மதுரை, அக். 30- மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதலே அமல்படுத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் இராமகிருஷ்ணன், மாணவர் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் நேற்று (29.10.2020) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடும்போது, ‘‘உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் முடி வெடுக்க 3 முதல் 4 வார அவகாசம் தேவை என ஆளுநர் தெரிவித்து உள்ளார்’’ என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைவாக முடிவெடுக்க வேண்டும். பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு அவசர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கும்போது முடிவெடுக்க மேலும் அவகாசம் தேவையா?
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் முடி வெடுக்க வேண்டும். இதுபோன்ற சூழல்கள் வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநருக்கு உத்தரவிடவோ, காலக்கெடு விதிக்கவோ முடியாது என்பது நீதிமன்றத்துக்கும் தெரியும். விதிப்படி ஆளுநர் எந்த நீதி மன்றத்துக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அரசுப் பள்ளி மாணவர் களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும். அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்.
கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும், அரசுப் பள்ளிகளிலேயே பயில்கின்றனர். அவர்களின் நலனுக்காகவே இந்த மசோதா நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது மருத்துவக் கல்லூரிகளில் 300 முதல் 400 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை நவ.2-க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்று இந்த விவாகரத்தில் நல்ல முடிவு தெரியவருமென நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment