எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்!
‘‘ஒப்பற்ற தலைமை'' பொழிவு 5: தமிழர் தலைவர் வரலாற்று உரை
சென்னை, அக். 1- 1944 இல், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்த காலகட்டத்தில், திராவிடர் கழகமாக மாறிய நேரத்தில், பட்டம், பதவி கூடாது - தேர்தலில் நிற்கக்கூடாது - மக்கள் இயக்கமாக இதனை மாற்றிக் காட்டுகிறேன் என்ற திட்டங்களைப் போட்டு, கொள்கைகளை விரிவு படுத்தி, உயர்ந்த பணக்காரர்களுடைய இயக்கம் அல்லது மேல்தட்டில் இருக்கக்கூடிய வர்க்கத்தவரு டைய இயக்கம் என்றெல்லாம் ஒரு பார்வை இருந் ததை அடியோடு மாற்றினார். அதனால் பாதிக்கப் பட்டவர்கள், இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன் படுத்தலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள் என்றார் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘ஒப்பற்ற தலைமை'
கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அருமை கழகக் குடும்பத்தவர்களே மற்றும் இந்தக் காணொலி யில் கலந்துகொள்கின்ற சான்றோர் பெருமக்களே, பகுத்தறிவாளர்களே, தமிழன்பர்களே, பெரியார் பற்றார்களே, இயக்கப் பொறுப்பாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘ஒப்பற்ற தலைமை' என்ற தலைமையில், கடந்த பொழிவுகளில் பல்வேறு அம்சங்களை நாம் ஆராய்ந்து கொண்டு வந்த நிலையில், தந்தை பெரியார் அவர்கள், ஓர் ஒப்பற்ற தலைமை என்றால், அந்தத் தலைமை சந்தித்த துரோகங்கள் இருக்கின்றனவே, அவை நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள்.
எவ்வளவு நம்பிக்கைத் துரோகங்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார்
அந்த வகையில், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய பொதுவாழ்க்கையில், பல்வேறு எதிர்ப்பு களைச் சந்தித்து, எதிர்நீச்சல் அடித்தவர். அவர் சந் தித்த துரோகங்களின் கொடுமைகளைப்பற்றி ஆராய் கின்றபோது, நான் இந்த உரைக்கு ஆயத்தப்படுத்து கின்ற பல்வேறு தரவுகளையெல்லாம் படித்து, ‘குடி அரசு', மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக் கொண்டு வருகின்ற நேரத்தில், ஏற்கெனவே பலமுறை நேரிலும், இளமைக் காலத்திலும் அந்தச் சம்பவங்களை ஓரளவிற்கு நான் அறிந்தவன் என்கிற நினைப்பு இருந்தாலும்கூட, எத்தனைத் துன்பங்கள், எவ்வளவு சங்கடங்கள், இடர்ப்பாடுகள், எவ்வளவு நம்பிக்கைத் துரோகங்களையெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார் என்பதைச் சொல்லும்பொழுது, எனக்கு அதைப் படிப்பதும், உங்களோடு பகிர்ந்துகொள்வ தும்கூட சற்று கடினமான ஒன்றாக இருக்கிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற சொற்பொழிவுகளில், எதிர்ப்புகள், அவர் அடித்த எதிர்நீச்சல்கள் எல்லாம் உற்சாகத்தோடு இருந்தன. ஆனால், இந்தத் துரோ கத்தை அய்யா அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? எப்படி சலிப்பில்லாமல் எதிர்கொண்டார்கள் - அப்படி எதிர்கொண்டது மட்டுமல்ல, எப்படி வென் றார்கள்? இதற்குப் பிறகும் எப்படி இயக்கத்தை வலி மையாக ஆக்கினார்கள்? இவைகளெல்லாம் இயக் கம் நடத்துவோருக்கு மட்டுமல்ல - ஓர் இனத்தின் விடுதலை - ஒரு மொழியின் பண்பாட்டுப் படையெ டுப்பிலிருந்து மீள் உருவாக்கம் - இவற்றுக்கெல்லாம் அந்தத் தத்துவங்கள் பயன்படக் கூடிய அனுபவப் பாடங்கள்.
இவர்கள் அத்தனை பேரையும்
‘நாம்' என்று குறிப்பிடுகிறோம்
ஏதோ, அவை தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்கள் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அதிலிருந்து ‘நாம்' கற்றுக் கொள்ளவேண்டிய, பாடங்கள் அவை. ‘நாம்' என்று சொல்லும்பொழுது, இயக்கம் நடத்துவோர், ‘நாம்' என்று சொல்லும்பொழுது நிறுவனம் நடத்துவோர், ‘நாம்' என்று சொல்லும்பொழுது பரந்த விரிந்த சமு தாய நல விரும்பிகள் இவர்கள் அத்தனை பேரையும் ‘நாம்' என்று குறிப்பிடுகிறோம்.
