ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அனைவரும் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் தீர்ப்பு கூறி இருப்பது எதனை காட்டுகிறது?


- வெங்கட.இராசா, ம.பொடையூர்.


பதில்: சி.பி.அய். போன்ற சிறந்த, சுதந்திரமாக இயங்க வேண்டிய அமைப்புகள்கூட 28 ஆண்டுக் கால நிலுவை கிரிமினல் வழக்கில், அதன் திறமையை சரியாகக் காட்டி தண்டனை பெற்றுத் தராமல், 32 பேரும் விடுதலை செய்யப்படும் அளவுக்குத் தீர்ப்பு வரும் கொடுமை - அதன் இறக்கைகள் வெட்டப்பட்டு, சுதந்திரமாகப் பறக்க முடியாத பரிதாப நிலையைக் காட்டுகிறது! உலகம் இதை எப்படிப்  பார்க்கும் என்பதுபற்றிய கவலைகூட இருந்ததாகத் தெரியவில்லை!


கேள்வி: மருத்துவர் சொல்வதைக் கூட அலட்சியம் செய்பவர்கள், புரோகிதர் சொல் வதை பயபக்தியோடு செய்து முடிப்பது எத னைக் காட்டுகிறது?


- நெய்வேலி க.தியாகராசன்,


கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியான உண்மை என்பதை உலகுக்கு உணர்த்துகிறது!


கேள்வி:    ஹத்ராஸ் பாலியல்    வன்கொடுமை... பா.ஜ.க. ஆளும் உ.பி. காவல்துறையின் நட வடிக்கை...?


- முகிலா, குரோம்பேட்டை


பதில்: குதிரை கீழே தள்ளியது மட்டுமல் லாமல், குழியும் பறித்த கொடுமைபோல, அது வன்புணர்ச்சி கொலையே அல்ல - கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாகவே மரணம் என்று உ.பி. காவல்துறை டி.ஜி.பி.யே கூறும் இமாலயப் புரட்டுச் செய்தி! சொல்லக் கொதிக்குதய்யோ நெஞ்சம்!


கேள்வி:. கொரோனா தொற்று குறித்த அச்சம் குறைந்து பெரும் அலட்சியம் நிலவத் தொடங்கியுள்ளதே? இரண்டாம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டாமா?


-  மொ.ராஜவேலு, திருவண்ணாமலை


பதில்: ஆம்! மிக மிக அவசியம். இந்த இரண்டாம் கட்டத்தில் மிகுந்த கவனம் தேவை. அலட்சியம் உயிர்க்கிறுதியாகி விடக்கூடும். முகக்கவசம், தனிநபர் இடைவெளி, சோப், கிருமி நாசினி பயன்பாடு, உடற்பயிற்சி, சத் துணவு, தேவையற்ற சந்திப்புகள் தவிர்க்கப் படுதல் மிகவும் முக்கியம்.


எல்லாம் நம் முடிவில் - செயலில்தான் உள்ளது!


கேள்வி: பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்ட சதித்திட்டம் தான் என்பதில் தான் உறுதியாகவே இருப்பதாக நீதிபதி லிபரான் தெரிவித்துள்ளாரே!


- நா.ராசா, எஸ்.காவனூர்


பதில்: லிபரான் மட்டுமா? ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, உள்துறை செயலாளர் போன்றவர்கள்கூட கருத்து தெரிவித்துள் ளனரே! யார் அதைப்பற்றி கவலைப்படுகிறார் கள். பல ஊடகங்கள் மவுனம் சாதிக்கின்றனவே!


கேள்வி: மக்களின் எந்தவிதமான போராட் டத்தையும் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத அலட்சியம் அரசுகளுக்கு எங்கிருந்து வரு கிறது?


- தென்றல், ஆவடி


பதில்: பண பலம், அதிகார பலம், சுதந்திர நிறுவனங்களையே தங்களுக்குக் கட்டுப் பட்டவையாக ஆக்கிக் கொண்ட ஆணவ பலம், எல்லாவற்றையும்விட, தேர்தலில் எப்படியும் ஜெயித்துவிடலாம் என்ற அசட்டு அசாத்திய நம்பிக்கை இவையே காரணம்.


