஒரு மோசடிப் பேர் வழியிடம் அந்த மருத்துவர் ஏமாந்துள்ளார். மத்திய ஆசிய நாட்டிலிருந்து பெறப்பட்ட அந்த 'அற்புத விளக்கை' வெளிநாடுகளில் பல கோடிரூபாய்க்கு விலை பேசுகிறார்கள். இருப்பினும் பழக்கத்தின் காரணமாக (மோசடி செய்பவர்கள் இயல்பாகப் பயன்படுத்தும் சொல்லாடல்) குறைந்த விலைக்கு - ரூபாய் 2 கோடிக்கு தர சம்மதிக்கிறேன்' எனக் கூறினாராம். இத்தனைக்கும் தனது மனைவிக்கு சிகிச்சை அளித்திட்ட மருத்துவர் என்ற முறையில் அந்த மோசடிக்காரர் பழகியுள்ளார். தங்களது மூதாதையர் தந்தசொத்து அந்த 'அற்புத விளக்கு' எனக் கூறி, மருத்துவர் அளித்த சேவைக்காக அந்த விளக்கை 10 கோடி ரூபாய் தர பலர் இருக்கும் நிலையிலும் 2 கோடி ரூபாய்க்குத் தருவதாக அந்த மோசடிக்காரர், மருத்துவரை ஏமாற்றியுள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட மோசடிக்காரர் அவர் உருவாக்கிய 'அற்புத பூதத்துடன்' மறைந்துவிட்டார். இப்பொழுது பணம், பொருள் இழந்த மருத்துவர் ஏமாந்த சோகத்தில் உள்ளார்.
இந்த மோசடி சம்பவச் செய்தி, நேற்றைய ‘விடுதலை'யில் (1.11.2020) முதல் பக்கத்தில் முகப்புச் செய்தியாகவே வெளிவந்துள்ளது. இத்தகைய மோசடி அவலங்கள் எப்பொழுதோ நடந்தது அல்ல. இன்றும் தொடர்கின்றன.
இன்றைய 'தி இந்து' (1.11.2020) ஆங்கில ஏட்டில் வந்த செய்தி!
சென்னை - பாலவாக்கம் பகுதியில் தனது மனைவியை இழந்து மகளுடன் வாழ்ந்து வரும் ஒருவரிடம் பழகிய ஒரு பெண், அவரது மனைவி சேலையில் தீப்பிடித்து இறந்தது இயல்பானது அல்ல; 'கெட்ட ஆவி' (Evil Spirit) அவரது வீட்டில் உள்ளது. அதை விரட்ட வேண்டும். இல்லையேல் துயரச் சம்பவங்கள் அந்த வீட்டில் தொடர்ந்திடும் என அவர்மீது அக்கறை உள்ளவர் போல நடத்து உள்ளார். சோகத்தில் இருந்த அவரும் அந்தப் பெண் சொன்னதில் நம்பிக்கை வைத்து 'கெட்ட ஆவியை' விரட்ட 102 சவரன் தங்க நகைகளை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். மேலும் 8 லட்சம் ரூபாய் பணத் தொகையும் கொடுத்து இழந்துள்ளார். பணத்தை, பொருளைப் பறித்துக் கொண்ட அந்தப் பெண் காணாமல் போய் விட்டார். பாதிக்கப்பட்ட அந்த நபர் காவல்துறைக்கு புகார் அளித்திட, மோசடி செய்த அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 'கெட்ட ஆவி' பெயரால் நடந்த மோசடி இது.
மேலும் ஒரு செய்தி - சென்னை புது வண்ணைப் பகுதியில் சிறப்புப் பூஜை நடத்திடத் தூண்டி ஒரு மோசடிக் கும்பலே செயல்பட்டு வருகிறது. கெட்ட ஆவியை விரட்டுவதற்கு சிறப்புப் பூஜை நடத்த வேண்டும் என சிலரிடம் பணம் பறித்துள்ளது அந்தக் கும்பல். மோசடி செய்த கும்பலை காவல்துறை தேடி வருகிறது.
'மோசடி செய்பவர்கள் வலையில் சிக்கி விடாதீர்கள்' என காவல்துறையும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.
இப்படி 'அற்புதம்', 'புனிதம்', 'விரும்பியது கிடைக்கும்', என பசப்பு வார்த்தைகள் கூறி மோசடி நடைபெறுவது உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இத்தகைய மோசடி விபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி ஜேம்ஸ் ராண்டி செய்து வந்த உண்மை விளக்கப் பணி, பொது வெளியில் அம்பலப்படுத்திக் காட்டும் பணி தொடர்ந்திட வேண்டும்.
ஜேம்ஸ் ராண்டியின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி போலவே இந்தியாவில் அந்தப் பணியினை செய்தவர்களுள் மிகவும் முக்கியமானவர்கள் டாக்டர் கோவூர், பிரேமானந்த் ஆவர். அவர்களது வழியில் பேராசிரியர் நரேந்திர நாயக் செயல் விளக்கங்களுடன் கூடிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை மேற்கொண்டு வருகிறார். தந்தை பெரியார் நிறுவிய பகுத்தறிவாளர் கழகமும், இத்தகைய செயல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்திட ஆர்வமிக்க நபர்களுக்கு பயிற்சி அளித்திட பட்டறைகளை அவ்வப்போது நடத்தி வருகிறது. மேலும் பெருகி வரும் மோசடி நிகழ்வுகளிலிருந்து சாமியார்களின் ஏமாற்று வித்தை களிலிருந்து மக்களை காப்பாற்றிட 'உண்மை விளக்க நிகழ்ச்சிகள்' மேலும் பரவலாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் அத்தகைய பணி களை மேற்கொள்ளும்.
இதுவே நாம் ஜேம்ஸ்ராண்டி அவர்களுக்கு செய்திடும் மரியாதை.
வாழ்க ஜேம்ஸ் ராண்டி, வளர்க பகுத்தறிவு நெறி - - இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
வீ. குமரேசன் உரை
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திரா விடர் கழகப் பொரு ளாளர் வீ. குமரேசன் தமதுரையில் குறிப் பிட்ட தாவது:
பெரியார் இயக்கம் தொடர்ந்து கடைப் பிடித்து வரும் உண்மை விளக்கப் பணியினை தனது வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வாழ்ந்தவர்; துணிச்சலாக எதிர்ப்பு களை நேர் கொண்டவர்; வெற்றி கண்டவர் ஜேம்ஸ் ராண்டி. அவர் காட்டிய துணிச்சலுக்கு - மோசடிக் காரர்களை அவர்களது களத்திலேயே சந்தித்து மோசடியை அம்பலப்படுத்திய ஜேம்ஸ் ராண்டியின் அணுகுமுறைச் சிறப்பினை வெளிப்படுத்திடும் ஒரு நிகழ்வு:
மேலை நாடுகளில், 'நோயாளிகள் குணமாகின்ற னர்! உடல் ஊனமுற்றோர் - இயல்பாகின்றனர்' எனும் விளம்பரத்துடன் மதவாதிகள் நடத்திடும் 'அற்புத நிகழ்ச்சிகள்' ஏராளமாக உண்டு. அந்த நிகழ்ச்சி நடத்திடும் தொலைக்காட்சி நற்செய்தியாளரின் (tele evangelists) மோசடியை தொலைக்காட்சி நிகழ்ச்சி யிலேயே அம்பலப்படுத்தினார் ஜேம்ஸ் ராண்டி. ஒரு ஆண் நபரை, பெண் வேடம் போட வைத்து தனக்கு கர்ப்பப்பையில் புற்று நோய் உள்ளதாகக் கூறி, குணப்படுத்திட வேண்டும் என வேண்டுகோளுடன் ஜேம்ஸ் ராண்டி ஒரு நாள் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். கர்ப்பப்பை புற்று நோயை குணப்படுத்திட வேண்டியதை நம்பி அந்த பிரபல நற்செய்தியாளரும் மதப் புத்தகத்தில் இருந்து சில வாசகங்களை