உதவிய அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்கு
மும்பை, நவ. 30- பொம்மை என்ற பெயரில் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய உதவிய சுங்கத் துறை அதிகாரிகள் மீது சிபிஅய் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஆறு சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிபிஅய் விசாரணை நடத்தவுள்ளது.
இதுகுறித்து சிபிஅய் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016, 2017 ஆண்டுகளுக்கு இடையே மும்பை சரக்கு விமான முனையத்தில் பணிபுரிந்து வந்த ஆறு சுங்கத் துறை அதிகாரிகள், நிஜ துப்பாக்கிகளை பொம்மை துப்பாக்கிகள் என ஆவணத்தில் மாற்றி இறக்குமதி செய்ய உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்லாமல் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளும் இருப்பதாக சிபிஅய் தெரிவித்துள்ளது. எனவே, ஊழல் தடுப்பு சட்டம், ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஅய் கூறுகிறது.
2016ஆம் ஆண்டில், 6 சுங்கத் துறை அதிகாரி களின் உதவியுடன் பஜாஜ் ஆட்டோமோட்டிவ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தால் குறைந்தது 255 நிஜ துப்பாக்கிகளாவது பொம்மை துப்பாக்கிகள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சிபிஅய் தெரிவித்துள்ளது.
இப்படி இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளை சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவு சோதனை செய்ததில் அவற்றில் நிஜ துப்பாக்கிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு சிபிஅய்க்கு மாற்றப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் 9 லட்சம் ரூபாய் ரொக்கமும், பல ஆவணங்களும் சிக்கின. மேலும், இறக்குமதி கொள்கைகளை மீறியதால் இறக்குமதியாளருக்கு லாபமும், இந்திய அரசுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாக சிபிஅய் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment