மத்திய அரசு தமிழ்நாட்டின்மீது திணித்துள்ளது! ஆயத்தமாவோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

மத்திய அரசு தமிழ்நாட்டின்மீது திணித்துள்ளது! ஆயத்தமாவோம்!

60 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு இல்லை என்பதா?


மத்திய பா.ஜ.க. அரசின் சமூகஅநீதி இதன்மூலம் வெளிப்படவில்லையா?


சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்கை எதிர்த்து


ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துப் போராடவேண்டிய நிலையை



60 சதவிகிதம் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதா? மத்திய பா.ஜ.க. அரசின் சமூகஅநீதி இதன்மூலம் வெளிப்படுகிறது! சமூகநீதிக்கு எதிரான இந்தப் போக்கை எதிர்த்து ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துப் போராடவேண்டிய நிலையை மத்திய அரசு தமிழ்நாட்டின்மீது திணித்துள்ளது  என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிக்கை வருமாறு:


‘நீட்' தேர்வின்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பட்டியல் இன்னமும் வெளியா காத நிலையில், அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து மருத்துவக் கல்விக்கு ஒதுக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க. அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.


இந்த ஆண்டுக்கு மட்டும்


27 சதவிகிதத்தின் அடிப்படையில் தரலாமே...


இந்த மனுக்கள் கடந்த 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓ.பி.சி.) மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டான இந்த ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்றும், மத்திய அரசு மருத்துவக் கல்லூரி களில் இருப்பதைப்போலவாவது 27 சத விகித இட ஒதுக்கீட்டையாவது இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒதுக்க முடியுமா?  என்று உயர்நீதிமன்றம் கேட்டது. (சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி கூடிய மூவர் கமிட்டியில் 69 சதவிகித இட ஒதுக்கீடுப்படி தரப்படல் வேண்டும் - அதுதான் மாநிலத்தில் அமலில் உள்ள சட்டம். அதன்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சில தகவல்களைக் கேட்டோம்; தமிழக அரசு இன்னும் கொடுக்கவில்லை என்று ஒரு விளக் கத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியதால்தான், அப்படியானால், இந்த ஆண்டுக்கு மட்டும் 27 சதவிகிதத்தின் அடிப்படையில் தரலாமே என்று தி.மு.க. சார்பில் கூறப்பட்டதை, நல்ல யோசனை, பல மாணவர்கள் பயன்பெற இவ்வாண்டு வாய்ப்பு ஏற்படும் என்று  உச்சநீதிமன்ற நீதிபதிகளே கூறி, மத்திய அரசிடம் கேட்டுக் கூறுவதாக வழக்குரைஞர் சொன்னதால், வழக்கை 15.10.2020 - நேற்றைக்கு ஒத்தி வைத்தனர்).


சமூகநீதிப் பறிப்பு உணர்வை


மத்திய அரசு காட்டியுள்ளது


ஆனால், நேற்றைய விசாரணையில் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், 50 சதவிகித அடிப்படையிலோ அல்லது 27 சதவிகித அடிப்படையிலோ கூட தருவதற்கு வாய்ப்பே இல்லை என்று வாய்மொழி மூலம் முதலில் கூறி, பிறகு அதை எழுத்துப்பூர்வமாக, தாக்கல் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய பிறகே, அதனை எழுத்து மூலமாகத் தந்து, தங்களது சமூகநீதிப் பறிப்பு உணர்வை மத்திய அரசு காட்டியுள்ளது.


அரசமைப்புச் சட்டப்படியும், உயர்நீதிமன் றத் தீர்ப்புப்படியும் ஒரு தீர்ப்பை அமுலாக்க திட்டமிட்டே மறுப்பது- இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுவது என்பது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் சமூகநீதிக் கெதிரான போக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமையவில்லையா?


கணினிமூலம் பட்டியலைத் திருத்தி


மாற்றி வெளியிட சில மணிகளே போதுமே!