உரைத்து மந்திரம் சொல்லுவது போல பாசாங்கு செய்து, இறுதியில் அந்தப் 'பெண் ணிற்கு' கர்ப்பப்பை புற்றுநோய் குணமாகி விட்டது என பிரகடனப்படுத்தினார். உடனே பெண் வேட மிட்டு வந்த அந்த ஆண் தனது வேடத்தைக் கலைத்து ‘நான் ஒரு ஆண்; எனக்கு கர்ப்பப்பையும் இல்லை; அதற்கு புற்றநோயும் இல்ல' எனக் கூறி அந்த நற்செய்தியாளரது 'மூக்கை உடைத்தார்'. தொலைக்காட்சி நிகழ்ச்சியினைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள், நற்செய்தியாளர் நடத்தி வந்த 'அற்புத' நிகழ்ச்சிகளின் மோசடித் தன்மையினை தெரிந்து கொண்டனர்.
இப்படி எதிர் கருத்தியலாளர்களை அவர்களது களத்திலேயே துணிச்சலுடன் சந்தித்து போராடிய ஜேம்ஸ் ராண்டியால் மத நம்பிக்கையிலிருந்து விடு தலை அடைந்தோர் ஏராளம். ஜேம்ஸ் ராண்டியின் புகழ் ஓங்குக! அவர் கடைப்பிடித்த 'உண்மை விளக்கப்' பணி பெருகி, தொடர்ந்திடுக.
அய்யுறவுச் செயல்பட்டாளர் டாக்டர் கணேஷ் வேலு சுவாமி உரை
நிகழ்ச்சியில் அறிமுக உரை ஆற்றிய அய்யுறவுச் செயல்பாட்டாளர் (Skeptical activist) டாக்டர் கணேஷ் ஜேம்ஸ் ராண்டியின் வாழ்க்கை பற்றிய காட்சி களை அழகாக வரிசைப் படுத்தி அவர் குறித்த செய் திகளை பகிர்ந்துகொண் டார். ஜேம்ஸ் ராண்டி 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரு வந்த பொழுது அவரது நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து அவரைத் தனியாகச் சந்தித்து உரையாடிய நிகழ்ச்சிகளை விரிவாக எடுத்துக் கூறினார். டாக்டர் கணேஷ் வேலுசுவாமி அவர்கள் படைத்திட்ட ஜேம்ஸ் ராண்டி பற்றிய குறிப்புகள், ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் விரும்பி தெரிவித்தனர். ஜேம்ஸ் ராண்டியின் செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட டாக்டர் கணேஷ், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை - அய்யுறவு செயல்பாட்டுப் பணியினை மேலும் பரவலாக்கி ஜேம்ஸ்ராண்டி புகழுக்கு பெருமை கூட்டு வோம் என தமது உரையில் குறிப்பிட்டார்.
அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் டாக்டர் சோம இளங்கோவன்
அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள பெரியார் பன்னாட்டு மய்யத்தின் (Periyar International USA) தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், தமது உரையில் குறிப்பிட்டதாவது:
அமெரிக்காவில் ஜேம்ஸ் ராண்டிக்கு நிகரான மேஜிக் நிபுணர்கள் உள்ளனர்.மேடையிலேயே சிங்கத்தை தங்களது பக்கத்தில் 'இயல்பாக' உட்கார வைத்து வித்தை காட்டும் சிக்பிரைட் - ராய் (Seigfried - Roy) இணையர், அமெரிக்காவின் அடையாளச் சின்னமான ‘விடுதலைப் பெண்மணி சிலை'யை (Statue of Liberty) மேடையிலேயே 'கொண்டு' வந்து காட்டும் டேவிட் காப்பர்பீல்ட் (David Copperfield) ஆகிய நிபுணர்கள் உண்டு. அவர்களிடமிருந்து வேறுபட்டவர் ஜேம்ஸ் ராண்டி. மேடையில் தான் நடத்திக் காட்டும் 'அதிசய' செயல்களுக்கு விளக்கம் அளித்து, பார்ப்போரை அறியாமையிலிருந்து பிரமிப்பு, மயக்கத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருபவர் ஜேம்ஸ் ராண்டி.
