கடவுளின் வன்முறை!
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து.
வன்முறையைத் தூண்டும் இத்தகு நிகழ்ச்சிகளை நிரந்தரமாகவே ரத்து செய்வது அவசியம்.
ஓங்கிக் கைதட்டலாம்!
பீகார் தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் இடதுசாரிகள் உற்சாகம்.
வரவேற்கத்தக்க வெற்றியே! மதவாத அரசியல் தலைதூக்கும் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் செல்வாக்கு ஓங்குவது ஓங்கிக் கைதட்டி வரவேற்கத்தக்கதாகும்.
எத்தனை மடங்கு பயன்!
மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் 395 பேர் பயன் அடைவர்.
நமக்குக் கிடைக்கவேண்டிய 50 விழுக்காடு இடங்கள் கிடைத்திருந்தால் எத்தனை மடங்கு மாணவர்கள் பயன்பெறுவர் என்பதைப் பெருக்கிப் பார்க்க வேண்டாமா? மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கடுமையாகப் போராடியிருக்க வேண்டாமா?
சமரசம் உலவும் இடம்!
எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்: - நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சர்
பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்ததும், கூட்டு சேர்ந்து ஆட்சி அமைப்பதையும் விடவா பெரிய சமரசம் தேவை.
மூலத்தோடு போராட வேண்டாமா?
தீண்டாமை, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம் போன்ற விஷயங்களில் பெரியாருக்கும், எங்களுக்கும் முரண்பாடில்லை: - வானதி சீனிவாசன், 'ஆனந்தவிகடன்', 18.11.2020.
தீண்டாமை க்ஷேமகரமானது என்று இந்து மத மடாதிபதி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறுகிறார். தீண்டாமை ஜாதியிலிருந்து முகிழ்த்தது. ஜாதிக்கு - வருணதர்மத்திற்கு கீதையும், மனுஸ்மிருதி போன்றவையும் மூலமாக இருக்கின்றன. இவற்றில் கை வைக்காமல் தீண்டாமையை எப்படி ஒழிப்பது?
பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது?
தீபாவளி - கூட்டம் அதிகம்தான். ஆனால், வியாபாரம்தான் இல்லை: - சாலையோர வியாபாரிகள்.
நாட்டின் பொருளாதாரம் ரொம்பதான் வளர்ந்திருக்கிறது. சந்தேகம் இருந்தால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் கேட்டுப் பாருங்கள்.
தொற்று பரவும் விதம்
செல்லமாக வளர்க்கப்படும் தன் நாய்க்கு முதியவர் ஒருவர் வளைகாப்பு நடத்தியுள்ளார்.
மூடத்தனம் என்னும் தொற்று மனிதரிடமிருந்து விலங்குகளுக்கும் பரவுகிறதோ!
நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கை!
கரோனா பாதித்தவர்களில் 60% பேர் நீரிழிவு நோயாளிகள்.
நீரிழிவு நோயாளிகள் கொஞ்சம் அரிசி உணவைக் குறைத்துக் கொண்டு மற்றதைக் கை கொள்ளுதல் நல்லதே!
உ.பி.யை விடவா?
பீகார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் பழைய 'அடாவடி' அரசியல் திரும்பும்: - 'தினமணி' தலையங்கம்.
பா.ஜ.க. ஆளும் உ..பி.யில் நாளும் நடக்கும் அராஜக அணிவகுப்புகளை விடவா?
நோட்டாக்கள் ஏழு லட்சம்!
பீகாரில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் நோட்டாவுக்கு வாக்களிப்பு.
ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் கேலிக் கூத்துகள், அராஜகங்கள் மீதான வெறுப்பு காரணமாக இருக்கலாம். ஆனாலும், வலது சாரி பிற்போக்கு சக்திகளை ஊக்குவிக்க இது மறைமுகமாக உதவிடுவதாக அமையாதா? மறுபரிசீலனை செய்க!.
சரியான போட்டி!
திருவண்ணாமலை தீபத் திருவிழா - உயர்நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்.
கடவுள்களும் நீதிமன்றத்தின் அதிகாரத்திலிருந்து தப்ப முடியவில்லை.
கடவுளா - கரோனாவா?
சபாஷ்! சரியான போட்டி!
ஜெயம் கரோனா பக்கமே!
No comments:
Post a Comment