செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 1, 2020

செய்தியும், சிந்தனையும்....!

‘இடிக்'கிறதே!


ராமஜென்ம பூமிப் பிரச்சினையில் அத்வானியின் பங்களிப்பை மறக்க முடியாது. - எடியூரப்பா, கருநாடக முதலமைச்சர்


எங்கோ 'இடிக்'கிறதே - அத்வானிக்கு ஆதரவா அல்லது .... நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவா?


ந(¬)டராஜர்!


சேலம் சுகவனேஸ்வர் கோவிலில் இருந்த 100 கிலோ அய்ம்பொன் நடராஜர் சிலை பல்லாண்டுகளுக்குப் பிறகு கொள்ளையரிடமிருந்து மீட்கப்பட்டது.


இந்தக் கடவுள் சிலைகளுக்கு எத்தகைய சக்தி தெரியுமா? நாடெங்கும் கிளைக் கோவில்களில் குட்டிக் குட்டியாக உள்ள நடராஜர் சிலைகளுக்கெல்லாம் அப்பன் சிலையான சிதம்பரம் நடராஜர் சிலையின் கதை தெரியுமா? 24.12.1648 முதல் 4.11.1686 வரை 38 ஆண்டுகள் சிதம்பரம் நடராஜன் சிலை 'அண்டர் கிரவுண்ட்' ஆனது தெரியுமா? 1647 இல் தமிழ்நாட்டின் வட பகுதி மாவட்டங்களில் ஏற்பட்ட கடும் பஞ்சம் காரணமாக சிதம்பரம் நடராசனுக்குப் பூஜை நடத்த முடியவில்லையாம். அதன் காரணமாக அச்சிலை அப்புறப்படுத்தப்பட்டதாக ஒரு தகவல். பிஜப்பூர் சுல்தான் படையெடுப்புக்கு அஞ்சி வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு - பொன்னும், பொருளும் கோவிலில் குவிந்து கிடந்ததால், அப்படியொரு பயமாம்! அப்புறப்படுத்தப்பட்ட சிதம்பரம் நடராஜன் சிலை 40 மாதங்கள் குடுமியான் மலையிலும், பின்னர் மதுரையிலும் வைத்துக் காப்பாற்றப்பட்டுள்ளது. திருவாரூரில் கண்டு எடுக்கப்பட்ட மூன்று வடமொழிச் செப்பேடுகள், தமிழ்ப் பல்கலைக் கழக செய்தி குறிப்பு - 'ஆனந்தவிகடன்' மணியன் நடத்திய 'ஞானபூமி' இதழ் (1983 ஆகஸ்ட்) இதற்கு ஆதாரமானவையாகும்.


அந்தோ பரிதாபமே! தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள்களை மனிதன்தான் அப்புறப்படுத்திக் காப்பாற்றுகிறான்.


கடவுளை மற, மனிதனை நினை! - தந்தை பெரியார்


சாத்தியம்தானா?


ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


மத்திய பி.ஜே.பி. அரசு கண் ஜாடை காட்டினால் போதும், கரணம் போட ஆரம்பித்துவிடும் நமது மாநில அரசு.


இந்தத் திட்டத்தின்படி ரேசன் கடைகளுக்குக் குடும்பத் தலைவர் அல்லது கார்டில் இடம்பெற்றிருப்போர் நேரில் சென்று கைரேகை வைக்கவேண்டும் என்பது நடைமுறை சாத்தியம்தானா என்பது சிந்திக்கவேண்டிய ஒன்றே!


No comments:

Post a Comment