'அடக்குமுறை, பழி வாங்கும் நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள் நிலைத்தது இல்லை' என்ற வரலாறு திரும்பும்!
கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடிய, மனித உரிமைப் போராளி அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது செய்யப்பட் டுள்ளார். பல ஆண்டுகளாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரமான நில உடமை திட்டமிட்டு பெரு நிறுவனங்களால் பறிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் துணை போகின்ற வகையில், கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான அரசு இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 5ஆவது அட்டவணையில் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாப்புபற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
பழங்குடிமக்களின் நில உடைமை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறி வுறுத்திய நிலையிலும் இதுவரை நில உடைமைப் பறிப்பினை தடுத்திட நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தி, அவர்களுடைய வாழ்வாதார உரிமைக்காகப் பாடுபட்டு வந்த தமிழ்நாட்டைச் சார்ந்த ஸ்டேன் லூர்துசாமி தேசிய விசாரணை முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் பீமா கோரேகான் கலவரத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்பட் டுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய விசாரணை முகமை, ஜார்க்கண்ட் மாநில அரசுக்கு எந்தத் தகவலும் தராமல் நேரடியாக ஸ்டேன் அகாமி அவர்களைக் கைது செய்துள்ளது. இதுகுறித்து சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது பெரும் அவமானம் என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், மத்திய அரசு சட்ட விரோத நடவ டிக்கைகள் (தடுப்பு)ச் சட்டத்தில் (Unlawful Activities (Prevention) - Act 1969) ஒரு திருத் தத்தை 2019ஆம் ஆண்டில் உருவாக்கியது. சட்டத் திருத்தத் தின்படி தனி நபர்களையும் சட்ட விரோத நடவ டிக்கைகளின் பெயரால் கைது செய்யலாம். (திருத்தத் திற்கு முன்பு சட்ட விரோத நடவடிக்கை களுக்காக அமைப்பு ரீதியாகத் தான் கைது செய்ய முடியும் என்ற நிலை இருந்தது) என மத்திய அரசின் தேசிய விசாரணை முகமைக்கு அதிகாரம் வழங்கப் பட்டது. இதன்படி பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைக் காகப் பாடுபட்டு வந்த போராளி ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய மாநிலத் தில் 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் கலவரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கலவரத்திற்குக் காரண மான மனித உரிமைப் போராளி - அறிஞர் பெரு மக்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கலவரம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்து ஜார்க் கண்ட் மாநிலத்தில் களப்பணி ஆற்றி வந்த ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து பொது வெளியில் பல வித கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
மக்கள்கண்காணிப்பக ஏற்பாட்டில்
இணைய வழி கண்டனம்
ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகள், சமூக, மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும், பொறுப்பாளர்களும் பங்கேற்ற கண்டன - இணைய வழி கூட்டத்திற்கு 'மக்கள் கண்காணிப்பகம்' (Peoples Watch) அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 15.10.2020 அன்று மாலை நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிறுவனரும் மனித உரிமைப் போராளியுமான வழக்குரைஞர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார். திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்.
ஹென்றி திபேன் தலைமை உரை
கண்டனக் கூட் டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஹென்றி திபேன், ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டது பற்றி விரிவாகப் பேசினார். பழங் குடி மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்த 83 வயது நிரம்பிய ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கையே. பழங்குடி மக்களின் நிலத்தைப் பறிக்கும் கார்ப்பரேட் கும்பலின் செயலுக்கு மத்திய அரசு துணை போவதாகவே அமையும் என முழுமையான பின்னணியினை எடுத்துரைத்தார். மனித உரிமைப் போராளி அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது செய்யப்பட்டது, ஒரு கிறிஸ்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார் என குறுகிய பார்வையில் அணுகப்படக் கூடாது. அதற்குப் பின்னால் உள்ள அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை பறிப்பு, பழங்குடி மக்களின் வாழ்வாதாரக் கொள்ளையடிப்பு என்ற பரந்துபட்ட புரிதலுடன் அணுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழர் தலைவரின் கண்டன உரை
