இறந்தவரை சாட்சிக்கு அழைப்பது சரியா, குருமூர்த்திகளின் "கோழைத்தனம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 4, 2020

இறந்தவரை சாட்சிக்கு அழைப்பது சரியா, குருமூர்த்திகளின் "கோழைத்தனம்"

இறந்தவரை சாட்சிக்கு அழைப்பது சரியா? குருமூர்த்திகளின் "கோழைத்தனம்"!


* கலி. பூங்குன்றன்


'நண்டு கொழுத்தால் வளையில் தங்காது' என்பார்கள்  - பார்ப்பனர்களும் அப்படிதான். 'துக்ளக்'கும் அப்படிதான் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி அய்யரும் அப்படித்தான்.


ஒவ்வொரு வாரமும் 'துக்ளக்'கில் தந்தை பெரியாரை, திராவிடர் இயக்கத்தை, தி.மு.க.வை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  வீரமணி அவர்களைச் சீண்டா விட்டால் இந்தச் சிண்டுகளுக்குத் தூக்கம் வராது என்று தெரிகிறது.



'தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையைத் தவிர மற்றவற்றை ஆதரிக்கிறேன்' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. எல். முருகன் சொன்னாலும் சொன்னார் -  பிஜேபியில் உள்ள பார்ப்பனர்களுக்குக் குடைச்சல் நோய் உள்ளங் காலில் ஆரம்பித்து உச்சிக் குடுமி வழியாகக் கொப்பளிக்க ஆரம்பித்து விட்டது.


பா.ஜ.க. தேசிய கட்சி - ஈ.வெ.ரா. தேசியத்திற்கு விரோதமானவர் என்ற பல்லவியை இந்தப் 'பச்சரிசிகள்' பாட ஆரம்பித்து விட்டன.


இப்பொழுது எல்லாம் காமராசரைக் கொண்டு வந்து  முட்ட விடும் வேலையில் இந்த முப்புரி ஈடுபடுகிறது.


இந்தக் காமராசரை எப்படி எல்லாம் இந்தக் கூட்டம் இழித்துப் பழித்தது என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்ற மமதை இந்த மனுவாதிகளுக்கு!


கருப்புக் காக்கையைக் கல்லால் அடிக்க வேண்டும் என்று காமராசரைச் சாக்கிட்டு சென்னை கடற்கரையில் பேசியவர் இந்தக் குருமூர்த்திகளின் அரசியல் குரு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி - 27.2.1966).


அருப்புக்கோட்டை இடைத் தேர்தலின் போதோ இதே ராஜாஜி காங்கிரஸ்காரர்களுக்குச் செருப்படி கொடுக்க வேண்டும் என்று காமராசரை மனதில் வைத்துப் பேசினாரே - அப்பொழுது 'விடுதலை'யில் 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் 'செங்காங்கடையில் ராஜாஜி' என்று ஆச்சாரியாரைக் கண்டித்துத் தலையங்கம் தீட்டினாரே ('விடுதலை' 14.4.1964).


பட்டப் பகலில் பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் டில்லி தலைநகரில் (7.11.1966) அகில இந்திய காங்கிரஸ் தலைவர் - பச்சைத் தமிழர் காமராசரை உயிரோடு கொளுத்தும் கேவலமான வன்முறை, கொலை முயற்சியில் குருமூர்த்திகளின் மூதாதையான ஜனசங்கம் உள்ளிட்ட சங்பரிவார்களும், சங்கராச்சாரியார்களும், நிர்வாண சாமியார்களும் தீவட்டிகளையும் சூலாயுதங்களையும் தூக்கிக் கொண்டு புறப்படவில்லையா?


ஒரு திமுக தொண்டர் சரியான நேரத்தில் கொடுத்த எச்சரிக்கை யால் அன்று காமராசர் ஒரு மயிரிழையில் உயிர் பிழைத்தார்.


