விருத்தாசலம் சிலம்பரசன் - சங்கீதா மணவிழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

விருத்தாசலம் சிலம்பரசன் - சங்கீதா மணவிழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை

உலக மானுடத்தின் சரிபகுதியாக இருக்கின்ற பெண்ணினத்திற்கு விடுதலை தந்த பெருமை தந்தை பெரியாருக்கும் - திராவிடர் இயக்கத்திற்கும் - சுயமரியாதை இயக்கத்திற்கும் உண்டு!



சென்னை, அக்.18 உலக மானுடத்தின் சரிபகுதியாக இருக்கின்ற பெண்ணினத்திற்கு விடுதலை தந்த பெருமை தந்தை பெரியாருக்கும், திராவிடர் இயக்கத் திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


மணமக்கள் சிலம்பரசன் - சங்கீதா


இன்று (18.10.2020) காலை மணமக்கள் விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி  தலைவர் சிலம்பரசன் - சங்கீதா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை (விருத்தாசலம் - மணலூர் சேலம் முதன்மைச் சாலையில் உள்ள (எருமனூர் சாலை) மகாலட்சுமி திருமண மண்டபத்தில்) கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலி மூலமாக நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.


பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட தோழர்களே, மணமக்கள் பெற்றோர்களே, கழகப் பொறுப்பாளர்களே, கழகத் தோழர்களே, சான்றோர்களே உங்கள் அனை வரையும்  வருக, வருக என நான் அன்போடு வரவேற் கிறேன்.


காரணம், மணமகனாக இருக்கக்கூடிய சிலம்பரசன் அவர்கள், கழக இளைஞரணியின் சீரிய, முன்னோடி செயல்வீரர் ஆவார். இளந்திரையன் அவர்களுடன் இருந்து, தொழிலிலும் சரி, இயக்கத்திலும் சரி, சிறப்பாக பணியாற்றக் கூடிய  சுறுசுறுப்பு மிகுந்த, துடிப்பு மிகுந்த ஒரு இளைஞராவார்.


அத்தகைய இளைஞருடைய மணவிழாவினை, இந்தக் கரோனா தொற்று சூழல் இல்லையானால், நானே நேரில் வந்து, தலைமையேற்று நடத்தக்கூடிய ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்.  நம்முடைய தோழர்கள் காணொலிமூலம் நடத்துங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த மணவிழாவினை காணொலியின் மூலமாக நான் நடத்தி வைக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.


அருமை நண்பர்களே, மணமகனாக இருக்கக்கூடிய தோழர் சிலம்பரசன் ஒரு பட்டதாரி. அதேபோல, மண மகள் சங்கீதாவும் இரண்டு பட்டங்களைப் பெற்றவர். இரண்டு பேருமே கிராமத்திலிருந்து வந்தவர்கள்.


மணமக்களின் சாதனைகளைச்


சுட்டிக்காட்டினாலே போதுமானது


தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் எப்படிப்பட்ட அமைதிப் புரட்சியை, கல்விப் புரட்சியை உருவாக்கி இருக்கிறது என்பதற்கு உதாரணம், கிராமத்திலிருந்து முதல் தலைமுறையாக வந்திருக்கக்கூடிய இந்தப் பிள்ளைகளின் சாதனைகளைச் சுட்டிக்காட்டினாலே போதுமானது - திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்பதற்கு அடையாளமாகும்.


மணமகள் குடும்பத்தாரைப்பற்றி சொல்லுகின்ற போதும் சரி, மணமகன் குடும்பத்தாரைப்பற்றி சொல்லு கின்ற போதும் சரி, இரண்டு குடும்பங்களும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள்.


உ.மங்கலம் தோழர்


ஆசிரியர் தர்மலிங்கம்!


அதைவிட எனக்கு உ.மங்கலத்தைச் சார்ந்த அருமை நண்பர் பழைய தோழர் நினைவிற்குரிய தோழர் ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களுடைய ஊர்க் காரர்கள்; அவருடைய உற்றார் உறவினர் என்று சொல்லுகின்றபொழுது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.


காரணம், தர்மலிங்கம் அவர்கள், பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் என்னால் சேர்க்கப்பட்டவர்.


அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை எப்பொழுதுமே நான் மறக்கவே முடியாது.


அவர் ஒரு பரிந்துரைக் கடிதத்தை, டி.டி.வீரப்பா அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அப்போதுதான் நான் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த காலமாகும். அந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்க்கைப் பொறுப்பினை அம்மா அவர்கள் என்னிடம் கொடுத்திருந்தார்கள்.


