பெண்களை இழிவு செய்தால் சட்டம் தண்டிக்காதா?
இதிகாசங்கள், புராணங்களில் உள்ள ஆபாச மூட்டைகளை மக்கள் மத்தியில் கொட்டி மக்களின் அறிவையும், ஒழுக்கத்தையும் செம்மைப்படுத்தினால் - அது மதத்தைப் புண்படுத்துவதாகும் என்று கூக்குரல்போடுவதும், சட்டம் பாய்வதும், சிறையில் தள்ளுவதும் வாடிக்கையாகி விட்டது.
அதே நேரத்தில் நாட்டின் குடிமக்களாகிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பகுதியினராகிய பெண்களை இழிவுபடுத்தினால், கொச்சைப்படுத்தி எழுதினால் சட்டம் அங்கே பாயாதா? சப்தநாடியும் ஒடுங்கி சட்டம் பதுங்கி விடுமா என்ற கேள்வி முக்கியமானதாகும்.
நியாயமாக மனுதர்ம சாத்திரம், கீதை முதலியவை மனித உரிமைக் கண்ணோட்டத்திலும், பெண்ணுரிமைக் கண்ணோட்டத்திலும் தடை செய்யப்பட வேண்டியவையே! மதம் என்ற மூடு திரை அவைகளைப் பாதுகாக்கின்றன என்பதையும் கடந்து, புனிதம் என்றும் போற்றும் அவலம் - இந்த சுதந்திர இந்தியாவில்!
பார்ப்பன வார ஏடான 'துக்ளக்' 'சோ' ராமசாமி காலத்திலும் சரி, சாமிநாதன் குருமூர்த்தியின் இந்தக் காலக் கட்டத்திலும் சரி, பெண்களை இழிவுபடுத்துவதும், அவர்களின் உரிமை உணர்வு களைப் பூட்சுக் காலால் மிதிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
எடுத்துக்காட்டாக இந்த வார 'துக்ளக்'கிலும் (7.10.2020). பெண்களைக் கேவலப்படுத்தும் பதில்கள் இடம் பெற்றுள்ளன.
கேள்வி: பெண்கள் உரிமை பாதுகாப்பு எந்த அளவில் இருக்கிறது?
பதில்: உரிமை பெற்ற பெண்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பாதுகாப்பு தேவை - என்கிற அளவுக்கு அவர்கள் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
இந்தப் பதிலில் பதுங்கி இருக்கும் மனுதர்மப் பார்ப்பன நச்சுப் பல்லை புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் உரிமை பெற்றால் ஆண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றுதானே சொல்கிறார். பார்ப்பனர்கள் வீட்டில் தானே அதிகப் பெண்கள் படிக்கிறார்கள் - அங்கெல்லாம் ஆண்கள், பெண்களுக்குத் துவைத்துப் போடுகிறார்களா? (தேவைப்படும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது வேறு)
இன்னொரு கேள்வி - பதில் வித்தாரமாக
கேள்வி: பெண் சுதந்திரத்தின் பக்க விளைவுகள் பற்றி?
பதில்: அமெரிக்காவில் ஒருபாதி முதல் திருமணங்களும், 75 சதவிகிதம் இரண்டாவது, மூன்றாவது திருமணங்களும் விவகாரத்தில் முடிகின்றன. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளில் 41 சதவிகிதம் (பள்ளிக்கூடம் போகும் மாணவிகள் உள்பட) திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கின்றன. பிரிட்டனில் 49 சதவிகிதம், நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் திருமணங்களே அரிதாகி, திருமணம் இல்லாமல் ஆண் - பெண் சேர்ந்திருப்பது வழக்கமாகி விட்டது. எல்லை மீறிய பெண் சுதந்திரத்தின் விளைவு இது. பக்க விளைவுகளுக்கு வருவோம். இப்படி குடும்பங்கள் அழிவதால் குடும்பப் பொறுப்புகள் அரசாங்கத்தின் மீது விழுகின்றன. குடும்பத்தைச் சார்ந்து இருக்கும் வயோதிகர்கள், சிறுவர்கள், நோயுற்றவர்கள் அனாதையாகி, அரசாங்கத்தின் பாரமாக மாறுகிறார்கள். அரசாங்கத்துக்கு வரி கட்டிவிட்டால் கடமை முடிந்தது என்று சட்டமும்,சமுதாயமும் ஏற்றுக் கொண்டு விட்டது. அதனால் அரசாங்கத்துக்கு இன்று வருமானம் அதிகமாகிறது. ஆனால், எதிர்காலத்தில் பாரம் ஏறுகிறது.