வரலாற்றின் உண்மைகள் இப்படி இருக்க, கோயங்கா வீட்டுக் கணக்கப்பிள்ளை என்று கூறப்படும் குருமூர்த்தி இவ்வார 'துக்ளக்'கில் (7.10.2020) திறந்தவுடனேயே எச்சரிக்கை என்று தலைப்பிட்டு என்ன எழுதுகிறார்?


கேள்வி: திடீரென்று தமிழக பா.ஜ.க., பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறதே?


பதில்: ஈ.வெ.ரா.வை ஏற்றுக்கொண்டால், கழகங்களின் வாக்குகள் பெருமளவு தங்களுக்கு மாறி, 60 இடங் களைப் பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. நினைப்பது போலிருக்கிறது. காங்கிரஸுக்கு 1967, 1971 தேர்தல்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி அறிய, அன்றைய தமிழக அரசியல் சரித்திரம் தெரிந்தவர்களை இன்றைய பா.ஜ.க. தலைவர்கள் அணுகுவது நல்லது. அந்நாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் கோயங்கா 1967-ல் தனக்கும், காமராஜுக்கும் நடந்த உரையாடலை என்னிடம் கூறினார். 'ஈ.வெ.ரா.விடம் நெருங்குவது காங்கிரஸின் தேசிய அடையாளத்தைக் குழப்பிவிடும், வேண்டாம்' என்று காமராஜிடம் கோயங்கா கூறினாராம். அதற்கு, 'ராமசாமி நாயக்கரே வலுக்கட்டாயமாக காங்கிரஸை ஆதரிக்கிறார்' என்று காமராஜ் பதில் கூற, 'அவர் ஆதரவு வேண்டாம் என்று கூறவேண்டும். அப்போதுதான் நம் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ளலாம்' என்று கோயங்கா சொன்னாராம். இறுதியில் ஈ.வெ.ரா. ஆதரிக்கும் காங்கிரஸை விட, ராஜாஜி ஆதரிக்கும் தி.மு.க. பரவாயில்லை என்று தேசியவாதிகள் பலர் நினைத்ததால்தான், 1967-ல் காங்கிரஸுக்குப் பின்னடைவு வந்தது. 1969-ல் காங்கிரஸ் உடைந்து, 1971-ல் இந்திரா பிரிவு தி.மு.க.வுடன் அணி சேர, அதன் பலம் குன்றி, இன்று வரை தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளுக்கும், கழகங்களுக்கும் இடையே எல்லை வரைய முடியாத அளவுக்குக் குழப்பம் இருந்து வருகிறது. பா.ஜ.க.வுக்கு தேசியமே தனித் தன்மை. அதில் ஈ.வெ.ரா.வைக் கலந்து குழப்பி, குளறுபடி செய்யாமல் இருப்பது பா.ஜ.க.வுக்கும் நல்லது, தேசியத்துக்கும் நல்லது."


இவ்வாறு அக்ரகாரத்தின் எண்ணவோட்டத்தைத் 'துக்ளக்' தெரிவிக்கிறது.


காமராசரையும், தந்தை பெரியாரையும் பிளவுபடுத்திக் காட்ட செத்துப் போன 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர் கோயங்காவை சாட்சிக்கு அழைக்கிறார்.


உயிரோடு இருக்கும் போது - தன்னிடம் ஒருவர் சொன்னார் என்று கூறி, இறந்து போன நிலையில் சாட்சிக்கு அழைப்பது ஒரு வகை ஈனத்தனமே!


அதே கோயங்கா 1952இல் விழுப்புரம் தொகுதியில் மக்களவைக்குப் போட்டியிட்ட போது தந்தை பெரியாரின் கடும் எதிர்ப்பால், திருக்குறள் முனுசாமி அவர்களிடம் தோற்றோடியது எல்லாம் மறந்துவிட்டதா - கோயங்கா விட்டுக் கணக்கப் பிள்ளைக்கு?


