மாலன்களுக்கு.. அதிகார திமிரால் ஆட வேண்டாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 28, 2020

மாலன்களுக்கு.. அதிகார திமிரால் ஆட வேண்டாம்!

* மின்சாரம்


2021ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் - திமுக ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில் அக்ரகாரம் அல்லும் பகலும் அதே நினைப்பில் வரிந்து கட்டிக் கொண்டு அவர் களுக்கே உரித்தான வகைகளில் அவர்கள் நம்பும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வேண்டித் தவம் இருந்து கொண்டு இருப்பதை அறிய முடிகிறது. ஆம், 'சத்ரு சம்ஹார' யாகம் நடத்திக் கொண்டுள்ளனர்.


இவர்கள் என்ன நோக்கத்துக்காக 'ஆவேசமாக' பூணூலை உருவிக் கொண்டு 'விட்டேனா பார்' என்று எகிறிக் குதிக்கிறார்களோ, அதே காரணங்களுக்காகத் தான்  தமிழர்கள் - பார்ப்பனர் அல்லாதார் தி.மு.க. ஆட்சிக்கு வந்தே தீர வேண்டும் என்ற உணர்வின் உச்சத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.


1971ஆம் ஆண்டு தேர்தல் முடிவை 2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு மீண்டும்  காண இருக்கிறது.


'மகா புருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டே வெளி யேற இருக்கிறார்கள்' என்று ஆச்சாரியார் (ராஜாஜி) கையொப்பமிட்டு அறிக்கை கொடுக்கவில்லையா?


அப்படி என்ன திமுக செய்து விட்டது? சமூகநீதியில் அக்கறை செலுத்தப்படுகிறது  - இந்தி சமஸ்கிருதத்திற்கு எதிராக இருக்கிறது - பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்தது -   பெண்களுக்கான சொத்துரிமை சட் டத்தைக் கொண்டு வந்தது - விவசாயம் பாவத் தொழில் எனும் மனு தர்மத்துக்கு எதிராக உழவர் சந்தை உருவாக்கப்பட்டது.


தமிழை செம்மொழியாக அங்கீகரிக்கச் செய்தது - தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக செயல் படுத்தியது  -- நாடெங்கும் சமத்துவப் பொங்கலைக் கொண்டாடச் செய்தது - பெண்கள் நல் வாழ்வுக்கான பல்வேறு பொருளாதார உதவிகளை அலை அலையாகச் செயல்படுத்தியது.


தமிழ் உணர்வாளர்களுக்கு அஞ்சல் தலையை வெளியிடச் செய்தது - சுருக்கமாகச் சொன்னால் "இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை" என்று அறிஞர் அண்ணா அறிவித்ததின் அர்த்தத்தை விளங்கும்படிச் செய்துள்ளது.


"இது சூத்திரர்களுக்கான சூத்திரர்களால் ஆளப்படும் 'நான்காம் தர' அரசுதான்!" என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் சட்டப் பேரவையில் 'கர்வத்துடன்' பிரகடனப்படுத்தினாரே  -அதில் நூல் பிறழாமல் திமுக ஆட்சியின் நிர்வாகச் சக்கரம் சுழன்றடித்தது.


சமூகத்தின் மற்ற மற்ற தடங்களில், தளங்களில் படம் எடுத்து ஆடிய தீண்டாமை என்னும் நச்சு நாகம் - நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அமைப்புகளின் திராவிட - சுய மரியாதை சித்தாந்தத்தின் அடிப்படையில் அடிபட்ட நிலையில், கோயில் கருவறைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிய நிலையில், அங்கும் தன் "உரம் வாய்ந்த" கைத் தடியை ஓங்கினார் தந்தை பெரியார்.


ஆம்! அதுதான் திமுக ஆட்சியில் இருமுறை நிறைவேற்றப்பட்ட "அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை" என்னும் சட்டம்!


சங்கராச்சாரியார், ஜீயர், ராஜகோபாலாச்சாரியார் மற்றும் பார்ப்பனர்களின் கடும் முயற்சியால், முட்டுக் கட்டை போடப்பட்டாலும் இப்பொழுது செயல் பாட்டுக்கு வந்து விட்டதே! அதன் வீச்சு கேரள மாநிலம் வரை நீட்சியாகி, பார்ப்பனர்களின் ஏக போகமாக இருந்த 'பூணூல் (அ) தருமத்தின்' ஆணவ இறுமாப்புக் கோட்டைமீது மரண இ(அ)டி வீழ்ந்து விட்டதே! வீழ்ந்து விட்டதே!!