பரிந்துரைக் கடிதமும் - பலாப்பழமும்!


அப்போது நான் கடலூரில் வழக்குரைஞராக இருந்த சூழ்நிலையில், நண்பர் தர்மலிங்கம் அவர்கள், வீட்டிற்கு வந்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தார். சரி, உங்களுக்கு இடம் தரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன்.


அவர் ஒரு பெரிய பலாப்பழத்தை உ.மங்கலத் திலிருந்து எடுத்துக் கொண்டுவந்திருந்தார். அதைப் பார்த்தவுடன், எனக்கு மிகுந்த கோபம் வந்தது.


''நீங்கள் பரிந்துரைக் கடிதம் வாங்கிக் கொண்டு வந்தி ருக்கிறீர்கள் சரி; இடம் வேண்டும் என்று கேட்டீர்கள், நீங்கள் இயக்கத்தவர்கள் சரி. ஆனால், இந்தப் பலாப் பழத்தை ஏன் கொண்டு வந்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.


நான் அப்பொழுதுதான் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கின்றேன். எந்தவிதமான தவறும் நடந்து விடக் கூடாது என்பதில், கண்ணுங்கருத்துமாக இருந்த காலகட்டம் அது.


அந்தச் சூழலில், அவரை நான் சத்தம் போட்டுவிட்டு, இந்தப் பழத்தை நீங்கள் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போங்கள் என்றேன்.


''அய்யா, இதை எப்படி நான் மறுபடியும் எடுத்துக் கொண்டு போவேன்?'' என்றார்.


எங்கள் வீட்டில் உள்ளோர் என்னிடம் சமாதானம் சொன்னார்கள்; அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.


வேறு வழியில்லாமல், தர்மலிங்கம் அவர்கள், அந்தப் பழத்தை தலையில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.


ஆசிரியர் பயிற்சி முடித்தார்; அவர் மிகவும் நெருக்க மானார். ஓய்வு பெற்ற பிறகு அவர், ஒன்றியப் பொறுப்பு மற்ற பொறுப்புகளில் இருந்தார்.


எனவே, தர்மலிங்கம் அவர்களைப்பற்றி நினைக்கும் பொழுது, அந்தச் சம்பவம் என்றைக்குமே மறக்கவே மறக்காது.


போராட்டங்கள் - பிரச்சாரப் பயணங்களில்


முன் நிற்கக்கூடியவர் மணமகன் சிலம்பரசன்!


அப்படிப்பட்டவருடைய ஊரிலிருந்து, ஒரு சிறிய கிராமத்தில் இருந்து நம்முடைய மணமகன் சிலம்பரசன் அவர்கள் ஒரு பெரிய வாய்ப்பை செய்திருக்கிறார். 20 இளைஞர்களுக்கு மேற்பட்டு, அவர் திரட்டியிருக்கிறார். போராட்டம் என்று சொன்னால், அதில் முன் நிற்கக் கூடியவர்கள். எந்தப் பிரச்சாரப் பயணங்கள் என்று சொன்னாலும், முன் நிற்கக்கூடிய ஒரு செயல்வீரர்.


அப்படிப்பட்ட ஒரு அற்புதமான செயல்வீரர் - இன்றைக்கு வாழ்க்கை இணையேற்பு விழாவினை ஏற்கின்ற இந்தக் காலகட்டத்தில், நேரில் வந்து நடத்த முடியாவிட்டாலும்கூட, காணொலி மூலமாக - சிக்கனமாகவும், சிறப்பாகவும் இந்த மணவிழா நடை பெறுவது என்பது மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


தந்தை பெரியாரின் தொலைநோக்கு!


அதிலும் குறிப்பாக, அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், எப்படிப்பட்ட புரட்சியை உருவாக்கி யிருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம், இந்த மணவிழாதான்.


அவரே, ஒரு காலத்தில், இனிவரும் உலகத்தில் சொன்னார், ''இனிமேல் பல நிகழ்ச்சிகள் எல்லாம் காணொலிமூலமாகத்தான் நடைபெறும்'' என்று. அதுவும் இன்றைய கரோனா காலத்தில், அவருடைய கருத்தை, அவருடைய தொண்டர்களாக இருக்கக்கூடிய நாமே செயல்படுவதை - இயக்கம் விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடைபெறுவதை - பிரச்சாரம் தங்கு தடையின்றி நடைபெறுவதையெல்லாம் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.


மணமகள் வீட்டாரும் சரி, நம்முடைய திராவிட இயக்கக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். தி.மு.க., அ.தி.மு.க. என்றாலும், திராவிட இயக்கம்தான், நம்மு டைய இயக்கம்தான்.