விமானம் மூலம் தேர்தல் துண்டு அறிக்கைகளைத் தூவியவர் துண்டைக் காணோம் வேட்டியைக் காணோம் என்று ஓடியதுதான் மிச்சம்!


ஈ.வெ.ரா.விடம் நெருங்குவது காங்கிரசின் தேசிய அடையா ளத்தைக் குழப்பிவிடும் என்று கோயங்கா காமராசரிடம் கூறினாராம்.


அதற்கு 'ராமசாமி நாயக்கரே வலுக்கட்டாயமாக காங்கிரசை ஆதரிக்கிறார்' என்று காமராஜ் பதில் கூற, 'அவர் ஆதரவு வேண்டாம் என்று கூற வேண்டும், அப்போதுதான் நம் தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளலாம்' என்று கோயங்கா சொன்னதாக இந்தக் கோயபல்சு எழுதுகிறது.


செத்துப் போனவர்களை சாட்சிக்கு அழைக்க முடியாது அல்லவா!


இந்த வகையில் யாரைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் புளுகித் தள்ளலாமே - இதைவிட - அற்பத்தனம், கோழைத்தனம் வேறு ஒன்று உண்டா?


சரி, ஒரு விவாதத்துக்காகவே ஒத்துக் கொள்வோம் அதன்படி பெரியார் ஆதரவு வேண்டாம் என்று காமராசர் சொன்னாரா? அதற் குப் பிறகு பெரியார் காமராசரை ஆதரிக்காமல் விட்டு விட்டாரா!


ஒரு உண்மை தெரியுமா இந்த உஞ்சிவிருத்திக் கும்பலுக்கு? குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த ஆச்சாரியாரை ஆட்சியை விட்டே, தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்து தமிழ்நாட்டு மக்கள் விரட்டிய பிறகு - அந்த முதல் அமைச்சர் நாற்காலியில் காமராசரை உட்கார வைத்ததில் தந்தை பெரியாரின் பங்கு என்ன என்று தெரியுமா?


சென்னை அரசினர் தோட்டத்தில் டாக்டர் வரதராசலு  நாயுடு அவர்களின் இல்லத்தில், தந்தை பெரியார், காமராசர் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு அது என்பது தெரியுமா இந்த இரு பிறப்பாளர்களுக்கு (பார்ப்பனர்கள் பூணூல் அணிந்த பின் துவி ஜாதி அதாவது இரு பிறப்பாளர்களாக ஆகி விடுவார்கள் என்பது அவாளின் சாஸ்திரம்).


இது ஏதோ இறந்து போனவர்களை அழைத்துச் சொல்லப்படும் சாக்கு அல்ல. ஆதாரம் உண்டு. (பெட்டிச் செய்தி (மாலைமலர்) காண்க).


ஈ.வெ.ரா.வே வந்து தன்னை ஆதரிக்கிறார் என்று காமராசர் சொன்னார் என்று கோயங்கா சொன்னதாக குருமுர்த்தி கூறுகிறார் அல்லவா! ஏதோ குற்றச்சாட்டுபோல் குருமூர்த்தி சொல்வதைத் தான் திரு.கே.சி. லட்சுமி நாராயண் 'துக்ளக்'கில் எழுதியதற்கு விடுதலை அப்பொழுது பதில் எழுதியதுண்டு.


அதனை மீண்டும் நினைவூட்டுகிறோம்.


"என்னை ஆதரியுங்கள் என்றோ, காங்கிரசை ஆதரியுங்கள் என்றோ ஈ.வெ.ரா.வை காமராசர் நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ ஒருமுறை கூட அணுகியது இல்லை. இதை எல்லோரும் அறிவார்கள் என்று எல்லாவற்றையும் அறிந்தவர் போல எழுதுகிறாரே - தந்தை பெரியார் அவர்களின் அணுகு முறைகளை ஓரளவுக்கு அறிந்திருந்தால்கூட இப்படி எவரும் எழுத மாட்டார்கள்.


திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல - ஓட்டு வாங்கி பதவிக்குப் போகும் கட்சியும் அல்ல. இது ஒரு சமூகப் புரட்சி இயக்கம்.


தன் கொள்கைக்கு ஆதரவாக, இணக்கமாக ஓர் ஆட்சி நடைபெறும் என்றால், திட்டங்கள் தீட்டப்படும், சட்டங்கள் இயற்றப்படும் என்றால், சமூக நலன் கருதி அதனை ஓடோடிச் சென்று ஆதரிப்பவர்தான் பெரியார்.


என்னை அழைத்தார்களா? என்னைக் கேட்டார்களா? என் பெயரை பெரிய எழுத்தில் போட்டார்களா? என்று மலிவான உணர்வின் அடிப்படையில் முடிவு செய்பவரும் அல்லர். தன் கொள்கை அளவுகோல் கொண்டு மதிப்பீடு செய்பவர்தான் தந்தை பெரியார்.


எனது சமுதாய மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி எதுவாக இருந்தாலும் அதனை ஆதரித்தும், என் சமுதாய மக்களுக்குக் கேடாகக் காரியம் செய்யும் கட்சிகளை எதிர்த்துமே வந்திருக்கிறேன். ஆட்சியில் இருந்தது என்பதற்காக எந்தக் கட்சியையும் நான் ஆதரித்தது கிடையாது (விடுதலை 4.3.1968) என்று ஓர் ஆட்சியை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்குமான அளவுகோலையும் இலக்கணத் தையும் கொடுத்த தலைவரைப் பற்றிச் சரியான புரிதல் இருந்தால் இப்படியெல்லாம் தத்துப்பித்து என்று எழுதித் தொலைக்க மாட்டார்கள்.


என்னைப் பொறுத்த வரையில் நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. எப்பொழுதும் நான் கொள்கைக்காரனாகவே இருந்தேன்? என்றும் (விடுதலை 1.6.1954) தெளிவுபடுத்தி விட்டாரே தந்தை பெரியார்!


தந்தை பெரியாரின் அணுகுமுறையை இப்பொழுதாவது குருமூர்த்தி கூட்டம் தெரிந்து கொள்ளட்டும்!.


'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ,அதிபர் காமராசரிடம் ஈ.வெ.ரா. விடம் நெருங்க வேண்டாம் என்று சொன்னதற்குப் பிறகு காமராசர் அப்படி நடந்து கொண்டாரா?


காமராசர் வாயாலேயே இதற்கு பதில் சொல்லி விடலாம். இதோ தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் என்று அடையாளம் காட்டப்பட்ட காமராசர் பேசுகிறார்:


“சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளைத் தகர்த்தெறிந்து தன்மானத்துடன் சரிசமமாக வாழும் மறுமலர்ச்சி வேண்டுமென்று சோஷ்யலிச லட்சியத்தை உருவாக்கித் தந்தவர் பெரியாரே. அவரது லட்சியம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பரவியது. அவர் சேவையால்தான் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அவர் விதைத்ததை நாம் அறுவடை செய்து அனுபவிக்கிறோம்.


சமத்துவ சமுதாயம் விரைவில் அமைய வேண்டும் என்ற அவரது லட்சியம் முற்றிலும் நிறைவேற வேண்டும். எவ்வளவு விரைவாக நம்முடைய சமுதாயத்தில் மனிதன் சமமாக வாழக்கூடிய சமுதாயம் உருவாக்க முடியுமோ அதை உருவாக்க வேண்டும். அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டிருக்கிறார்கள், எல்லா வேலைகளையும் செய்து விதைத்திருக்கிறார்கள்; களையெடுத்திருக் கிறார்கள். நாம் செய்ய வேண்டியது அறுவடைதான். அதைக்கூட நாம் செய்யமாட்டோம் என்று சொல்ல முடியுமா என்ன? அதை எப்படிச் செய்யப் போகிறோம்? என்பதே பிரச்சினை.