சில ஆண்டுகளுக்கு முன்னர் புளோரிடாவிற் குச் சென்று ஜேம்ஸ் ராண்டியின் நிகழ்ச்சியினைப் பார்த்து விட்டு அவரைத் தனியாகச் சந்தித்து உரையாடிய நல்ல வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அப்பொழுது இந்தியாவில் - தமிழ்நாட்டில் பெரியார் இயக்கமானது 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சிகளை நடத்தி, அவரைப் போல் நிகழ்ச்சி யின் இறுதியில் உண்மை விளக்கம் அளித்து வருவதைக் குறிப்பிட்ட பொழுது, 'பெரியாரைப் பற்றியும், அவரது பிரச்சாரத்தையும் பற்றியும் தனக்குத் தெரியும்' எனக் குறிப்பிட்டுப் பேசினார். அமெரிக்க மதச்சார்பற்ற மனித நேயர் பால்கர்ட்ஸ் (Paul Kurtz) நிறுவிய 'இயல்பு மீறிய செயல்கள் பற்றிய அறிவியல் பூர்வ விசாரணை குழுவில் (Committe for the Scientific Investigation of Claims of the Paranormal - CSICOP) இணைந்து பணியாற்றிய வர் ஜேம்ஸ் ராண்டி. அவர் செய்த பணி அவரது மறைவிற்குப் பின்னரும் தொடர வேண்டும். ஜேம்ஸ்ராண்டி புகழ் ஓங்குக.
மராட்டிய ‘மான்ஸ்' (MANS) அமைப்பின் அவினாஷ் பாட்டில் உரை
மகாராட்டிர ‘அந்தசிரத நிர்மூலன் சமிதி' எனும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார அமைப் பினை 1989ஆம் ஆண்டில், சில ஆண்டுகளுக்கு முன்பு மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட டாக்டர் நரேந்திர தபோல்கர் நிறுவினார். அந்த அமைப்பின் இன்றைய செயல் தலைவர் அவி னாஷ் பாட்டில் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
நவம்பர் 1ஆம் நாளான இன்று டாக்டர் நரேந்திர தபோல்கரின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள். அதே நாளில் மூடநம்பிக்கை ஒழிப்பு, போலி விஞ்ஞான எதிர்ப்பிற்காகப் பாடுபட்ட ஜேம்ஸ் ராண்டி அவர்களது மறைவினை ஒட்டி தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி அந்த நிகழ்வில் பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர், மூடநம்பிக்கை ஒழிப்பில் முன் மாதிரித் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணிஅவர்கள் ஜேம்ஸ் ராண்டி அவர்களது படத்தினை திறந்து வைத்ததும் மிகவும் பொருத்த மான, கொள்கைப் பொருத்தமான - நிகழ்வாக அமைந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது அமைப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறது. மூடநம்பிக்கை என்பது மனித ஆற்றலை மழுங்கடிப்பதாகும்; மனித நடவடிக்கைகளை முடக்கிப் போடுவதாகும். மூடநம்பிக்கையினை வளர்த்து, பணம் சம்பாதித்து மக்களை அறியாமை யில் வைத்திருக்கிறார்கள் பல சாமியார்கள். கடவுள், மதம் - இவைகளை துணைக்கு வைத்துக் கொண்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவரு கின்றனர் அந்த சாமியார்கள். மூடநம்பிக்கை சமுதாயத்தில் பல தீமைகளை உருவாக்குவது; நிலை நிறுத்துவது பெண்ணடிமை என்பதில் மூடநம்பிக்கையின் பங்கு அதிகம். இத்தகைய மூடநம்பிக்கைகளை எதிர்த்து, மேடைதோரும் அறிவியல் அடிப்படையில் நிகழ்ச்சிகளை அமெரிக்க நாட்டி லும், உலகின் பல பகுதிகளிலும் நடத்தி மோசடி களை அம்பலப்படுத்தியவர் ஜேம்ஸ் ராண்டி. அவரது புகழ் ஓங்குக! அவரது பணி தொடர்ந்திடுக.