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து, அவரை விடுவிப்பதற்கு எடுக்கப்படும் அத்துணை நடவடிக்கைகளுக்கும் திராவிடர் கழகம் உறுதுணையாகவும், பக்கபல மாகவும் இருக்கும் என தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் தமிழர் தலைவர் தமது உரையில் குறிப் பிட்டதாவது:
83 வயது நிரம்பிய கிறிஸ்தவ பாதிரியார், பழங்குடி மக்களுக்கு தொண்டாற்றி வந்த அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி அவர்கள் கைது செய்யப்பட்டது தனி நபர் கைதாகக் கருதப்படக் கூடாது. மக்களுக்கு உதவி செய்து வந்த தொண்டறம் கைது செய்யப்பட்டி ருக்கிறது. இந்த கைதின் பின்புலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் புன்சிரிப்பு மறைந்திருக்கிறது. 83 வயது நிரம்பிய தொண்டறச் செம்மல் சிறையில் உள்ளார். நீதி கேட்ட குரல்வளை நெறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளது. 1976ஆம் ஆண் டில் பிரகடனப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையிலும் அடக்கு முறைகள் இருந்தன. ஆயினும் அதில் ஒரு நெறிமுறை இருந்தது. ஆட்சியில் இருந்தவர்களிடம் ஒருவித நாணயம் இருந்தது. ஆனால் இன்று நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடியில் நியாயம் இல்லை; நியாயம் தோற்கலாமா? பொய்க் குற்றச்சாட்டு, சதித் திட்டம் என கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜனநாயக முலாம் பூசிய கார்ப்பரேட் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டைச் சார்ந்தவர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்கள் தொண்டு செய்தவர் என ஏதோ பிற மாநிலத்தில் நடந்த நிகழ்வாக ஸ்டேன் சாமியின் கைது கருதப்படக் கூடாது. தீ பரவத் தொடங்கி விட்டது. அடுத்த வீட்டில் எறிகின்ற தீ நமது வீட்டிற்கு பரவாது என நினைக்கக் கூடாது. இன்றைய கைது செய்யப்பட்ட படலம், எந்த ரவுலட் சட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் எதிர்த்தார்களோ, அதைவிட மோசமான சட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ளது. ஒரு மாநில முதலமைச்சருக்கே தெரியாமல் அந்த மாநிலத்தில் மக்கள் தொண்டு ஆற்றி வந்தவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற நிலையில் ஜனநாயக, கூட்டாட்சி மாண்புகள் எங்கே போயின? மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வரு கின்றன.
இங்கிலாந்து நாட்டு நாடாளுமன்ற அறிஞர் எட்மண்ட் பர்க் கூறுவார். 'We can give power to Government; but can't give wisdom to it' - ஜனநாயக நாட்டில் ஆளும் அரசிற்கு அதிகாரத்தினை (மக்கள்) அளிக்கலாம். ஆளுகின்ற அறிவாற்றலை வழங்கிட முடியாது.
ஜனநாயக நெறிமுறைப்படி ஆளுகின்ற அறி வாற்றல் அற்றவர்களாக இன்றைய மத்திய ஆட்சி யாளர்கள் உள்ளனர். அரசமைப்புச் சட்டம் - அதன் 5ஆவது அட்டவணை வழங்கிய பழங்குடி மக்களின் வாழ்வாதார உரிமைப் பாதுகாப்பிற்கு தொண்டு செய்தவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற வர்களுக்கு அச்ச உணர்வினை ஏற்படுத்தும் வகை யில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆளுபவர்களுக்கு, இத்தகைய அடக்குமுறை களைக் கையாண்ட ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியை - வரலாற்றில் பார்க்க வேண்டும். நிச்சயம் அந்த வரலாறு திரும்பும். கைது செய்யப்பட்டவர் விடுதலையடையும் வகையில் வரலாறு திரும்பும், ஸ்டேன் சாமி விடுதலைக்கு எடுக்கப்படும் அத்துணை முயற்சிகளுக்கும் நாம் துணையாய் நிற்போம். களமிறங்கிப் போராடுவோம். மனித உரிமைப் பறிப்பு மாய்ந்து, மனிதத் தொண்டு செய்கின்ற சூழல் மீண்டும் மலர வேண்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
கண்டனக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, எஸ்.டி.பி.அய். கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, மக்கள் சிவில் உரிமை கழகம் மற்றும் பல்வேறு அரசியல், சமூக, மனித உரிமை அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.
கண்டனக் கூட்ட நிகழ்ச்சியினை மனித உரிமை செயற்பாட்டாளர் வழக்குரைஞர் எம்.ஏ. பிரிட்டோ நெறியாளுகை செய்தார்.
- தொகுப்பு: வீ. குமரேசன்
No comments:
Post a Comment