அவர்களுக்கு 89 வயது ஆகிறது. இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும். அவர்களுடைய வழி காட்டுதல் நமக்குத் தேவை என்பதற்குக் காரணம் மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடிய துணிவு எனக்குத் தெரிந்த வரையில் அவர் ஒருவருக்குத்தான் உண்டு. என்னுடைய மனதில் நினைத்ததைச் சொல்வதற்குள் யார் என்ன நினைப்பார்களோ என்று பார்த்துப் பார்த்து அவற்றை நினைத்தும், அவை நல்லவையாக இருந்தாலும் சொல்லாமல் இருந்து விடுகிறேன். அவர்களிடத்தில் அது கிடையாது. யாருடைய தயவு தாட்சண்யத்தைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. தனக்கு நியாயமாகப்படும்போது அதனால் யாருடைய வருத்தத்திற்கும் கவலைப்பட மாட்டேன் என்று சொல்கிறார்கள். அப்படி வாழ்ந்து நல்ல முறையில் சொல்லக்கூடிய தலைவர் நீண்ட நாள் இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்."


- கு.காமராஜ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ், திருச்சி தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் (விடுதலை, 22.09.1967)


பெரியார் காமராசரை ஆதரிப்ப தற்குக் காரணம் என்ன? அதையும் காமராசர் வாயினாலேயே கேட்டு விடலாம். இதோ காமராசர் பேசுகிறார்:


"நீங்கள் மதிப்பிற்குரிய பெரியார் ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்துள்ளீர்கள்! பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி வைத்தது பொருத்தமே. ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காணப் பாடுபட்டவர், நமது ஈரோடு தமிழ்ப் பெரியார்தான். எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயர் வைத்தது மிகவும் பொருத்த மானதே!


பெரியார், காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே, ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றார். பெரியார் காங்கிரசில் இருந்த போது, கேரளத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தினர். அதனை எதிர்த்து காந்திஜி விருப்பப்படி பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்.


அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான்! பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது! அவர் பெரிய தலைவர்! இப்போதும் அவரை எனக்குத் தெரியாது! (சிரிப்பு) ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.


வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டு, தம் வாழ்நாளிலேயே அதைக் காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் பெரியார்!


சர்க்கார், ஜாதி ஒழிப்புக்குப் பல சட்டங்கள் செய்துள்ளன. ஜாதி ஒழியவில்லையே என்று ஆத்திரப் பட வேண்டாம். சட்டத்தினால் மட்டுமே ஒரு சமூகத்தினை மாற்றி அமைத்துவிட முடியாது. ஜனங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம். மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். அதற்காகப் பாடுபடும் பெரியார் ஈ.வெ.ரா. நீடூழி வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.


அவருடைய பல கருத்துகளை நாம் ஒத்துக் கொள்ள முடியாது! ஆயினும், ஜாதி ஒழிப்பு பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே தாழ்ந்தவன் என்று சொல்வதும் வெட்கப்படக் கூடியதாகும். தலைவிதி எனக் கூறுகிறோம். அது தப்பு! சமுதாயம், சமதர்மம் ஆகிய கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், நாடு முன்னே றாது, வாழமுடியாது!


சர்க்கார், அரிஜன நல இலாகா ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சர்க்காரை ஆதரிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் நிறை வேறுவதால்தான்! பெரியார் என்னிடம் தினமும் இரவு ரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். (சிரிப்பு) நாங்கள் அப்படிச் சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால், நல்ல சீர்திருத்தங்கள் சர்க்காரால் கொண்டு வரப்படுவதுதான் காரணம்.


- முதன்மந்திரி காமராஜ், திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்துப் பேசியது. (நவசக்தி 11-4-1961).