நோய்த் தடுப்பு சக்தி ஆற்றலை
வளர்த்துக் கொள்வதைப்போல...
குறிப்பாக சொல்லவேண்டுமானால் நண்பர்களே, துரோகத்தை எதிர்கொள்வது என்பது தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதி போன்று ஆயிற்று. அவர் அதை எதிர்கொண்டது நோய்த் தடுப்பு சக்தி ஆற்றலை வளர்த்துக் கொள் வதைப்போல! உடலில் நோய்கள் தாக்கும்பொழுது, அந்த நோய்களைப் புறக்கணிக்கக் கூடிய அளவிற்கு, அதற்கு ஆயத்தமாகி விடுகின்றது என்று கரோனா காலத்தில்கூட அது ஒன்றுதான் தடுப்புக்குச் சரியான முறை என்று அறிவுறுத்தப்படுகிறோம் அல்லவா - அதேபோலதான், தந்தை பெரியார் அவர்கள் பொது வாழ்க்கையில், அந்தத் துரோக எதிர்ப்புச் சக்தியை, தன்னுடைய சிந்தனையிலேயே வரித்துக் கொண்டார், பலப்படுத்திக் கொண்டர்கள். இதைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் தெளிவாகப் பார்க்கவேண்டிய, புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.
நம்முடைய இயக்கத்தினுடைய வரலாற்றைப் பொறுத்தவரையில், தந்தை பெரியாருடைய பொது வாழ்க்கையும், இயக்கமும் வெவ்வேறு அல்ல. இரண் டும் பிரிக்கப்பட முடியாதவை.
காங்கிரசில் இருந்தபொழுது தந்தை பெரியார் அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அங்கேயும் பார்ப்பனர்கள் துரோகம் செய்கிறார்கள்; நம்பிக்கை துரோகம்தான்.
மூன்றாம் ஆண்டு அந்த அமைப்பே
காணாமல் போயிற்று!
வகுப்புரிமைக்காகத்தான் தந்தை பெரியார் அவர் கள் பொதுவாழ்க்கைக்கே வருகிறார். அவருடைய பொதுவாழ்க்கையைப் பார்த்தீர்களேயானால், ஆரம் பத்தில் உள்ளூரில் இருந்து பிறகு தேச அளவிலே விரிவடைகிறார். சென்னை மாகாண சங்கத்தின் துணைத் தலைவராக இருந்து, இரண்டாண்டுகள் மாநாடுகள் நடத்தி, மூன்றாம் ஆண்டு அந்த அமைப்பே காணாமல் போயிற்று. காரணம் என்ன? நீதிக்கட்சிக்கு எதிராகப் பார்ப்பனர்களால் தயாரிக்கப் பட்ட, பார்ப்பனரல்லாத தலைவர்களை வைத்து இந்த வித்தைகளை எல்லாம் செய்தார்கள். அப்போதே அவருக்கு, தான் செய்ததைப் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு சக்தி இருந்தது.
பிறகு காங்கிரசில் சேர்ந்தால், அதனை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையையூட்டினார் இராஜகோபாலாச்சாரியார். தந்தை பெரியாரைத் தலைவராக்கினார்கள்.
அந்தக் காலகட்டத்தில் அய்யா அவர்கள், ஒவ் வொரு மாநாட்டிலும் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார், காங்கிரசில் இருக்கும்பொழுதே - 1920, 21, 22, 23 24 கடைசியாக காஞ்சிபுரத்தில் 1925 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாடு வரையில்.
தந்தை பெரியாருக்கு ஏமாற்றம் வருகிறது; அவர் யாரை நம்பினாரோ, அவர்களும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. இந்த அமைப்பே நமக்கு சரிவராது என்று கருதித்தான், அதிலிருந்து வெளி யேறினார்.
இயக்கம் வளருகின்ற காலகட்டத்தில்...
பிறகு, அவர் தலைமை தாங்கி சுயமரியாதை இயக் கத்தை நடத்தக்கூடிய அந்த வாய்ப்பு ஏற்படுகிறது. 1926 இலிருந்து 1936 வரை - எப்பொழுதுமே நம் முடைய இயக்கத்தையே நாம் அலசிப் பார்ப்போமே யானால், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இயக்கம் வள ருகின்ற காலகட்டத்தில், நல்ல வளர்ச்சியில் இருக் கின்ற காலகட்டத்தில், சோதனை போல, துரோகக் களை முளைக்கும்.
பயிரும் செழிக்கும், பயிருக்குப் பக்கத்தில் துரோகக் களையும் வளரும். எனவே, வேளாண்மை செய்வதில், பயிரைக் காப்பாற்றுகின்ற நோக்கில், ஒரு பகுதியாக களையெடுப்பும் நடந்தாகவேண்டும். விவ சாயத் தோழர்களுக்கு, வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கின்றவர்களுக்கு இதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.
