அக்டோபர் 5 ஆம் தேதி கழக மகளிரணி - பாசறையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் தாழ்த்தப்பட்டவர்கள் குறிப்பாக அச்சமூகப் பெண்கள் வன்கொடுமைக்கும், கொலைக்கும் ஆளாவதைக் கண்டித்து வரும் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்கள் நாளும் பாலியல் வன்கொடுமைக்கும் - அதன் காரணமாக கொலைக்கும் ஆளாகும் குரூரம் சர்வசாதாரணமாகி விட்டது.
பெண்களைப் பஞ்சமர்களுக்கும் கீழாக வைத்துள்ள இந்துத்துவாவைக் கொள்கையாகக் கொண்ட பி.ஜே.பி. ஆட்சியில் இப்படித்தான் நடக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப் பட்டவர்கள் தாக்கப்படுவது - கொலை செய் யப்படுவது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பெண்கள் - அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
லைசென்ஸ்
கொடுக்கப்பட்டுள்ளதா?
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் இத்த கைய கொடுமைகளுக்கு லைசென்ஸ் கொடுக் கப்பட்டதோ என்று கருதும் அளவுக்கு சற்றும் அச்சமின்றி சர்வ சாதாரணமாக ஒடுக்கப்பட்ட சமூக பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்துவதும், பாதிக்கப்பட்ட பெண்களை அவர்களின் வீட்டுக்குமுன் வீசி எறிவதும் எதைக் காட்டுகிறது?
ஏதோ குப்பைகளைப் போல பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் களை வீசி எறிவது - எதைக் காட்டுகிறது? சர்வதேச சமுதாயம் இந்தியாவைப்பற்றி என்ன நினைக்கும் என்பதைப்பற்றியெல்லாம் பி.ஜே.பி. அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அன்று குஜராத்தில் என்ன நடந்தது?
இன்றைய பிரதமர் குஜராத்தில் முதல மைச்சராக இருந்தபோது, முஸ்லீம் பெண்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்பட்டனர்?
நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்தச் சிசுவை உருவி தீயில் தூக்கிப் போட்டு குதூகலித்து ஆட்டம் போடவில்லையா?
இவ்வளவுக்கும் குஜராத் மாநில சமூகநலத் துறை அமைச்சராக இருந்த மாயா கோட்டானி ஒரு பெண்ணாக இருந்தும், அவர்தான் இந்தக் கொலைப் பாதகத்துக்குப் பின்னணியில் இருந்தார். இந்தக் கலவரத்திற்குக் காரணம் என்று கூறி, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், இப்பொழுது, அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டு கைவீசி ராஜநடை போட்டு வருகிறார்.
ஒரு சாமியாரிணியின் கூச்சல்!
பி.ஜே.பி.யைச் சேர்ந்த பெண் சாமியாரிணி சாத்வி ரிதம்பரா, ‘இந்து ஆண்களே, முஸ்லிம் பெண்களின் வயிற்றில் இந்துக் கரு ஜனிக்கச் செய்யுங்கள்' என்று வெட்கம்கெட்ட முறையில் பேசவில்லையா?
இந்து மதவெறிப் போதைதான் ஒரு பெண்ணாக இருந்தும் இப்படிப் பேசுகிறோமே என்ற சிந்தனையைத் தடுத்துள்ளது.
உ.பி. நிகழ்வுகளை இந்தப் பின்னணியிலும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவே
கிளர்ந்தெழவேண்டும்!
இதனை ஒரு கட்சிப் பிரச்சினையாகவோ, மதப் பிரச்சினையாகவோ, ஏன் வெறும் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவோ ஆண்களுக்குச் சம்பந்தப்பட்டது அன்று என்றோ பார்க்காமல், ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினை என்று கருதி, இந்தியாவே கிளர்ந்து எழவேண்டிய ஒன்றாகும்.
நமது தாய்க்குலத்திற்கு ஏற்பட்டு இருக்கும் இந்தக் கேடுகெட்ட சவாலைச் சந்திக்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் சமூகநீதிப் பிரச்சினைதான்.
முதற்கட்டமாக பெண்கள் விடுதலைக்காக அரிமா குரல் கொடுத்த தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் எதிர்ப்புக் குரல் வெடிக்க வேண்டும்.
5 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
வரும் 5.10.2020 திங்கள் காலை 10 மணிக்கு திராவிடர் கழக மகளிர், மகளிர்ப் பாசறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப் பாட்டம் நடைபெறும். மகளிரணி, மகளிர்ப் பாசறைப் பொறுப்பாளர்கள் தலைமை தாங்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்கவேண்டுகின்றோம்.
குறிப்பிட்ட இடத்தில் (வீட்டுக்கு முன் பாகக்கூட இருக்கலாம்) கழகக் கொடி கைகளில் ஏந்தி முகக்கவசம் அணிந்து, இடைவெளி விட்டு, உ.பி.யில் நடந்துள்ள காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
‘‘பெண்ணடிமை தீருமட்டும்
பேசும் திருநாட்டு
மண்ணடிமைத் தீருவது முயற்கொம்பே''
என்ற புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகள் ஒலிக்கட்டும்!
பெண் விடுதலைக் காவலர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைப் போர் முரசம் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.10.2020
No comments:
Post a Comment