பெரியார் - காமராசர் இணக்கம் ஏன் என்பது இப்பொழுது விளங்குகிறதா?


காமராசர் பெரியாரின் தொண்டினைப் பாராட்டினார் என்பதோடு நிறுத்தினால் சரி வருமா? தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்? அதையும் பார்ப்போமே.


"நான் எனது இலட்சியத்தில் மனக் குறை அடைய வேண்டிய நிலை இல்லாதவனாக இருக்கிறேன். இதை நான்கு அய்ந்து மாதங்களுக்கு முன் காமராசர் மகிழ்ச்சியோடு வெளியிட்டார். அதாவது 'பெரியாருக்கு இன்று என்ன குறை? அவர் போட்ட பாதையில்தான் இன்று காங்கிரஸ் போய்க் கொண்டிருக்கிறது. அவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை" என்பதாகப் பேசினார். இனி எனக்கு ஏதாவது குறை கவலை இருக்குமானால், அது மக்கள் இடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் தான்" என்றார் தந்தை பெரியார் ("விடுதலை" மலர் 17.9.1966).


பெரியகுளம் நகர சபை சார்பிலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், திராவிடர் கழகம் சார்பிலும் முதல் அமைச்சர் காமராசருக்கு வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.


திரு. காமராசர் பதிலளிக்கையில் திராவிடர் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் திரு. இராமசாமி நாயக்கர் அதற்கு நல்ல முறையில் தலைமை வகிப்பதாகச் சொன்னார். பிற கட்சிகளைப் போல எல்லாவற்றையும் கண்டபடி தாக்காமல், கெட்டதெனப் புலப்படு வதைக் குறை கூறவும், நல்லதென நினைப்பதைப் பாராட்டவும் அவர் தயங்குவதில்லை. மற்ற கட்சிகளைப் போல் தேர்தலில் கலந்து கொள்ளாததால் இவ்வாறு நடந்து கொள்ள அவரால் முடிகிறது" ('தினமணி' 13.2.1955).


தந்தை பெரியாரை மட்டுமல்ல - திராவிடர் கழகத்தையும் காமராசர் பாராட்டினார்.


இது செத்துப் போன கோயங்கா குருமூர்த்தியின் காதைக் கடித்தது போன்ற புரூடா இல்லை. செய்தியை வெளியிட்டு இருப்பது அந்தக் கோயங்காவின் தினமணிதான் என்பதை குருமூர்த்திகளுக்கு அழுத்திச் சொல்லுகிறோம்!


தங்கள் ஆதிக்கத்தின் ஆணி வேரையே வீழ்த்துகிறாரே என்று தந்தை பெரியார்மீது அக்ரகாரங்கள் ஆத்திர மொழிகளால் அர்ச்சிக்கலாம். ஆனால் அவரின் பொதுத் தொண்டு - ஒவ்வொரு கட்டத்திலும் எந்த அளவு ஒளி வீசியது என்பதற்கு ஆச்சாரியாரே சாட்சி.


‘‘முக்கியமாக தமிழக தேச பக்தர்கள்மீது வழக்குத் தொடரப் பெற்று வந்த காலம் 1924 ஜூன், அவ்வாறு வழக்குத் தொடரப் பெற்றவர்களில் பெரியார் ஈ.வெ.இராமசாமி ஒருவர். பம்பாய்க்குச் சென்றிருந்த ராஜாஜி, பெரியார் ஈ.வெ.இராம சாமிமீது தொடர்ந்த வழக்கு விசாரணை அக்டோபர் 18 ஆம் தேதியன்று வருகிறது என்ப தற்காக, அவசரமாகத் திரும்பி வந்தார். தேவ தாஸ்காந்தி மேலும் ஒரு நாள் தங்கியிருந்து விட்டுப் போகுமாறு சொன்னதைக்கூட அவர் ஏற்கவில்லை. ‘‘சென்னைக்கு நான் 18 ஆம் தேதி போயாகவேண்டும். அன்றுதான் இராமசாமி நாயக்கரின் வழக்கு இறுதி விசாரணை. அவர்மீது அரசத் துரோகக் குற்றம் சாட்டப் பெற்றிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அவருக்கு நீண்ட காலச் சிறைத் தண்டனை கிடைக்கலாம். எங்களுடைய காங்கிரசு நடவடிக்கைகளுக்குத் தீவிரம் நிறைந்த தலைவராக (Head and Active Master) அவர் இருந்து வருகிறார்'' என்று ராஜாஜி ரயிலிலிருந்து 16.10.1924 ஆம் தேதி காந்திஜிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