பெரா (FIRA) அமைப்பின் பேராசிரியர் நரேந்திர நாயக் உரை
ஜேம்ஸ் ராண்டி போல இந்தியாவின் பல மாநிலங்க ளுக்கும், நகரங்கள், கிராமங் கள், குக்கிராமங்கள் என மூலை முடுக்கெல்லாம் சென்று மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரப் பணியினை மேற்கொண்டு வரும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரி யர் நரேந்திர நாயக் தமதுரையில் குறிப்பிட்டதாவது:
ஜேம்ஸ் ராண்டி அவர்கள் இந்தியாவிற்கு கோவாவில் நிகழ்ச்சி நடத்திட வந்தபொழுது பெங்களூரு நகரத்திற்கும் வந்து நிகழ்ச்சி நடத் தினார். அவரது நிகழ்ச்சியினைப் பார்த்துவிட்டு அவரிடம் அறிமுகமாகி 4 மணி நேரம் நாங்கள் இருவர் மட்டும் உரையாடும் நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது இந்தியாவில் பகுத்தறி வாளர் சங்கங்கள் நடத்தி வரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணி, நான் நடத்தி வரும் செயல் விளக்கத்துடன் கூடிய பணி பற்றிக் கூறிய பொழுது மிகவும் வியப்படைந்தார். 'நீங்கள் எண்ணிக்கையில் ஒரு மாதத்தில் சந்திக்கும் மக்களை நான் ஓராண்டு முழுவதும் சந்தித்து 'உண்மை விளக்கம்' அளித்து வருகிறேன்' என்று கூறி நமது பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
ஜேம்ஸ் ராண்டி எனக்கு நாயகர் (Hero). பெரியார் எனது கொள்கைக்கும் சிந்தனைக்கும் வழிகாட்டி, டாக்டர் கோவூர் எனது பணிக்கான வழிகாட்டி, பிரேமானந்த் எனது குரு என்று சொல்ல மாட்டேன். (குரு என்பது எதிர்மறைக் கருத்தில் நடப்பில் உள்ளது) அதற்கும் மேலே மூடநம்பிக்கை ஒழிப்பில் ஜேம்ஸ் ராண்டி அவர்களது பணி நமக்கு ஒரு உந்து சக்தியாகவும் மேலும் பரந்து பட்டு மேற்கொள்ள முனைப் படுத்துவதாகவும் அமையும் எனக் கூறி ஜேம்ஸ் ராண்டி அவர்களது மானுட மேம்பாட்டுப் பணிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
இவ்வாறு நரேந்திர நாயக் புகழாரம் சூட்டினார்.
ஜேம்ஸ் ராண்டி நினைவேந்தல், படத்திறப்பு நிகழ்ச்சியில், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், சீறிலங்கா மற்றும் பல நாடுகள், இந்தியாவின் பிற மாநிலங்கள், தமிழ்நாட்டின் பல தரப்பட்ட மக்கள் கலந்துகொண்டு ஜேம்ஸ் ராண்டியின் நினைவினைப் போற்றினர்.
- தொகுப்பு: வீ. குமரேசன்
No comments:
Post a Comment