அப்படிப்பட்ட ஒரு சூழலில், இன்றைக்கு இரண்டு நல்ல குடும்பங்கள் இணைந்திருக்கின்றன. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.


அதுபோல, மணமக்கள் இருவரும் விவரம் தெரிந்த வர்கள், படித்தவர்கள். அவர்களுக்கு மற்றவர்களின் அறிவுரை தேவைப்படாது.


எளிமையாக - சிக்கனமாக வாழவேண்டும்!


தந்தை பெரியார் அவர்கள் எப்பொழுதும் சொல்லு வார்கள், ''எளிமையாக வாழவேண்டும்; அடக்கமாக வாழவேண்டும்; அதேநேரத்தில், சிக்கனமாக வாழ வேண்டும்'' என்று.


இந்த மணவிழாவினை காலை 7 மணிக்கு வைத்திருக்கிறார்களே என்று நினைத்த நேரத்தில், சில பேருக்குச் சங்கடம்தான், நான் உள்பட. ஏனென்றால், இந்த நேரம் காலையில் இருக்கிறது என்பதால் என்றாலும்கூட, சிற்றுண்டியோடு முடித்துவிடலாம் என்பதால் நல்லதுதான்.


நம்முடைய தென்னார்க்காடு மாவட்டத்தில், நல்ல வசதி படைத்த சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்கூட காலையில் 7 மணிக்கே திருமணங்களை நடத்து கிறார்கள், கரோனா இல்லாத காலத்தில்கூட. காலை சிற்றுண்டியோடு மணவிழாவினை முடித்துவிடுவார்கள். அது நல்ல முறைதான். எனக்குக் கொஞ்சம் வசதிக் குறைவு என்பது முக்கியமல்ல.


அந்த வகையில், இந்த மணவிழா சிக்கன மணவிழா நடைபெறுவதற்கு நாம் உதவி செய்கிறோம் என்ற அளவில், இந்த மணவிழாவினை காலையிலேயே வைத்து, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பது, பாராட்டத்தகுந்ததாகும்.


சுயமரியாதையில் நாம் உயருகிறோம்


என்று அர்த்தமாகும்!


எவ்வளவுக்கெவ்வளவு நாம் வாழ்க்கையில் சிக் கனத்தைக் கடைப்பிடிக்கின்றோமோ, அவ்வளவுக் கவ்வளவு சுயமரியாதையில் நாம் உயருகிறோம் என்று அர்த்தமாகும்.


ஏனென்றால், யாருடைய தயவையும் நாம் எதிர்பார்க்கவேண்டிய அவசியமில்லை. வருவாயைப் பெருக்குவது என்பதே, செலவை சுருக்குவது என்பதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.


அந்த அளவில், மிகத் தெளிவாகப் பார்க்கின்றபொழுது நாம் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவது; ஆடம்பரமாகப் பகட்டாக வாழ்க்கை நடத்துவது என்பதெல்லாம், நம்முடைய கொள்கைக்காரர்களுக்கு, சுயமரியாதைக்காரர்களுக்கு, பெரியார் கொள்கையாளர்களுக்கு உடன்பாடு இல்லாத ஒன்றாகும்.


அந்த வகையில், உழைப்பையே நம்பி, நாணயத்தையே முன்னிறுத்தி, நேர்மையையே வாழ்வாகக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய இளைஞர்கள், இதுபோன்ற ஓர் எடுத்துக்காட்டான மணவிழாவினை நடத்திக் கொள்வது என்பது மிகவும் பாராட்டத்தகுந்ததாகும்.


அந்த வகையில், நம்முடைய அருமை நண்பர் இளந்திரையன் அவர்களுடைய ஒரு நல்ல கூட்டாளியாக இருப்பவர் மணமகன் சிலம்பரசன் அவர்களாவார்.


நம்முடைய இயக்கத் தோழர்களும்


ஒரு குடும்பம் போல இருக்கிறார்கள்!


நம்முடைய இயக்கத் தோழர்களும் ஒரு குடும்பம் போல இருக்கிறார்கள். மாவட்டத் தலைவரானாலும், ஏராளமாக இருக்கக்கூடிய தோழர்களானாலும் சரி.


முத்துக்கதிரவன் ஆனாலும், குமரேசன் ஆனாலும், இளவரசன் அவர்களானாலும், அதேபோல, நமக்கு என்றைக்கும் தோன்றாத் துணையாக இருக்கக்கூடிய தோழர் இமயம் அவர்களானாலும், திராவிட இயக்கத்திற்குப் புரவலராக இருக்கக் கூடிய அய்யா சிறீ ஜெயின் ஜூவல்லவரி நகைக்கடை உரிமையாளர் தொண்டறச் செம்மல் அகர்சந்த் சோரடியா ஆனாலும், எல்லோரும் ஒரு குடும்பம் போல, ஒரு பொதுமை உணர்வோடு இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.


எனவே, இது ஒரு நல்ல மணவிழா - எளிய மணவிழா - இனிய மணவிழா - வாழ்க்கை இணையேற்பு விழா.


70 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நிலை?


இந்தத் தத்துவத்தைப்பற்றி நான் இங்கே அதிகமாக சொல்லவேண்டிய அவசியமில்லை. சுயமரியாதைத் திருமணங்களுக்காக, ஒரு காலத்தில் மணமகளைக் கடத்திக் கொண்டு போய் வைத்து நடத்தக் கூடிய காலகட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தது; ஆனால், அவையெல்லாம் இன்றைக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.


சுயமரியாதைத் திருமணம் என்பது இன்றைக்கு உலகளாவிய மணவிழாவாக நடந்திருக்கிறது.


சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு சொற்பொழிவு ஆற்ற சென்ற காலகட்டத்தில், உல்ரிக் நிகோலஸ் அம்மையார் அவர்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்.


''நீங்கள் இங்கே வரும்பொழுது, உங்கள் தலைமை யில்தான் மணவிழாவினை நடத்திக் கொள்ளவேண்டும் என்று, வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள்; ஜாதியைப் பார்க்காத ஈழத்தமிழர்கள் சுயமரியாதைத் திருமண முறையில் மணவிழாவினை நடத்திக் கொள்ள விருப்பப்படுகிறார்கள்'' என்று சொன்னவுடன், அதனை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டேன்.


பெற்றோர்கள், மற்றவர்கள் எல்லோரும் வந்து அந்த மணவிழாவில் பங்கேற்றார்கள். அந்த மணவிழா சிறப்பாக நடைபெற்றது.


சுயமரியாதைத் திருமணங்கள்


உலகம் முழுவதும் நடைபெறுகின்றன!


அதுபோல, சுயமரியாதைத் திருமணங்கள் அமெரிக் காவிலும், அய்ரோப்பாவிலும், மலேசியாவிலும், சிங்கப் பூரிலும் நடைபெறுகின்றன.


மலேசிய நாட்டில், கழக செயல்வீரர்களையே, பதிவு அதிகாரிகளாக நியமிக்கக் கூடிய அளவிற்கு அவர்கள் இருக்கிறார்கள்.


எனவே, தந்தை பெரியார் அவர்களுடைய மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது என்பதற்கு அடையாளம், சுயமரியாதைத் தத்துவத்தை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.


இந்த மணவிழாவினை, தமிழில் நடத்துகின்றோம், தமிழர்கள் நடத்துகின்றோம் என்பதைத் தாண்டி, மனிதத் தன்மையோடு நடைபெறக்கூடிய மணவிழா என்பதற்கு அடையாளம் என்னவென்றால், உயர்திணை - அஃறிணை என்று ஆக்கியிருக்கிறார்கள், பழைய வைதீகத் திருமணத்தில்.


அதாவது பாணிக்கிரகணம் என்றாலும், தாரா முகூர்த்தம் என்றாலும், கன்னிகாதானம் என்று சொன்னாலும், ஒரு ஜடப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் பெண்களை; சந்தையில் எப்படி மாடுகளை விற்பார் களோ, அதுபோல, பெண்களை ஒரு அஃறிணை பொருளாக, கொடுப்பது - கொள்வது என்றில்லாமல், மணமக்கள் இருவரும் புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழவேண்டும்; இரண்டு பேரும் நண்பர்கள்; இரண்டு பேரும் மனித ஜீவன்கள் என்பதை தந்தை பெரியார் அவர்கள்தான், வாழ்விணையர்கள் - வாழ்க்கைத் துணை நலத்திற்கு உரியவர்கள் என்றாக்கினார்.


பெண்ணினத்திற்கு விடுதலை தந்த பெருமை!


எனவே, அந்த வகையில், உலக மானுடத்தின் சரிபகுதியாக இருக்கின்ற பெண்ணினத்திற்கு விடுதலை தந்த பெருமை தந்தை பெரியாருக்கும், திராவிடர் இயக்கத்திற்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உண்டு.


இப்படி ஒரு சட்டம் உலகிலேயே வேறு எந்த இடத்தி லும் கிடையாது. இவ்வளவு எளிமையான முறையில் - வெளிநாட்டுத் தலைவர்கள் எல்லாம் இந்த மணவிழா முறையினை பார்த்து, சிறப்பாக சொன்னார்கள்.


கருநாடக முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் அவர்கள், சென்னையில் நடைபெற்ற சுயமரியாதை மணவிழாவில் கலந்துகொண்டபோது சொன்னார்.


அதுபோலவே, நான் தலைமை தாங்கி நடத்திய கதிரவன் இல்லத்து மணவிழாவில், தேவராஜ் அர்ஸ் அவர்கள் சொன்னார்கள், ''எனக்கு இது முன்பே தெரிந்திருந்தால், நான் ஆட்சியில் இருக்கும்பொழுது, தமிழ்நாட்டில் இருப்பதுபோன்று, இங்கேயும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருப்பேனே''என்று அவர் சொன்னார்.


எனவேதான், ஒரு காலகட்டத்தில் எதிர்ப்புக்கு ஆளானாலும்கூட, பிறகு தந்தை பெரியாரே மகிழ்ச்சி யடையக் கூடிய அளவிற்கு அது வந்தது.


50 ஆண்டுகளுக்குப் பிறகு...


இன்னொரு காலகட்டத்தில், அய்யாவிற்குப் பிறகு நாம் சந்தித்தோம். அது என்னவென்றால், இதே சுயமரியாதைத் திருமணம், எந்த உயர்நீதிமன்றத்தில் செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்தார்களோ, அதே உயர்நீதிமன்றத்தில், இந்த சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்று, அதுவும், சட்டம் நிறைவேற்றி 50 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவித்தது, இன்றைக்கு முடிவு செய்யப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது என்றால்,


இந்தக் கொள்கை எப்பொழுதும் வெல்லும் - சுயமரியாதைத் திருமணம் செல்லும் என்பதற்கு அடை யாளமாக இருக்கிறது.


எனவே, நண்பர்களே! இந்த மணவிழா மணமக் களாகிய அருமைச் செல்வங்களே, சிறப்பாக வாழுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழுங்கள்.


அண்ணாவின் அறிவுரை!


''விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை -


கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை'' என்ற அறிஞர் அண்ணாவின் மேற்கோளை நாம் அடிக்கடி நினைவூட்டுவது என்பது, அவருக்காக அல்ல - நமக்காக. நம்முடைய வாழ்க்கை சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக.


எனவேதான், மணமக்களாகிய நீங்கள் இருவரும் சிறந்த பகுத்தறிவாளர்களாக வாழுங்கள். நாம் இந்தக் கொள்கைக்குப் பெருமை சேர்க்கவேண்டுமானால், நம்முடைய வாழ்க்கை என்பது நாணயமாகவும், நேர்மையாகவும், சமுதாயத்திற்குப் பாடுபடக் கூடியதாக இருப்பதுதான் மிகவும் சிறந்ததாகும்.


இந்த மணவிழானை நடத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


அந்த வகையில் ஒன்றை நான் இப்பொழுது உறுதியாக சொல்ல விழைகிறேன்.


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் தொண்டுக்கு வீர வணக்கம்!


ஏற்கெனவே இதுபோன்ற மணவிழாக்களை, எங்களைப் போன்றவர்கள் - தந்தை பெரியார் அவர்கள், அன்னை மணியம்மையார் அவர்கள் - புரட்சிக்கவிஞர் அவர்கள் போன்றவர்களும் நடத்தி வைத்தார்கள் என்று சொன்னாலும்கூட, நீதிபதிகள் கலந்துகொண்ட திருமணங்கள்கூட செல்லாது என்று சொல்லக்கூடிய சூழலை மாற்றிய பெருமை அண்ணாவைச் சார்ந்தது.


இம்மணமுறையை தந்த பெருமை அறிவாசான் தந்தை பெரியாரைச் சார்ந்தது.


எனவே, தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணா வையும் நினைத்து, அவர்களுடைய தொண்டுக்கு வீர வணக்கம் செலுத்தி, திராவிட இயக்கத்தினுடைய அரிய வரலாற்று சாதனைகளை என்றென்றைக்கும் போற்றி, அந்தப் பெருமையைக் கூட்டி,


இப்பொழுது மணமக்களாக இருக்கக்கூடிய அருமை நண்பர்கள் செல்வர்கள் சிலம்பரசன் அவர்களும் - சங்கீதா அவர்களும் உறுதிமொழி கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.


No comments:

Post a Comment