மறுபக்கம், பொறுப்பற்ற வாழ்க்கையால், பாதுகாப்பான சேமிப்பு குறைந்து, அதிக லாபம் ஈட்டுவதற்காக மக்கள் பங்கு மார்க்கெட் போன்ற ஆபத்தான சேமிப்புகளில் பணத்தைப் போடுகிறார்கள். அதனால் பொருளாதாரம் வேகமாகவும் வளருகிறது. குடும்பங்களை அழித்து பொருளாதார வளர்ச்சி. அதன் அடிப்படையே அளவற்ற பெண், ஆண் சுதந்திம்; அதனால் அழியும் குடும்பங்கள். பெண் சுதந்திரத்தால் குழந்தைகள் பெறுவது குறைந்து, அதன் விளைவாக இறுதியில் பொருளாதாரமே அழியும் என்று கூறுகிறது பிரிட்டனின் 'கார்டியன்' பத்திரிகை (23.8.2015). இந்த வக்கிரமான சமூக, பொருளாதார முன்னேற்றம் எங்கு போய் முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். அதை நாமும் கடைப்பிடிக்க ஆசைப்படுகிறோம்.
(துக்ளக்' 7.10.2020 பக்கம் 22,23).
பெண்கள்பற்றி எவ்வளவுக் கேவலமான சித்தரிப்பு. எந்த நாடாகவும் இருக்கட்டும்; விவாகரத்து என்றால் அதற்குப் பெண்கள் மட்டும்தான் காரணமா? (விவாகரத்து என்பது குற்றம் என்று யார் சொன்னது? அக்கிரகாரத்தில் விவாகரத்துகள் கிடையவே கிடையாதா?)
பெண் சுதந்திரத்தால் குழந்தைகள் பெறுவது குறைந்து, அதன் விளைவாக இறுதியில் பொருளாதாரம் அழியும் என்று பிரிட்டன் பத்திரிகை கூறுகிறதாம். 'துக்ளக்' போன்ற பெண்களை மட்டம் தட்டும் ஏடுகள் வேறு நாடுகளிலும் இருக்கக் கூடாதா?
வக்கிரபுத்தியும், முட்டாள்தனமும், தமிழ்நாட்டுக்கும், இந்தியா வுக்கும் மட்டும்தான் சொந்தமா?
பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்தால், குழந்தைகள் பெறுவது குறைந்தால் வக்கிரமான சமூக, பொருளாதார முன்னேற்றம் எங்கு போய் முடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று குருமூர்த்தி எனும் 'பொருளாதார புளியோதரை' எழுதுகிறது.
மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கத்தில் அரசே சொல்லிக் கொண்டுள்ளது. இன்னொரு பக்கத்தில் அதற்கு நேர் எதிரான கருத்துக் கூறுகிறது இந்தப் பொருளாதார புளி!
குருமூர்த்தியின் வாத்தியாரான சோ என்ன எழுதுகிறார் தெரியுமா?
கேள்வி: ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும் போது உங்கள் மனம் மட்டும் அவர்கள்மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?
சோவின் பதில்: பெண்ணைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா? பேயா, பிசாசா?
('துக்ளக்', 14.9.2005)
தங்களது தாய் ஒரு பெண்ணாக இருந்தும், மனைவியும், மகளும் பெண்ணாக இருந்தும் இப்படி எழுதுபவர்கள் அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் 'பேய்'தான், 'பிசாசு'தான் - அப்படித்தானே.
வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்று கூறிய சங்கராச்சாரியாரின் சவுண்டித்தன சீடர்களை நம் பெண்கள் என்று அடையாளம் காணப்போகிறார்களோ!
No comments:
Post a Comment