மாநில அதிகாரப்படி ஜனநாயக உரிமை காப்பாற்றப்படும் வகையில் போராடவும் தயாராக இருக்கவேண்டும் என்ற தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை வரவேற்கத்தக்கது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 22, 2020

மாநில அதிகாரப்படி ஜனநாயக உரிமை காப்பாற்றப்படும் வகையில் போராடவும் தயாராக இருக்கவேண்டும் என்ற தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை வரவேற்கத்தக்கது

தமிழக அரசு பள்ளிகளில் படித்து - ‘நீட்' தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பது ஏன்?


மத்திய அரசோ அல்லது  வேறு சக்திகளோதான் பின்னணி?



மருத்துவக் கல்வி படிப்புக்கான இடங்களில் 7.5 விழுக்காடு தமிழக அரசு பள்ளிகளில் படித்து, ‘நீட்' தேர்வில் வெற்றி பெற்றுவரும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுக்கிறார் என்ற நிலை - இதற்குக் காரணம் என்ன? அவராக இதை இப்படி கிடப்பில் போட்டு ஊறச் செய்யவில்லை; அதற்கு மூலகாரணம் ‘‘மத்திய அரசோ அல்லது வேறு சக்திகளோ''தான் பின்னணியில் இருக்கவேண்டும் என்றும், மாநில அதிகாரப்படி ஜனநாயக உரிமை காப்பாற்றப்படும் வகையில் போராடவும் தயாராக வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது, சரியான - காலத்தே முன் வைக்கப்பட்ட முறையான யோசனை என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசு, ‘நீட்' தேர்வு முறை புகுத்தப்பட்ட பின்பு, தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்' தேர்வு எழுதிடும் மாணவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து படித்துவரும் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்பு கிட்டவில்லை என்ற நிலைக்குப் பரிகாரம் தேடும் வகையில், சென்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒரு தனி மசோதாவை நிறைவேற்றினர்.


மொத்தம் தமிழ்நாட்டுக்குள்ள மருத் துவக் கல்வி படிப்புக்கான இடங்களில் 7.5 விழுக்காடு அரசு பள்ளிகளில் படித்து, ‘நீட்' தேர்வில் வெற்றி பெற்றுவரும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்பதே அச்சட்டம்.


முக்கியமான மூன்று காரணங்கள்


அம்மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது தமிழக அரசு. நிர்வாக நடைமுறையில் - அரசமைப்புச் சட்ட விதிப்படி இது ஒரு வழமையான, உடனடியாக ஒப்புதல் வழங்கப்படவேண்டிய ஒன்று (Routine matter in a Democratic setup). எந்த சட்டச் சிக்கலும் இதில் ஏற்படவும் வாய்ப்பில்லை. அதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் வலுவானவை.



  1. இந்த அரசின் முடிவு, தன்னிச்சையாக எடுக்கப்பட்ட மசோதா உருவாக்கம் அல்ல.


ஓய்வு பெற்ற ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியின் (ஜஸ்டீஸ் திரு.கலையரசன் அவர்களின்) தலைமையில் ஆய்வு கமிட்டி அமைத்து, அவர் அறிக்கை தந்தார்.


அதில் 10 சதவிகித இடங்களை ஒதுக் கீடு செய்ய அக்கமிட்டி பரிந்துரை செய் ததை அமைச்சரவையில் வைத்து, பரி சீலித்து அரசின் கொள்கை முடிவாக 10 சதவிகிதத்தைக்கூட 7.5 சதவிகிதமாகக் குறைத்தே இந்த மசோதாவை எதிர்ப்பின்றி நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி 45 நாட்களாகின்றன!



  1. இரண்டாவது முக்கியமான காரணம் நாம் சுட்டிக்காட்ட விழைவது - உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு (5 நீதிபதிகள் கொண்ட அமர்வு) மாநில அரசுகள் சமூக நீதியில் உள் ஒதுக்கீடு செய்துகொள்ள அரசமைப்புச் சட்டப்படி அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு வழக்கிலே மேல்முறையீட்டில் தெளிவாக்கப்பட்டு, உள் ஒதுக்கீடு உறுதியும் செய்யப்பட்டுள்ளது.


கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு இன்னமும் எட்டாக்கனியா? -


கண்கலங்கிய நீதிபதி!