தந்தை பெரியார் அவர்கள் ஒவ்வொரு கட்டத் திலும் அதனை சந்தித்திருக்கிறார்கள்.
1926-லிருந்து 1936 வரை - இயக்கம் வளர்ந்து - நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் அந்தக் கால கட்டத்தில், யார் யாரை நம்பினார்களோ, அவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?
தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்
அதுபோலவே, 1944 இல், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் இரண்டும் இணைந்த காலகட்டத்தில், திராவிடர் கழகமாக மாறிய நேரத்தில், பட்டம், பதவி கூடாது - தேர்தலில் நிற்கக்கூடாது - மக்கள் இயக்க மாக இதனை மாற்றிக் காட்டுகிறேன் என்ற திட்டங் களைப் போட்டு, கொள்கைகளை விரிவுபடுத்தி, உயர்ந்த பணக்காரர்களுடைய இயக்கம் அல்லது மேல்தட்டில் இருக்கக்கூடிய வர்க்கத்தவருடைய இயக்கம் என்றெல்லாம் ஒரு தோற்றம் இருந்ததை அடியோடு மாற்றினார். அதனால் பாதிக்கப்பட்ட வர்கள், இயக்கத்தை ஓர் ஏணியாகப் பயன்படுத்தலாம் என்று நினைத்தவர்கள் எல்லாம் தந்தை பெரியாருக்கு எதிராக மாறினார்கள்.
1946-க்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு ஒரு கட்டம்.
1949 ஆம் ஆண்டிற்குப் பிறகு 1962 ஆம் ஆண்டு ஒரு கட்டம்.
ஒரு வகையில், இயக்கம் அது ஆரோக்கிய சூழ் நிலையைத்தான் உருவாக்கியது.
அதனால் மேலும் மேலும் இயக்கம் கொள்கை ரீதியாகப் பலப்படுத்தப்பட்டும், பரிசுத்தப்படுத்தப் பட்டும்தான் வந்திருக்கிறது.
அந்த வகையில் சொல்கிறபொழுது, எப்படி அய்யா அவர்கள், இவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்தார் என்பது வியப்பானது - ஏனென்றால், எதிரியை சமாளிப்பது என்பது கடின மல்ல; எதிரி வெளிப்படையாகத் தெரிகிறான்.
வெங்கலவன் என்ற
சலவைத் தொழிலாளத் தோழர்
அதேநேரத்தில், ‘‘தொழுத கையுள்ளம் படையொ டுங்கும்'' என்று சொல்வதுபோன்று, உடன்பிறந்தே கொல்லும் வியாதி என்றும் சொல்வார்கள். அதனை எப்படி தந்தை பெரியார் அவர்கள் எதிர்கொண் டார்கள்? என்று சொல்லுகிறபொழுது, அவரைப் பாராட்டி, வெங்கலவன் என்ற சலவைத் தொழிலாளத் தோழர், திருச்சியில் பெரியாருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்துகிறார்.
தந்தை பெரியாரின் விளக்கம்!
அப்போது தந்தை பெரியார் அவர்கள் விளக்கமாக சொன்னவற்றை இதற்கு ஒரு பீடிகையாக நான் இங்கே சொல்லுகிறேன்.
‘‘என்னை சுயநலமில்லாதவன் என்றும், பதவியில் ஆசையில்லாதவன் என்றும், இருந்தால் பெரியவர் களைப் போல பெரிய பதவிக்கு வந்திருக்கக் கூடும் என்றும், இந்த நெருக்கடியில் பெரும் பணம் சம் பாதித்திருக்கக் கூடும் என்றும், நான் பெரிய தியாகம் செய்திருப்பதாகச் சொல்லி புகழ்ந்தார். அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
நான் இந்தத் தொண்டு வேலை செய்வதைத் தவிர, வேறு எந்தப் பதவிக்கும் தகுதியற்றவன் என்பது எனக்குத் தெரியும். பதவி தந்தாலும், பதவி வந்தாலும், அதனை சுமந்து கொண்டிருக்க என்னால் முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். அன்றியும், இன்று எனக்குப் பணம் இல்லாமலோ, பதவி இல் லாமலோ நான் இல்லை. என் செலவுக்கு வேண்டிய தற்குமேல் என்னிடம் பணம் உண்டு. அதை என்ன செய்வது என்பதே எனக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனக்கு இருக்கவேண்டியதற்கு மேலான பதவியையும் நீங்கள் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் கருதுகிற அளவு செல்வமும், நீங்கள் கருதுகிற பெரிய பதவியும் எனக்கு இருந்தால், எனக்கு இன்றுள்ள மதிப்பு இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
- (தொடரும்)
No comments:
Post a Comment