* தமிழ்நாட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை அலட்சியப்படுத்துவானேன்?
* தாய்மொழியை ஊக்கப்படுத்துவதாகக் கூறும் பிரதமரின் உறுதிமொழி என்னாயிற்று? சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியாயமான கேள்வி!
ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயம் என்ற ஆணை நடைமுறையில் இருக்கும் தமிழ்நாட்டில், மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைப் பெயரளவிற்குக் கற்பிக்கும் ஏனோ தானோ நடைமுறை ஏன்? தாய்மொழிக்கு ஊக்கம் தரப்பட வேண்டும் என்று பிரதமர் ஒருபக்கத்தில் சொல்லிக் கொண்டுள்ளார்; இன்னொரு பக்கத்தில் தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ் புறக்கணிக்கப்படும் போக்கு - இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பொங்கி எழும் - களம் காணும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாடு, பாடத் திட்டத்தின்கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் கற்கக் கூடிய வாய்ப்பு மறுக்கப்படுவதுபற்றியும், தி.மு.க. -கலைஞர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசின் ஆணை (2006) - தமிழ்நாடு கல்விச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை தமிழ் கட்டாயப் பாடம் என்று பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறையில் இருக்கும்போது, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் நடைபெறும் (கேந்திரிய வித்யாலயா) பள்ளிகளில் தமிழ் மொழி கற்க கதவு சாத்தப்படுவது - வாய்ப்பு மறுக்கப்படுவதை நீக்கி, ஆணைப் பிறப்பிக்க வேண்டுமென்று வழக்குரைஞர் பொன்குமார் என்பவர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு முன் நேற்று (26.11.2020) விசாரணைக்கு வந்தது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என்பவை தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசு வழக்குரைஞர் வாதாடும்பொழுது, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்!
தமிழைக் கற்பிக்க தற்கால ஆசிரியர்களா?
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்புவரை நடத்தப்படும் இப்பள்ளிகளில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டும் தற்காலிக ஆசிரியர்களை வைத்து தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது. (மற்ற ஹிந்தி, சமஸ்கிருத ஆசிரியர்கள் இப்படி தற்காலிகமாக பகுதி நேர ஆசிரியர்களே இல்லாமல், நிரந்தர நியமனம் பெற்றவர்கள்) இதன்மூலம் தமிழ்நாட்டில் தாய்மொழியாம் தமிழ் மொழி - மேலே காட்டிய. தமிழ்நாடு அரசின் ஆணையைப் பற்றியோ, தமிழ், தாய்மொழி தமிழ் மக்களுக்கு என்பதுபற்றியோ கிஞ்சிற்றும் கவலைப்படாமல் மத்திய அரசு தமிழைப் புறக்கணித்து வருகிறது!
தமிழ் செம்மொழி என்ற சிறப்பு பெற்ற மொழி என்பதுபற்றியெல்லாம் கூட மத்திய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் வழக்கு மாண்பமை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.புகழேந்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்விகள் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்பட்ட நேர்மையான கேள்விகள் - மத்திய அரசின் நிலைப்பாடு - கண்ணோட்டம் - தமிழின்பால் எப்படி இருக்கிறது என்பதைத் துல்லியமாக எவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எழுப்பப்பட்டுள்ளன!
தாய்மொழியை ஊக்கப்படுத்தச் சொல்லும் பிரதமரும் - உண்மை நடப்பும்!
1. ‘‘கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இங்கு (தமிழ்நாட்டில்) படிக்கும் மாணவ, மாணவிகள் பிரெஞ்சு, ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளைக் கற்கலாம்; ஆனால், தமிழ்நாட்டில், தமிழ்மொழியைக் கற்கக் கூடாதா? மத்திய அரசு வழக்குரைஞர் கூறிய பதிலை நாங்கள் ஏற்கமாட்டோம்; பிரதமர் தாய்மொழியை ஊக்கப்படுத்த வேண்டுமெனக் கூறுகிறார்; ஆனால், ஹிந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்கவேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.
2. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப்பாடமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது. தமிழ் மொழிக்காக மட்டும் நாங்கள் கேட்கவில்லை; அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம்.
3. இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ் மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தாய்மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. ஒவ்வொரு மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவேண்டும்'' என்று கூறியுள்ளனர்.
இதன்மூலம் இரட்டை வேடம், இரட்டைப் போக்கு, தாய் மண்ணிலேயே தமிழுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு - அதுவும் மத்திய அரசுப் பள்ளிகளில் - ஆசிரியர்கள்கூட நியமனம் கிடையாது - ஏதோ தமிழுக்குத் தற்காலிக ஆசிரியர் - அவ்வளவுதான்.
பொங்கி எழும் களம் விரைவில்!
தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழிக்கு இப்படி ஒரு அவலம் - வாய்ப்பு மறுக்கப்படும் கொடுமை என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா? இப்படி நடந்துகொண்டு, ‘‘தமிழ் பஜனை''யை ஊர்தோறும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அவ்வப்போது நடத்துவதும், ஒரு வரி, இரண்டு வரி பேசிடும் காரியத்திலும், செம்மொழி தமிழுக்கு நிரந்தர கதவடைப்பு என்றால், எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
பொங்கி எழும் களம் விரைவில்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
27.11.2020
No comments:
Post a Comment