ஆனால், வரலாறு இதற்கு பாடம் கற்பிப் பது நிச்சயம் - மக்கள் எல்லா காலத்திலும் ஏமாளிகளாக இருக்கமாட்டார்கள்.


கேள்வி: ஆங்கிலம், தமிழ் இரு மொழி களிலும் கவிதை நூல்கள் (புரட்சிக் கவிஞரைத் தவிர) படிக்கும் வழக்கம் உண்டா அய்யா தங்களுக்கு?


- தமிழ்மதி, கோவை


பதில்: நிச்சயம் உண்டு. அதன் விகித அளவு குறைவானதே! அவை ஒருவகை ‘இளைப் பாறுதல்’ எமக்கு!


கேள்வி: தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து துறைகளும்  காவிமயமான சூழலில் தேர்தல் அரசியல் மூலம் இந்த பாசிச ஆட்சியை வீழ்த்த சாத்தியம் உள்ளதா?


- திராவிட விஷ்ணு, வீராக்கன்


பதில்: நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து பிரச்சாரம் - மக்களை ஆயத்தப்படுத்தும் தொடர் அறப்போர்க் களம் - மீண்டும் இதைப் பிரச்சாரம் நிச்சயம் பலன் தரும். சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்.


விழிப்புணர்வு விடியலாக முளைத்தே தீருவது இயற்கை நியதி!


 


சிறப்புக் கேள்வி:


கவிஞர் நந்தலாலா


திருச்சி



கேள்வி: ஆசிரியர் அவர்களை யோசிக்க வைக்கும் விதமாக அம்மா (ஆசிரியரின் துணைவியார்) கேட்ட கேள்வி என்ன?.


பதில்: நன்றி கவிஞர் நந்தலாலா அவர்களே, பல நல்ல அரிய, பயனுறு யோசனைகளை எனக்கு அளிப்பார்கள். அதோடு சில கேள்வி களாகவும் இருக்கும் - பொறி தட்ட வைத்த ஒரு கேள்வி:


‘‘உடலை இவ்வளவு வருத்தி அதிக நேரம் ஆதாரங்களை எல்லாம் கொட்டிப் பேசுவதற் குரிய பலன் கேட்பவர்களிடமிருந்து கிடைக் குமா? கிடைக்காது. எனவே, பேச்சை குறிப்பிட்ட அளவுக்கு சுருக்கிப் பேசுங்கள் - அது பயன்தரக் கூடும்‘’ என்பதே - ஆம், அதில் நியாயம் உள்ளது என்பது அனுபவம் உணர்த்திய பாடம்!


கேள்வி: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டுக்கு தாய்க்கழகம் என்னும் வகையில் என்ன செயல் திட்டம் உள்ளது?


பதில்: இன எதிரிகள் - பிற்போக்கு மத வெறியர்கள் ஆகியோரின் கை எவ்வகையிலும் ஓங்காமல் இருக்க, அடுத்த 8 மாதங்களில் ஏற்பட வேண்டிய ஆட்சி மாற்றத்திற்கு - அவர்கள் எத்தனை மாயக் குதிரைகள், புதுக் குதிரைகளைக் கொணர்ந்தாலும், அவற்றைப் பற்றி மக்கள் மன்றம் புரிந்துகொள்ளும்படி செய்வதும், நடுவில் எதிரிகளுக்கு துளியும்  இடந்தராமல், அதேநேரத்தில் கொள்கைச் சமரசமும் இன்றி, பரிபக்குவமாக நடக்கவேண் டிய காலகட்டம் இது என்பதையும், சமூகநீதி தான் சரியான ஆயுதம்; பிற திசைகளில் கவனம் சிதறக் கூடாது என்பதும் எமது வேண்டுகோள்!


இதுதான் ஒரே செயல் திட்டம்!


 


No comments:

Post a Comment