தென்னகம் தந்தை பெரியாரின் அயராத உழைப்பால் பல சாதனைகளை கண்டறிந்திருந்தாலும் வட புலத்து மக்களுக்கு இப்போது பெரியாரின் தொண்டு அத்தியாவசிய தேவையாகிவிட்டது.
எனவேதான் தந்தை பெரியாரின் கருத்துக்கள், மனித உரிமைக்கு அவர் கொடுத்த குரல் இப்போது பாராளுமன்றத்தில் பல பாராளுமன்ற உறுப்பினர்களால் ஒலிக்கப்படுகிறது. அதிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மக்களின் மேம்பாட்டுக்கு உரிமைக் குரல் கொடுக்க எப்போதும் தயங்குவது இல்லை.
மண்டல் கமிஷன் அறிக்கையை பாராளுமன்றத்தில் வைப்பதற்கும் அதன் கோட்பாடுகளை ஏற்பதற்கும் கட்சி பேதமின்றி பல உறுப்பினர்கள் வெளியிலிருந்தும் உள்ளேயும் பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிலே எனது பாராளுமன்ற நண்பர்கள் ஜெய்பால் சிங் கால்யப், ஜெக்பால் சிங், மேத்தா சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், ராம்விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த நண்பர்கள் பல கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், பிற்படுத்தப்பட்டேர், தாழ்த்தப்பட்டேர், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கென, பெரியாரின் அறிவுச்சுடர் ஏந்தி வடபுலத்திலே மக்களின் உரிமைக்காக போராடி வருகிறார்கள்.
எனது நண்பர் ராம் விலாஸ் பஸ்வான் பாட்னாவில் ஒரு பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்தப் போவதாகவும் அதிலே திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ள இருக்கும்போது தாங்களும் உடன் வரவேண்டுமென கேட்டபடி - அக். 9ஆம் தேதி பாட்னாவில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ள உடன் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்தார்கள்.
அன்று மாலை பாட்னா காந்தி மைதானத்தில் பெரியதொரு மாநாட்டினை நண்பர்கள் ராம்விலாஸ் பஸ்வானும் மற்றவர்களும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பல பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்ட பீகார் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சம் மக்களுக்கு மேல் கூடியிருந்தார்கள். அதிலே குறிப்பாக பல இளைஞர்களை காண முடிந்தது.
மாநாட்டினை பஸ்வான் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது மழை பெய்யத் தொடங்கியது. மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அனைவரும் நனைந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு கூட்டத்தினர் மழைக்காக ஓடாமல் நனைந்தபடியே அமர்ந்திருந்த கட்டுப்பாடு - அவர்கள் ஒரு ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைப் போல் காண முடிந்தது.
பொதுச் செயலாளர் பேசத் தொடங்கியதும் பேச்சு வேகத்துக்கு ஈடு கொடுத்த கடும் மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது. கடும் காற்றும் வீசத் தொடங்கியது.
அவரின் பேச்சு என்றும் கேட்காத அளவுக்கு - புயல் வேக பேச்சாக அமைந்தது. அதனை இந்தியில் மொழி பெயர்த்து கூறும் போது உணர்ச்சியுடன் ஆரவாரம் செய்ய தொடங்கினார்கள். மழை அதிகமாகி தரை முழுதும் வெள்ளமாக ஓடிய போதும் அந்த மக்கள் கலையாமல் இருந்த கட்டுப்பாடு வளர்ச்சி புல்லரிக்கச் செய்துவிட்டது.
மாநாடு முடியும் வரை மழை பெய்தும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தனர். மாநாட்டைப் பற்றிக் குறிப்பிட்ட திரு.கர்பூரிதாகூர் பேசும் போது "எனக்குத் தெரிந்து இந்த அளவு மக்கள் கட்டுப்பாடு கொண்டு இருந்ததைக் காணும் முதல் வாய்ப்பு என்று சொன்னார். மேலும்,
திரு. கர்பூரிதாகூர் பேசும் போது "இவ்வளவு பெரிய மழையிலும் மாநாடு சிறப்பாக அமைந்ததற்குக் காரணம் தந்தை பெரியாரின் கொள்கைகளை தாங்கி வந்து சிறப்புரை யாற்றிய திராவிடர் கழக பொதுச் செயலாளரின் பேச்சுத்தான் காரணம்" என்று குறிப்பிட்டார்.
மாநாட்டுக்குப் பிறகு பல இளைஞர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள் நேரில் வந்து எங்களை சந்தித்து பேசினார்கள்.
இளைஞர்கள் சமுதாய சேவைக்கென பாடுபட முன் வருவதாகவும், அவர்கள் ஏற்பாடு செய்யும் ஒரு மாநாட்டிலும் கலந்து கொள்ள வேண்டுமெனவும் கேட்டார்கள்.
பாட்னா மாநாட்டில் கழகப் பொதுச் செயலாளர் கலந்து கொண்டதும், அவரது உரையும் ஒரு பேருரையாக அமைந்தது. பீகார் மக்களின் உரிமை போராட்டங்கட்கு முதல் பாதை போடப்பட்டதாகத்தான் கருத வேண்டும்.
அந்த மக்களின் உணர்ச்சிமயமான முழக்கங்களும், அவர்கள் விழிப்படைந்துள்ள நிலையும் நிச்சயம் ஒரு நல்ல முடிவினை அடையும் என்பதில் அய்யமில்லை.
தந்தை பெரியாரின் அறிவுச் சுடர் வடபுலத்தில் ஒளிவிடத் தொடங்கிவிட்டது.
20ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் மனித உரிமைகளைப் பெற உறுதி கொள்வோம் என்பதை பாட்னா மாநாடு காட்டிவிட்டது. (விடுதலை 14.10.1983)
No comments:
Post a Comment