அடுத்தகட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மதுரை மீனாட்சி, காஞ்சிபுரம் காமாட்சி, சிறீரங்கம் ரங்கநாதன், சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள், திருவண்ணமாலை அருணாசலேஸ்வரர் கோயில், மகா மகம் புகழ் குடந்தை கும்பலிங்கேஸ்வரர் கோயில்களில் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்ற காத்தவராயன்களும், அமாவாசைகளும் அர்ச்சக ராகும்போது தான் தெரியும் செய்தி! ஒவ்வொரு அக்ரகாரவாசியின் வீட்டிலும் இழவு வந்த மாதிரி ஒப்பாரி சத்தம் கேட்கத்தான் போகிறது. இதற்கெல்லாம் வித்திட்டது இந்த ஈ.வெ.ரா. தானே என்ற ஆத்திரப் புயல் அலை புரள கற்சிலைகளாகவும், உலோகச் சிலைகளாகவும், கம்பீரமாகவும், கையில் தடியோடு நிற்கும் தந்தை பெரியார் என்னும் சகாப்த தலைவரின்  உருவத்தைக் காணும் போதுகூட ரத்தம் கக்குகிறார்கள், கற்களை வீசுகிறார்கள், காவிச் சாயம் பூசுகிறார்கள், செருப்பு மாலை அணிவிக்கிறார்கள்.


இந்த ஈ.வெ.ரா.வை ஞானத் தந்தையாகப் போற்றும் உண்மையான திராவிட அரசியல் கட்சியாக திமுக இருக்கிறதே!  இன்றைக்குக்கூட "எங்கள் பயணத்தை முடிவு செய்வது - பெரியார் திடல்தான்" என்று திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கிறாரே - என்றவுடன் திமுகமீதும், நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் அதன் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மீதும் சேற்றை வாரி இறைக்கின்றனர். அபாண்டங்களை அள்ளி வீசுகிறார்கள் - கேலியும், கிண்டலும் செய்கிறார்கள்.


இதனைத் தெரிந்து கொள்வதற்கு வேறு எங்கு சென்றும் அலையத் தேவையில்லை. இப்பொழு தெல்லாம் அதிகார பூர்வம் என்று அறிவிக்கப்பட வில்லை என்றாலும், பா.ஜ.க. சங்பரிவார்க் கட்டம் - அக்ரகாரம் இவைகளுக்கு அதிகாரப்பூர்வ வார ஏடாக இருப்பது 'துக்ளக்'தான். அதன் ஒவ்வொரு இதழும் - அடேயப்பா, ஆத்திரத்தின் அக்னிப் பொழிவுதான் - திமுகமீதும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்மீதும்!


இவ்வார 'துக்ளக்'கில் மாலன் என்ற புனைப் பெயரில் ஒளிந்து கொண்டுள்ள நாராயண அய்யங்கார் தளபதி ஸ்டாலின் மீதும், மானமிகு கலைஞர் மீதும், கேலி, கிண்டல், தாக்குதல் எனும் பாணங்களைத் தொடுத்திருப் பதைப் பார்க்க முடிகிறது தலைப்பு: "அன்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு" என்பதாகும். நண்பருக்கு என்ன சொல்கிறாராம்?


(1) "இந்தியாவில் எவரும், அவரது கட்சி உட்பட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காத நிலையில் நீங்கள் அறிவித்தீர்கள். ஆனால் உங்கள் ராசி அவர் சொந்த ஊரில் கூட ஜெயிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த கட்சித் தலைவர் பொறுப்பையும் உதறினார் என்று சிலர் சொல்லுகிறார்கள்.  பகுத்தறிவாளர்களுக்கு ராசியில் நம்பிக்கை கிடையாது என்பதால் அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை" என்கிறார் திருவாளர் நாராயண அய்யங்கார்.


பகுத்தறிவாளர்களுக்கு ராசியில் நம்பிக்கை இல்லை என்று தெரிந்த பிறகு அதை ஏன் தேவையின்றிச் சுட்டிக் காட்டும் வீண் வேலையில் ஈடுபட வேண்டும்?


ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களிடத்தில் ஸ்டாலின் ராசி இல்லாதவர் என்று அடையாளப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற அற்பப் புத்திதானே - உள்நோக்கம்தானே!


மாலன்கள் ராசியில் நம்பிக்கை உள்ளவராக இருந்தால் அவர்களின் ஜெகத் குருவான காஞ்சி சங்கராச்சாரியார் கொலைக் குற்றத்திற்கு ஆளாகி ஜெயிலுக்குள் கம்பி எண்ணியது கூட அவரின் 'ராசி பலன்' தான் என்பாரோ!


(ராசியிலும், சோதிடத்திலும் நம்பிக்கை வைத்துத் தேர்தலில் போட்டியிட்ட மேனாள் தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் ஏன் மண்ணைத்தானே கவ்வினார்!


பரிதாபம்! பகுத்தறிவு என்றாலே 'பித்தலாட்டம்' என்று எழுதிய (துக்ளக்' 4.3.2009) திருவாளர் 'சோ' ராமசாமி வாளின் சீடர்களுக்குப் பகுத்தறிவு என்றாலே குமட்டத்தான் செய்யும். மனிதன் என்றாலே அவனுக்கு இருக்கும் ஆறாவது அறிவு பகுத்தறிவுதான் அடையாளம்! அதையே வெறுக்கக் கூடியவர்கள் மனிதர்களா? மிருகங்களா? என்பதைப் பகுத்தறிவாதிகள், மற்றவர்கள் தீர்மானிக்கட்டும்.


2) "காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்குங்கள். கடந்த தேர்தலில் 41 இடங்களை ஒதுக்கினீர்கள்.  8 இடங்களில் அதாவது அய்ந்தில் ஒரு பங்கு வென்றார்கள். பீஹாரில் ராஹுலுக்கு இம்முறை ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க வேண்டுமானால் நீங்கள் அவருக்கு 100 இடங்களை ஒதுக்க வேண்டும். அவர்கள் அதில் நிச்சயம் 20 இடங்கள், பீஹாரை விடக் கூடுதலாக ஒரு இடத்தை வென்று ராஹுலுக்குப் புகழ் சேர்ப்பார்கள்" என்று ஏகடியம் செய்கிறார் மாலன்.


பீகார் தேர்தல் முடிந்து, யதார்த்தமான சூழலில் காங்கிரஸ் தலைவர்கள், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரைச் சந்தித்து இணக்கமாகப் பேசி சுமூகமான முடிவுக்கு வந்த பின், மாலன்களுக்கு இதில் என்ன வேலை இருக்கிறது?


திமுக - காங்கிரசிடையே பேச்சு வார்த்தை நடந்த பிறகு  - மாலனின் கருத்துத் தானத்திற்கு என்ன வேலை?


ஒரு கருத்துக் கூறுவதற்கான அவசியம், கால நிலை, முகாந்திரம் எதுவும் இல்லாமல் மூக்கை நுழைப்பது என்பது அடிப்படைப் பொது அறிவு இல்லாத நிலைதானே - ஆத்திரம் அந்த அளவுக்கு நெரி கட்டி விட்டது போலும்! இந்த நிலையில் இவர் சொல்ல வேண்டியது யாருக்கு? அதிமுக - பா.ஜ.க. கூட்டணிக்குத்தானே? இந்த வார இதே 'துக்ளக்' இதழில் (2.12.2020). "பா.ஜ.க.வின் திட்டம் என்ன?" (பக்கம் 5) என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 40 இடங்களை கோருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே!


40 தொகுதிகளைக் கோருவதற்கு பா.ஜ.க.வுக்கு யோக்கியதை உண்டா? காங்கிரசை நையாண்டி செய்யும் திருவாளர் நாராயண அய்யங்கார்கள் இந்தப் பக்கம் ஏன் கவனத்தைச் செலுத்தவில்லை? அதிமுக கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 40 கொடுத்தால் நாலு இடமாவது தேறாதா என்ற நப்பாசை தானே?


திராவிட இயக்கத்தோடு கூட்டணி இல்லை என்று சொன்ன பா.ஜ.க. இப்பொழுது ஏன் ஓடோடி வந்து அதிமுகவின் தயவை நாட வேண்டும்?


சட்டமன்றங்களிலோ, நாடாளுமன்றத்திலோ  கடந்த காலத்தில் பா.ஜ.க.வுக்கு ஒன்றிரண்டு இடங்கள் கிடைத்தன என்றால், அது, திமுக, அதிமுக தயவில்தானே!


2019இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்குக் கிடைத்தது 3.66 விழுக்காடுதானே - அதுவும் அதிமுக கூட்டணியால்; கடந்த மூன்று சட்டப் பேரவைகளிலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்குச் சுழியம் தானே!


