புதுடெல்லி, அக்.14 வயதுக்கும், கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை என ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கும், வயதுக்கும் இடையேயான தொடர்பு குறித்து ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் நடத்தினர். இந்த ஆய்வின் முடிவை அவர்கள் ‘சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகையில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ஒரு நபரின் வயது, அவர்கள் கரோனாவால் பாதிக்கப் படுவதை தீர்மானிக்காது. அதாவது வயதுக்கும், கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இல்லை.
* கரோனா அறிகுறிகளின் வளர்ச்சி, நோயின் தீவிரம், இறப்பு ஆகியவை ஒருவரின் வயதை சார்ந்தது.
* அதிக வயதானோர் கரோனாவின் தீவிர அறிகுறிகளுக்கு ஆளாகி இறக்கிறார்கள்.
* வயதானோர் இறக்க 2 அம்சங்கள் அடிப்படை. ஒன்று, அவர்களது கூடுதல் வயதால் எந்த அளவுக்கு தொற்று நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்பது நோயாளிகளின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. இரண்டாவது, அவர்கள் வயது மூப்பால் எந்த அளவுக்கு நோயின் கடுமையான பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது இறப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது.
இவ்வாறு விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறி உள்ளனர்.
வீட்டுக் காவலிலிருந்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விடுவிப்பு
சிறீநகர்,அக்.14, காஷ்மீரில் தடுப்பு காவலில் வைக்கப் பட்டியி ருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெகபூபா முப்தி விடு விக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆக.5 முதல் மெகபூபா
முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், இம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள்மீது பொதுப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. பின்னர், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப் பட்டனர். இந்நிலையில், மெகபூபா முப்தியும் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அவரின் காவலை கடந்த ஆக.1ஆம் தேதி மேலும் 3 மாதத்துக்கு ஜம்மு அரசு நீட்டித்தது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் மக்கள் ஜனநாயக கட்சிதலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியை விடுதலை செய்வது குறித்து அரசு மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் மெகபூபாமுப்தி இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என காஷ்மீர் மாநில நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
நாடு எங்கே போகிறது?
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் முதியவரை சிறுநீர் குடிக்குமாறு கோடரியால் தாக்கிய அவலம்
லக்னோ,அக்.14, உத்தரப்பிரதேச மாநிலம் லாலிட்புர் ரோடா என்ற கிரா மத்தில் 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அம் முதி யவரிடம் ஒரு கோப் பையில் சிறுநீர் வைத்து அதை வலுக்கட்டாயமாக குடிக்க வற்புறுத்தியுள்ளனர்.
அவர் மறுப்பு தெரிவிக்க, கட்டையால் ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர். அதோடு விடாமல், கோடரியால் முதியவரின் மகனையும் அந்த நபர் தாக்கியுள்ளார்.
ஜாதி ஆணவப்போக்கு குறித்து முதியவர் குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியுடன் இருவரை கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய சிலரை தேடி வருவதாக லாலிட்புர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment