அடுத்த முதல்வர் பிரச்சினையும் ஆட்சியின் சாதனையும்?
அடுத்த முதல் அமைச்சர் யார் என்ற சடுகுடுப் போட்டி அ.இ.அ.தி.மு.க.வில் தற்காலிகமாக நடந்து முடிந்துள்ளது.
முதல் அமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாள ருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சரும், கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் இவர்களிடம் தான் இந்தப் போட்டி.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு நாட்டின் பிரச்சினை தலைக்கு மேல் வழிந்து ஓடும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போது, அடுத்த முதல் அமைச்சர் யார் என்ற பிரச்சினை கடந்த 10 நாள்களுக்குமேல் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி விட்டது.
அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையே பனிப்போர் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் வந்திருக்கிறது. அது நமக்கோ, நாட்டு மக்களுக்கோ முக்கியமானதல்ல. அது ஓர் உள்கட்சிப் பிரச் சினையே!
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்குச் செய்யப்பட்டது என்ன, இந்த ஆட்சியில் சமூக, பொருளாதார திசையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்ன என்பதுதான் மக்களின் கவலையும், எதிர்ப்பார்ப்பும் ஆகும்.
இந்த வகையில் பெரிய அளவில் எங்கள் சாதனை என்று மார்தட்டிச் சொல்லும் அளவுக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்சி சாதித்தது என்ன?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதி முக்கியமானதாகக் கருதப்படுவது - சமூகநீதி தொடர்பானதே. இது தமிழ்நாட்டுக்கே உரித்தான தனித் தன்மையான மண் வாசனையாகும் (Soil Psychology).
இதில் இவ்வாட்சி எதைச் சாதித்து இருக்கிறது? மத்திய அரசால் தன்னிச்சையாகத் திணிக்கப்படும் - தேசியக் கல்விக் கொள்கையில் இரும்பு போல் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து மத்திய அரசை யோசிக்க வைத்ததா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிதான் என்பது அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்து ஆட்சி செய்த குறுகிய காலத்திலேயே சட்ட ரீதியாக உறுதிப்படுத் தப்பட்ட ஒன்று.
மத்திய அரசு கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையில் மூன்று மொழியைப் புகுத்துவது என்பதில் கொஞ்சமும் பின்வாங்காததோடு மட்டுமல்லாமல், மத்திய அரசு அண்மைக் காலமாக அனுப்பி வைக்கும் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையை அலட்சியப்படுத்தும் தன்மையில்தான் இருந்து வருகின்றன.
காந்தி பிறந்த நாள் தொடர்பாக மாணவர்களுக்கு நடத்தப் படும் போட்டியில்கூட தமிழுக்கு இடமில்லை.
தொல்லியல் அகழ்வாராய்ச்சி பட்டப் படிப்பில் தமிழைத் தவிர்த்து மற்ற செம்மொழிகள் எல்லாம் இடம் பெற்றும், இது குறித்து அதிமுக அரசு வாய் திறந்ததா?
நீட்டை எடுத்துக் கொண்டால் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட்டிலிருந்து விலக்குக்கோரும் இரு மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்து அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
இதில் என்ன கொடுமையென்றால், குடியரசு தலைவர் நிராகரித்ததாகக்கூட அதிமுக அரசு வெளிப்படுத்தாமல் அமுக் கியது எந்த வகையில் நேர்மையானது, இது எந்த வகை ஜன நாயகம்?
உச்சநீதிமன்ற வழக்கில் மத்திய அரசின் வழக்குரைஞர் தெரிவித்த பிறகுதானே இந்த உண்மை தெரிய வந்தது.
இதைப்பற்றிக் கலந்து பேச அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தும் அதிமுக அரசு கூட்டாதது ஏன்?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவே பற்றி எரியும் நிலையில், அஇஅதிமுக அரசு, அவற்றை ஆதரிப்பது எத்தகைய கொடுமை அநீதி!
எட்டு வழிச்சாலை பிரச்சினையிலும் இவ்வரசு மக்கள் விரோத முடிவை மேற்கொண்டு வருகிறது.
மீத்தேன் போன்றவையை தமிழ்நாட்டு விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக மத்திய அரசு செயல்படுத்தும் நிலையில், அதிமுக அரசு யாருக்கோ வந்த விருந்து என்று கருதுகிறதே!
கரோனா பிரச்சினையிலும் இவ்வரசின் சாதனை என்ன? நாளும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பெருகிக் கொண்டு தானே இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தி கொதி நிலையில்தான் உள்ளது. மக்களவைத் தேர்தலிலேயே அதனை உணர்த்தி விட்டனர்.
இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.க. ஏதோ ஆட்சியைப் பிடித்து விட்டது போல, அடுத்த முதல் அமைச்சர் யார் என்ற சண்டை என்றால், இதனை ஒரு நகைச்சுவையாகத்தான் தமிழ்நாட்டு வாக்காளர்கள் கருதுவார்கள். ஆட்சி முடிவதற்குள் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்ய அதிமுக ஆட்சி முயலட்டும்!
No comments:
Post a Comment