ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து: தென்கொரியாவுடன் ரஷ்யா ஒப்பந்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து: தென்கொரியாவுடன் ரஷ்யா ஒப்பந்தம்

மாஸ்கோ,நவ.14 ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்தை ஆண்டுக்கு 150 மில்லியன் டோஸ் களுக்கு அதிகமாக உற்பத்தி செய்வது தொடர்பாக தென்கொரியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3ஆம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.


இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத் தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.


இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி யுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் ரஷ்யாவில் கரோனா தடுப்பூசி மருந்து ஸ்புட்னிக் -5 அய்ப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 92 விழுக்காடு பயனுள்ளதாக இருப்பதாக இறுதி மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 16 ஆயிரம் பேர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தமாக 40ஆயிரம் பேர் இக்கரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று ரஷ்யா சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தது.


இந்த நிலையில் தென்கொரியாவுடன் இணைந்து ஸ்புட்னிக் - 5 கரோனா தடுப்பு மருந்தை ஆண்டுக்கு 150 மில்லியன் டோஸ்களுக்கு உற் பத்தி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தென்கொரியாவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், ரஷ்யாவின் தடுப்பு மருந்து இன்னும் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட வில்லை.


No comments:

Post a Comment