விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் திட்டவட்டமாகவே கூறுகிறது.
ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் சரி, மத்திய அரசும் சரி, இதற்கு நேர் எதிராகப் பயணம் செய்கின்றன - காரணம் அவர்கள் மேற்கொண்டுள்ள ஹிந்துத்துவா அஜண்டா.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. மத்திய பிரதேசத்தில் தோல்வி கண்டது. சில மாதங்களிலேயே காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்தது, கொல்லைப்புற வழியாக பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது.
15 ஆண்டுகளாக ம.பி.யில் பா.ஜ.க. ஆட்சியிருந்தும் ஊழலைத் தவிர ('வியாபம்' ஊழல்) வேறு எதுவும் நடக்கவில்லை.
பா.ஜ.க. ஆட்சி கையில் வைத்திருக்கும் 'மந்திரக்கோல்' மதம், மதம், மதமே!
பாமர மக்கள் மத்தியில் பதிந்து கிடக்கும் மத அடிப்படையிலான பக்தி என்னும் மயக்க மருந்தைப் பயன்படுத்திக் காலக் கப்பலை நகர்த்திக் கொண்டு இருக்கிறது.
மத்தியப் பிரதேச அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் காணொலி முறையில் நடைபெற்றது. பசு மாடு தொடர்புடைய இந்த அமைச்சரவைக் கூட்டத்தில்தான், பசுவை 'புனித' மாதாவாக அறிவிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, வனத்துறை அமைச்சர் விஜய் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்ட அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அதில், ''சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பசுவை பாதுகாப்பது அவசியம். ஊட்டச் சத்துக் குறைவுள்ள குழந்தைகளின் உடல்நலன் மேம்பட பசும்பால் பயன்படும். மரம் மற்றும் ரசாயன உரத்திற்கு மாற்றாக பசுஞ்சாணம் பயன்படும். இவை சுற்றுச்சூழலை காக்கும். அதனுடன், பசுவின் கோமியம் பூச்சிக் கொல்லியாகவும் மற்றும் மருந்துப் பொருளாகவும் பயன்படும். எனவே, பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க பசுவை 'புனித மாதா' என அறிவிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
''பசுக்கள் நலனுக்காகவும், மாட்டுக் கொட்டைகைகளின் பரா மரிப்புக்காகவும் பணம் திரட்டு வதற்கு சில சிறிய வரி விதிக்க நான் யோசிக்கிறேன். நம் இந்திய கலாச்சாரத்தில் விலங்குகளுக்கான அக்கறை இப்போது மறைந்து வருகிறது.
எனவே, மாடுகளுக்காக பொது மக்களிடம் இருந்து கோமாதா வரியை வசூலிப்பது பற்றி யோசித்து வருகிறேன்'' என்றும் அவர் கூறி யுள்ளார்.
"கிடந்தது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை" என்ற கதையாக அல்லவா இருக்கிறது.
மனிதர்களைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் மாட்டைப்பற்றி - அதிலும் பசு மாட்டைப் பற்றித்தான் (கோமாதா ஆயிற்றே!) பா.ஜ.க. ஆட்சிக்குக் கவலை.
பசு மாடு அளிக்கும் பால், சாணம், மூத்திரம் இவற்றில் அருமைப் பெருமைகளைப் புகழ் பாடுகிறது.
சாணமும், மூத்திரமும் மாட்டின் கழிவுப் பொருள்கள் என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பது அசல் காட்டுவிலங்காண்டித்தனம் அல்லவா?
பசுவின் கோமியம் (மூத்திரம் என்று சொல்ல மாட்டார்கள்) சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறதாம். ஆனால் இது குறித்து அறிவியல் என்ன சொல்லுகிறது என்பதுதான் முக்கியமாகும்.
பசு மாட்டின் மூத்திரம் கிருமிகளைக் கொல்லுகிறது - மருத்துவமனைகளில் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது (Disinfectant) - இது பயிரை வளர்க்கிறது - நோய்களைத் தீர்க்கிறது என்று அளந்து கொட்டியவர்கள் முகத்திரையைக் கிழிக்கும் அறிவியல் தகவல் 'இந்து' ஏட்டில் (31.1.2019) வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு சதவிகிதம் பலன் அவற்றால் என்றால், பல மடங்கு இந்த மாட்டு மூத்திரத்தால் ஏற்படும் 'நைட்ரஜன்' கூட்டுப் பொருளான N2O என்னும் Nitrous oxide emissions என்பது வெப்ப சலனத்தை உருவாக்கக் காரணமான கரியமிலவாயுவைவிட 300 மடங்கு அதிகமான ஆபத்தை உருவாக்கக் கூடிய சக்தியுள்ளதாக உள்ளது என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பதால், குறிப்பாக இந்த நைட்ரஸ் ஆக்சைடுமூலம் ஏற்படும் தீமை மிக அதிகம் என்பதை, கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, டிரினிடாட், டோபோகோ ஆகிய நாடுகளின் ஆய்வுகள் தொகுப்பாக 'Scientific Reports' (விஞ்ஞான அறிக்கைகள்) என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது!
இந்த அறிவியல் அறிக்கைகள்மூலம் பசு மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம் உள்பட) எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பது புரிகிறதா?
எனவே, கோமாதா மூத்திரம் - உலக அழிவு - வெப்ப சலனம்மூலம் ஏற்பட முக்கிய காரணம் என்றால், இதைத் தடுப்பது - மாற்றுவதுபற்றி விஞ்ஞானிகள் கூடிக் கலந்து தடுப்புப் பரிகாரம் தேடவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.
டில்லி இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜி துறை பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.இரகுராம் இதுபற்றி மேலும் ஆய்வுகளும், மாற்றுப் பரிகாரம் மற்றும் தடுப்புக்கானவழிவகைகளைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
மதப் போதையில் ஆபத்தான ஒரு வேலையில் இறங்கும் பா.ஜ.க. ஆட்சியின் போக்கைத் தடுத்து நிறுத்த வேண்டும். விஞ்ஞானிகள் கூட்டறிக்கையை வெளியிட வேண்டும் - தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் அணுக வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டுகோளாகும்.
No comments:
Post a Comment