காங்கிரசைக் கேலி செய்யும் மாலன்கள், அதே அளவுகோலில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பா.ஜ.க.வைப் பார்க்காதது ஏன்? காங்கிரசைவிட தமிழ்நாட்டில் பா.ஜ.க. பெரிய கட்சியா - சக்தியா?


ஒரு பிரதமரை தமிழ்நாட்டு மக்கள் எப்படியெல்லாம் வரவேற்பார்கள் என்பதெல்லாம் மறந்து போயிற்றா? உள்துறை அமைச்சரை வரவேற்றவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட கட்சிக்காரர்கள்தானே -மக்கள் பங்களிப்பு அதில் உண்டா? கள யதார்த்தம் என்ன என்று தெரியாத அளவுக்குப் பற்றும் பாசமும் கண்களை மறைக்கின்றன - அப்படித்தானே?


3) "நட்புக்கு உங்கள் தந்தை (கலைஞர்) திருக்குறளை எடுத்துக்காட்டியதுபோல, ஆடை நழுவிக் கொண்டிருக்கும் காங்கிரசைக் காப்பாற்ற நட்புக்கு இலக்கணம் வகிக்கும் வகையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். காங்கிரசுக்கு 100 இடங்களைக் கொடுக்க வேண்டும்" என்று நண்பர் ஸ்டாலினுக்கு சொல்கிறாராம். எவ்வளவுக் கிண்டல்  - ஏகடியம்! முத்தமிழ் அறிஞர் கலைஞரையும் குத்த வேண்டும், இகழ வேண்டும் - தளபதி மு.க. ஸ்டாலினையும் எள்ளி நகையாட வேண்டும் என்ற எரிச்சல் இதில் இழையோடவில்லையா?


திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தொலைக்காட்சியில் வேலை பார்த்து, அதன் மூலம் விளம்பரமாகி, திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது ஏதோ இவர் தமிழுக்குத் தொண்டு செய்தவராம் - அதன் பேரில் சலுகைகளை அனுபவித்த பிறவிகள் எப்படி எல்லாம் இன்று எகத்தாளம் போடுகின்றன பார்த்தீர்களா?


'வன்கண நாதா போற்றி - பேச நா இரண்டுடையாய்ப் போற்றி!' என்று "ஆரிய மாயையில்" அறிஞர் அண்ணா எழுதியது இப்பொழுது நினைவிற்கு வர வேண்டுமே!


4) "எமர்ஜென்சியின் போது நீங்கள் (மு.க. ஸ்டாலின்) உட்பட திமுகவினரை ஜெயிலில் உதைத்த பின்பும், "நேருவின் மகளே, வருக!" என்று காங்கிரஸோடு கூட்டு வைத்துக் கொண்டவர் உங்கள் தந்தை. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை உணர்ந்த பின்னும் காங்கிரஸோடு கூட்டைத் தொடர்ந்தவர். தந்தை வழியில் கட்சி நடத்தவேண்டியது உங்கள் கடமை என்பதை மறந்து விடாதீர்கள்" இவையும் மாலனின் கேலிதான்.


முதல் அமைச்சர் கலைஞரிடம் 'சேவகம்' செய்ததன் பலனை அடைந்தவர்கள் எல்லாம் மத்தியில் அதிகாரமும், மாநிலத்திலும் மத்திய ஆட்சியின் தொங்கு சதைகளும் இருக்கும் திமிரில் மறைந்த மதிப்பு மிக்க ஒரு மக்கள் தலைவரை நையாண்டி செய்வதைத் தமிழர்கள் நினைவில் வைக்கத் தான் செய்வார்கள்.


சிறையில் தாக்கப்பட்டனர் என்று சொல்வதைப் புரிந்து கொள்ளலாம். உதைபட்டவர் என்று ஸ்டாலின் அவர்களைச் சொல்லுவது எந்தத் தரத்தில் - எந்தப் புத்தியில் - எந்தக் கேவலத்தில்? உதைபடுவது ஒரு சாராருக்கு மட்டும்தானா வரும்? காலம் மாறுமே!


இன்றைக்கு ஏதோ நமக்குப் பக்கபலம், அதிகாரப் பலம் இருக்கிறது என்ற திமிரில் எதையும் எழுதலாம் - எவரையும் இழிவுபடுத்தலாம் - தமிழர்களைக் கொச்சைப்படுத்தலாம் என்ற இறுமாப்பில் பார்ப்பனர்கள் எழுதலாம் - மனப்பால் குடிக்கலாம்! 'துள்ளிய மாடு பொதி சுமக்கும்' என்பது நம் நாட்டுப் பழமொழியாயிற்றே!


No comments:

Post a Comment