(ஆதாரம் நூல்: தமிழ்நாட்டில் காந்தி - நூற்றாண்டு வெளியீடு - ஆசிரியர் அ.இராமசாமி, பக்கம் 391-392).


ஈ.வெ.ரா. ஆதரிக்கும் காங்கிரசைவிட, ராஜாஜி ஆதரிக்கும் திமுக பரவாயில்லை என்று தேசியவாதிகள் பலர் நினைத்ததால்தான் 1967இல் காங்கிரசுக்கு பின்னடைவு வந்தது. 1969-இல் காங்கிரஸ் உடைந்து 1971இல் இந்திரா பிரிவு திமுகவுடன் அணி சேர அதன் பலம் குன்றி இன்று வரை தமிழக அரசியலில் தேசியக் கட்சிகளுக்கும் கழகங்களுக்கும் இடையே எல்லை வரைய முடியாத அளவுக்கு குழப்பம் இருந்து வருகிறது என்று மங்கலம் பாடுகிறார் துக்ளக் ஆசிரியர்.


ஏன் அத்தோடு முடித்து மங்கலம் பாடுகிறார்? 1967 தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை வீழ்த்தி - அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்ற மனக்கோட்டை கட்டியிருந்தார் ராஜாஜி.


சுதந்திரா, ஜனசங்கத்தோடு திமுகவை முடிச்சுப் போட்டு ஒரு கை பார்க்கலாம் என்ற ஆச்சாரியாரின் ஆசையில் மண் விழுந்ததே!


ஆச்சாரியார் என்றால் அடேயப்பா எப்படிப்பட்ட ராஜ தந்திரி, உடம்பெல்லாம் மூளை என்று எப்படி எல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் கெட்டி மேளம் கொட்டி (பில்டப்) ஆராதிப்பார்கள்? அவர் கடைசியில் அண்ணாவிடம் அடுகிடையாக விழுந்து தோல்வியைச் சந்திக்கவில்லையா? 1967இல் வெற்றி பெற்றதும் நேராக திருச்சியில் இருந்த, தான் கண்ட கொண்ட ஒரே தலைவரான தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து அண்ணா வாழ்த்துப் பெறவில்லையா - ஆட்சிக்கு ஆதரவு கோரவில்லையா? - அய்யாவும் ஆதரவு தரவில்லையா - "இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை!" என்று சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் அண்ணா பிரகடனப்படுத்தவில்லையா? (20.6.1967) எல்லா வகைகளிலும் 'திராவிட இயக்கத்திடம் - தந்தை பெரியாரிடம் முழு தோல்வியைக் கண்ட ஆரியம் ஆட்சி அதிகாரம் மத்தியில் இருக்கிறது என்ற நிலையில் கண் மண் தெரியாமல் துள்ளுகிறது.


தமிழக பா.ஜ.க.வின் புதுத் தலைமை பெரியார் பக்கம் சாய்கிறதோ என்ற அச்சத்தில் அம்மிக்கல்லை எடுத்து வயிற்றில் அடித்துக் கொள்கிறது அக்ரகாரம்!


தேசியம் தெரியுமோ தேசியம் - அவா தேசியத்துக்கு விரோதமானவர் - அவாளிடம் அண்டிவிடாதே!' - என்று பா.ஜ.க. தமிழக தலைவருக்கு அட்வைஸ் செய்கிறார் அம்பி.