  1. இதுபற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு மூத்த நீதிபதி களின் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளபோது, இதை விசாரித்த மூத்த நீதிபதி ஜஸ்டீஸ் திரு.கிருபாகரன் அவர்கள் அரசு வழக்குரைஞரிடம், ‘‘இம் மசோதாவிற்கான ஒப்புதலை விரைவில் பெற தேவையான முயற்சி செய்யுங்கள்'' எனக் கூறி, ‘‘ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்களுக்கு இன்னமும் மருத்துவப் படிப்பு எட்டாக் கனியா?'' என்று நெஞ்சுருகக் கேட்டு, திறந்த நீதிமன்றத்தில் கண்கலங்கி, கண்ணீர் விட்டிருக்கிறார் என்ற செய்தி உள்ளம் உருகும் செய்தி அல்லவா!


இதற்கிடையில், நமது முதலமைச்சரும், அமைச்சர்களும் ஆளுநரை அவரது அலுவலகத்தில் நேரில் சென்று பார்த்து, விரைந்து முடிவு எடுத்து மசோதாவிற்கு ஒப்புதல் (Assent) தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் சட்ட அமைச்சர் உள்பட 5 அமைச்சர்கள் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்தியுள்ளார்கள்.


மூலகாரணம் யார்?


என்றாலும், ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் தர மறுக்கிறார் என்ற நிலை என்றால், அவராக இதை இப்படி கிடப்பில் போட்டு ஊறச் செய்யவில்லை; அதற்கு மூலகாரணம் ‘‘மத்திய அரசோ அல்லது வேறு சக்திகளோ''தான் பின்னணியில் இருக்கவேண்டும்.


இந்த நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான தி.மு.க.வின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (21.10.2020) தனது முக்கிய பொறுப்பை உணர்ந்து, விடுத்துள்ள ஓர் அறிக்கையில் - ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி என்பதை நாட்டுக்கு உணர்த்திடும் வகையில் - ஆளுநருக்கு ஒப்புதல் அளிக்க வற்புறுத்தி ஓர் கடிதம் அனுப்பியதோடு, தேவையானால், அ.தி. மு.க. அரசுடன் இணைந்தும் போராடத் தி.மு.க. தயாராக இருக்கிறது; அதோடு, உடனடியாக அனைத்துக் கட்சிகள் அமைப்புகளை அழைத்து முதல்வரும், அரசும் ஒரு கூட்டத்தைக் கூட்டி, இதில் மாநில அதிகாரப்படி ஜனநாயக உரிமை காப்பாற்றப்படும் வகையில் போராடவும் தயாராக வேண்டும் என்று கூறியிருப்பது, சரியான - காலத்தே முன் வைக்கப்பட்ட முறையான யோசனையாகும்.


கார்ப்பரேட்டுகளின் வணிக மயமாக்கிடவே உறுதியுடன் உள்ளது மத்திய அரசு!


தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி களும் ஒருமித்து, களத்தில் இறங்கி, ‘நீட்' தேர்வின் பாதிப்பை ஓரளவுக்காவது குறைக்க - ‘யானைப் பசிக்கு இது சோளப்பொறி'தான் என்றாலும்கூட, இந்த அளவுக்குக்கூட மத்திய அரசு கருணை காட்டவும் தயாராக இல்லை என்றால், தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி பறிப்பை எப்படி திட்டமிட்டு, உயர்ஜாதி, உயர் வர்க்க, செல்வ வசதி உள்ள கார்ப்பரேட்டுகளின் வணிக மயமாக்கிடவே உறுதியுடன் உள்ளது என்பது தெளிவாகவில்லையா?


மத்திய அரசைப் புரிந்துகொள்ள


மேலும் ஒரு சந்தர்ப்பம்!


தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் குட்டக் குட்ட குனிந்து கொண்டே போவது நியாயமல்ல; தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் இந்த மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை ஏற்க மாட்டார்கள்; தவக்கம் காட்டினால், மத்திய அரசைப் புரிந்துகொள்ள மேலும் ஒரு சந்தர்ப்பம் என்பதே உண்மை!


உடனடியாகக் களத்தில் இறங்குவீர்! இறங்குவீர்!!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


22.10.2020


No comments:

Post a Comment