செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 2, 2020

செய்தியும், சிந்தனையும்....!

வயிற்றில் அடிக்கலாமா?


நூறு நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துமாறு திருவள்ளூர் மாவட்டம் நாகப்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் போராட்டம்.


காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் கிராமப் பகுதிகளில் மக்களை வாழ வைத்த திட்டம் இது. அதிலும் கைவைத்தால் எப்படி? வயிற்றில் அடிக்கலாமா?


சைபர் மார்க்குதான்!


இந்தியாவில் 2019 ஆம் ஆண்டுக்கான சைபர் குற்றங்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


2018 இல் 27,248 ஆக இருந்த சைபர் குற்றங்கள் 2019 இல் 44,546 ஆக அதிகரிப்பு (63.5 விழுக்காடு அதிகம்).


நாளும் இப்படி அக்கப் போர்களும், அவதூறுகளும் இணையதளங்களில் மூட்டிவிடும் தீயாக அருவருப்பாக 'பவனி' வருகின்றன. ஆனால், இவற்றின்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குக் கொடுக்கும் 'மார்க்' சைபர்தான் - சைபர் 'கிரைம்' என்ற பெயர் பொருத்தம்தானே!


அரசுக்கு ‘அனுதாபம்!'


உ.பி.யில் ராகுல் காந்தி, பிரியங்கா கைது.


உ.பி.யில் பழங்குடி இளம்பெண்- கயவர்களின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு (செப்டம்பர் 14) ஆளான பெண் கடந்த செவ்வாயன்று மரணம் அடைந்தார். அந்தப் பெண்ணின் உடலைப் பெற்றோர்களிடமும் கூட ஒப்படைக்காமல் காவல்துறையினரால் இரவோடு இரவாக எரிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தப் பெண்ணின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்காவை காவல்துறை கைது செய்துள்ளது. (ராகுல் காந்தி, காவல்துறையினரால் கீழே தள்ளப்பட்டாராம்).


அனுதாபம் தெரிவிக்கக் கூட அனுமதியளிக்காத உ.பி. பி.ஜே.பி. சாமியார் ஆட்சிக்கு அனுதாபம் தெரிவிக்கும் காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போமாக!


என்ன நடவடிக்கை?


துர்க்கை அம்மன் போல வேடமிட்டு ஒளிப்படத்தை வெளியிட்ட நடிகை நுஸ்ரத் ஜகான் எம்.பி.,க்கு கொலை மிரட்டலாம்!


மத அடிப்படைவாதிகள் கொலை மிரட்டலை விடுத்துள்ளனர். பெண் என்பதாலா? வேறு மதத்தவர் என்பதாலா? கார்கில் பிள்ளையார் என்றும் - கரோனா பிள்ளையார் என்றும் 'டிசைன் டிசைனாக' பிள்ளையாரை உலவவிட்ட இந்துப் பக்தர்கள் மீது என்ன நடவடிக்கையாம்?


தமிழுக்கு இடமில்லை!


காந்தியார் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் புதிர் போட்டியில் தமிழுக்கு இடமில்லை.


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள என்.சி.இ.ஆர்.டி. அனுப்பிய சுற்றறிக்கையைத் தமிழக அரசும் அப்படியே கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.


மத்திய பி.ஜே.பி. அரசு ஒன்றைச் சொன்னால், அப்படியே ''கண்மூடித்தனமாக'' அ.தி.மு.க. அரசு பின்பற்றுவதால், சுற்றறிக்கையைப் படிக்காமல்கூட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்புகிறது என்றால், இதனை என் சொல்ல! ஆள்வது அ.தி.மு.க.வா - பா.ஜ.க.வா?


No comments:

Post a Comment