மாணவர் தேர்வுப் பட்டியல் வெளியாகாத நிலையில், தமிழ்நாட்டுப் பட்டியலில் - 50 விழுக்காடு அடிப்படை அல்லது 27  சதவிகித இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக் கீடு செய்வது என்பது என்ன அவ்வளவு பெரிய சிக்கலான பிரச்சினையா? கணினிமூலம் பட்டியலைத் திருத்தி மாற்றி வெளியிட சில மணிகளே போதுமே!


10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு என்ற ஒரு சமூகநீதி பறிப்புச் சட்டத்தினை - பார்ப்பன மற்றும் உயர்ஜாதியினரைக் கொண்டு நிறைவேற்றிய அதிவேகம் நாட்டு மக்களுக்கு மறந்துவிட்டது என்ற நினைப்பா மத்திய அரசுக்கு?


மண்டலுக்கு எதிராக


‘‘கமண்டல்!''


மத்தியில் ஆளும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசுக்கு - எப்படியாவது பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையை ஒழித்துக் கட்டுவது என்பதே பா.ஜ.க.வின் அஜெண்டா என்பது இன்று நேற்றல்ல - 1992 மண்டல் பரிந்துரை 27 சதவிகிதத்தினை வேலை வாய்ப்புக்கு முதல் கட்டமாக சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்து அரசு ஆணை பிறப்பித்த போதிலிருந்தே, மண்டலுக்கு எதிராக ‘‘கமண்டலை'' தூக்கி இராமன் கோவில் ரத யாத்திரை என்ற ரத்த யாத்திரையைத் தொடங்கி, தங்களிடம் உள்ள பத்திரிகை துறையைப் பயன்படுத்தி, டில்லியில் அப்பாவி மாணவர்கள் சிலரை தீ வைத்துக் கொளுத்திக் கொள்வதாக ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகச் செயல்களை அரங்கேற்றி - அது பிறகு  அம்பலமாகிவிடவில்லையா?


நாட்டின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டிற்குமேல் உள்ள பிற்படுத்தப் பட்டவர்களுக்குள்ள இட ஒதுக்கீட்டை முதல் கட்டமாக ஒழித்துவிட்டால், மூலச் செங்கல்லை கட்டடத்திலிருந்து உருவிவிட்டால், மற்ற வைகளை எஸ்.சி., எஸ்.டி., போன்ற இட ஒதுக்கீடுகளை அடுத்தகட்டமாக ஒழித்து, பொருளாதார அடிப்படை என்று கூறி, மீண்டும் ஒரு பார்ப்பன உயர்ஜாதிக்கான ஏகபோக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குவதுதானே இவர்களின் திட்டம். இது நம் மக்களுக்குப் புரியவேண்டும்.


மத்திய அரசுக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று உச்சநீதிமன்றம் கேட்டுள்ளபோது, மிகவும் அலட்சியம் காட்டி, வாய்மொழிமூலம் ‘‘இயலாது'' என்று கூறுவது எப்படிப்பட்டது? உச்சநீதிமன்றம் வற்புறுத்திய பிறகு, எழுத்து மூலம் பிரமாணம் தாக்கல் என்றால், எத்தகைய மனப்போக்கு மத்திய அரசிடம் நிலவுகிறது?


சட்டப்படி தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை...


‘மயிலே மயிலே இறகு போடு' என்று கேட்பதற்குப் பதிலாக, நியாயத்தின் அடிப்படை - சட்டப்படி தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின்மூலம் திட்ட வட்டமாக ஆணையிடுவதுதான் நீதியின் மேல் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பெருக்குவதாக அமையும்.


கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகலாமா?


அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமையை நிலைநாட்டவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் அத்துணைக் கட்சிகளும் - ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய வழக்குகளில் பெற்ற தீர்ப்புமூலம் - கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போக லாமா?


அடுத்தகட்டம்பற்றி அனைவரும் இணைந்து போராட யோசிக்கும் நிலையை இதன்மூலம் மத்திய அரசு தமிழ்நாட்டின்மீது திணித்துள்ளது என்பதே பளிச்சென தெரியும் சுவர் எழுத்து ஆகும்.


ஆயத்தமாவோம்! ஆயத்தமாவோம்!!


அனைத்துக் கட்சித் தோழர்களே, ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


16.10.2020


No comments:

Post a Comment