புதுடில்லி,நவ.14 அடுத்த மாத இறுதிக்குள் அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் 10 கோடி கரோனா தடுப்பூசி இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளன. இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனிகா, அமெரிக்காவின் நோவாவாக்ஸ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் உள்பட 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. சீரம் நிறுவனம் கடந்த 2 மாதங்களில் மட்டும் 4 கோடி கரோனா தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.
இந்நிலையில், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடனான கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும், தொற்றை கட்டுப்படுத்துவதில் அஸ்ட்ராஜெனிகா, நோவாவாக்ஸ் தடுப்பூசிகள் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பலன் அளித்து வருவதாகவும் சீரம் நிறுவனத் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ``அஸ்ட்ரா ஜெனிகாவுடன் இணைந்து 100 கோடி கரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அவசர அனுமதி அரசிடம் இருந்து டிசம்பர் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதனையொட்டி, அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்திடம் இருந்து டிசம்பர் இறுதிக்குள் 10 கோடி தடுப்பூசிகளை பெறுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.
No comments:
Post a Comment