அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடுப் பிரச்சினை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 12, 2020

அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடுப் பிரச்சினை

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்குப் மருத்துவ உயர் சிறப்புக் கல்வியில், முதுநிலைக் கல்விகளில் 50 விழுக்காடு இடங்கள் உள்ஒதுக்கீடு என்பது நீண்ட காலமாக தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த ஒன்றே! இது 2016ஆம் ஆண்டு வரை இருந்து வந்திருக்கிறது.


அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புப் பணி என்பது எத்தகையது என்பதை கரோனா காலத்தில் மிகச் சரியாகவே அறிய முடிகிறது.


குளிர்ப்பிரதேசங்களிலும், மலைப் பகுதிகளிலும் கூட அரசு மருத்துவர்கள் பணியாற்றுவது சாதாரணமானதல்ல.


அவர்களின் இந்த அரிய சேவையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலைக் கல்வி, உயர் சிறப்புக் கல்வி (Super Speciality) பயில 50 விழுக்காடு இடங்கள் என்பது தமிழ்நாட்டில் இருந்து வந்த நடைமுறை.


மாநில அரசின் 50 விழுக்காடு இடங்களைப் பெறும் அரசு மருத்துவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புரங்களைச் சார்ந்தவர்கள் தானே.


கல்விக்குப் பிறகு இங்கேயே தங்கிப் பணியாற்றக் கூடியவர்கள்!


பொதுவாக சமூகநீதி என்றாலே ஒவ்வாமை என்னும் நோய்க்குப் பலியாகும்  -இரத்த ஓட்டமுள்ள மத்திய பா.ஜ.க. என்ற பார்ப்பன ஆதிக்க ஆட்சி அதில் கை வைக்காமல் இருக்குமா?


மாநில மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்களை வழிப்பறி செய்வது போல மத்திய அரசு முழுச் சுளையாக தோலோடு விழுங்குவதுபோல 100 சதவீத இடங்களையும் எடுத்துக் கொள்வதும், மாநிலத்தில் நடைமுறையில் இருந்த 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை மறுப்பதும் அசல் முதலாளித்துவ, எஜமானத்துவ, உயர்ஜாதி மனோ நிலை தான் - அதில் அய்யமே இல்லை!



  1. மருத்துவப் பட்டமேற்படிப்பிலும் (MD/MS) உயர் சிறப்பு மேற்படிப்பிலும் (DM/Mch) 2017ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.

  2. அன்று வரை உயர் சிறப்பு மேற்படிப்பு இடங்கள் அனைத்தும் தமிழக மருத்துவர்களுக்கு வழங்கும் முறை இருந்தது.

  3. 2017ஆம் ஆண்டு முதல் நூறு சதவீத உயர் சிறப்பு மேற்படிப்பு இடங்களும் மத்திய அரசுக்கு தாரை வார்க்கப்பட்டது.

  4. 2017ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசும், விசிமியும் ரத்து செய்தன.

  5. 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கமும் (TNMOA), சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கமும் (DASE) இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தின.தமிழக அரசு இதற்கு நிரந்தர தீர்வு காணவில்லை.

  6. 2018ஆம் ஆண்டு TNMOA  சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

  7. 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அய்ந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவது மாநில அரசின் உரிமை, இதில் MCI தலையிட முடியாது என்ற வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

  8. இந்த தீர்ப்பை மய்யமாக வைத்து முதலில் கேரள மாநிலத்தில் உயர் சிறப்பு மேற்படிப்பில் அரசு மருத்துவர் களுக்கான இடஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்டது.

  9. இந்த தீர்ப்பையும் , கேரள அரசின் சட்டத்தையும் எதிர்த்து வட மாநில மருத்துவர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளனர்.

  10. தமிழக அரசு இப்பொழுது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.


மருத்துவ உயர் சிறப்புக் கல்வி என்பது - தமிழ்நாட்டில் 192 இடங்கள் உள்ளன. இந்தியாவில் 10 மாநிலங்களில் ஓர் இடம்கூட இல்லை. இந்த நிலையில் அதிக பொருள் செலவு செய்து தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவ உயர் கல்வி பயில வேண்டும் என்று எண்ணுவது - திட்டமிடுவது பஞ்சமா பாதகமா?


மக்கள் நல அரசு என்பது இத்தகைய வழிகளில் திட்டமிடுவதும் செயல்படுவதும்தானே சரியானது!


சிறப்பாக செயல்படும் மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் கொள்கையா?


'நீட்'டைக் கொண்டு வந்தது நாங்கள் அல்ல - காங்கிரஸ் ஆட்சி தான் என்று சொல்லித் தப்பிக்கும் மத்திய பா.ஜ.க. என்ற பார்ப்பன அரசு - அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றை தட்டிப் பறிப்பது எந்த அரசு?


'நீ அரிசி கொண்டுவா - நான் உமி கொண்டு வருவேன், ஊதி ஊதி தின்னலாம்!' என்ற ஏமாற்றுத் தந்திரம் ஒரு மத்திய அரசுக்கு அழகல்ல.


மாநில அரசு  முதுகெலும்போடு  - சரியாக செயல்படட்டும் - தமிழ்நாட்டு மக்கள் கட்சிகளை மறந்து உறு துணையாக இருப்பார்கள்.


 


No comments:

Post a Comment