உங்கள் தேசியம் என்ன என்று தெரியாதா? நான் இந்து தேசியவாதி என்று பிரதமர் நரேந்திர மோடி பதஷ்டமாகச் சொன்ன பிறகு எங்கள் வேலை சுலபமாகிப் போய் விட்டது 'துக்ளக்' குருமூர்த்தி வகையறாக்களே!


(2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு  பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட விருந்த நிலையில் மோடி வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் "நான் தேசியவாதி. நான் தேச பற்றுள்ளவன். அதில் எந்த தவறும் இல்லை. நான் பிறப்பால் இந்து. அதில் எந்த தவறும் இல்லை. அதனால் நான் ஒரு இந்து தேசியவாதி. நான் இந்து என்பதால் நீங்கள் என்னை இந்து தேசியவாதி என்று அழைக்கலாம்" என்று கூறியிருந்தார். இதையே 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரமாக மகாராட்டிரா முழுவதும் பதாகைகளாக ஒட்டியிருந்தனர், அதே போல் 2015-ஆம் ஆண்டு பீகார் தேர்தலிலும் இவரது இந்த பேச்சு முக்கிய பேசும் பொருளாக மாற்றப்பட்டது ஆனால் அந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது.)


நாங்கள் ஆதாரத்தோடு பேசுகிறோம். 'துக்ளக்' குருமூர்த்திகள் போல செத்தவர்களை சாட்சிக்கு அழைத்து அல்ல.


 


பெரியாருக்காகப் பதவி ஏற்ற காமராஜர்


சென்னை அரசினர் தோட்டத்தில் திராவிடர் கழகத் தலை வர் பெரியார், காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வரத ராஜுலு நாயுடு மற்றும் காமராஜர் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். முதலில் வரதராஜூலு நாயுடு பேசினார்.


‘‘அய்யா அடுத்த முதலமைச்சராக காமராஜரே ஆகட்டும்னு நாங்க எல்லோரும் நினைக்கிறோம். ஆனா அவரு ஒத்துக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறார். அதனால நீங்க ஒரு வார்த்தை சொன்னா தட்டாம கேட்பாரு காமராஜர். அதனாலதான் உங்களைக் கூப்பிட்டோம்'' என்றார். இதைக் கேட்ட பெரியார் சிறிது நேரம் யோசித்தார்.


‘‘காமராஜர் நீங்க கொஞ்சமும் தயங்கக் கூடாது. இது முக்கியமான பொறுப்பு. ஆச்சாரியார் உட்கார்ந்த நாற்காலியில் நீங்க தான் உட்காரணும்'' என்று சொன்னார் பெரியார்.


ஆனால், காமராஜருக்கோ இதில் கொஞ்சமும் விருப்ப மில்லை. நிதானமாக பதில் சொன்னார்.


“இப்போ மாநில கமிட்டித் தலைவராக இருக்கேன், கூடவே பார்லிமெண்ட் மெம்பராகவும் இருக்கேன். இதுவே போதும், என் குணத்துக்கு நிர்வாகம் எல்லாம் ஒத்துவராது. நம்ம ஆளு ஒருத்தரை உட்கார வைச்சு ஆட்சி நடத்துவோம்'' என்றார் காமராஜர். ஆனாலும் பெரியார் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் பேசினார்.


‘‘நாங்க இருக்கோம், எல்லாத்தையும் பார்த்துக் கிறோம். என் வார்த்தையைத் தட்டாதீங்க'' என்று உணர்ச்சிகரமாகப் பேசினார் பெரியார். அந்த வார்த்தைகள் காமராஜரை அசைத்தன. சரியென்று தலையாட்டினார்.


நன்றி: ‘மாலைமலர்', காமராஜர் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், பக்கம்  26


No comments:

Post a Comment