‘நீட்‘ பின்னணியில் இருக்கும் வல்லாண்மையும் - வக்கிரமும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 19, 2020

‘நீட்‘ பின்னணியில் இருக்கும் வல்லாண்மையும் - வக்கிரமும்!

நீட் முடிவுகளில்   திரிபுரா, உத்தரகாண்ட், தெலங் கானா மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களைவிட தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை பல ஆயிரம் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு  தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததாகக் காட்டப்பட்டுள்ளது.


கரோனா தொற்று, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஊரடங்கு - பலவித  கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. பல சமூக அமைப்புகள் மற்றும் மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தேர்வைத் தள்ளிவைக்க உச்சநீதிமன்றத்தில் மனுகொடுத்தும் நீதிமன்றம் தேர்வுகள் நடத்த அனுமதி கொடுத்தது, இதனை அடுத்து செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது..


 இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை (16.10.2020) அன்று மாலை அறிவிக்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் உடனடியாக இணைய தளங்களில் பார்க்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பக் கோளாறு இருந்தது.  பல முறை சர்வர் சிக்கல்கள் வந்தன.


நீட் தேர்வு நடத்திய முகமை மாநில அளவிலான பட்டியல் ஒன்றை அன்றைய இரவு நேரத்தில் வெளியிட்டுள்ளது.


அதில் கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களில் தேர்வுக்கு விண்ணப்பித்தோர்; தேர்வு எழுதியோர்; தேர்ச்சி பெற்றோர் விவரமும், 2020ஆம் ஆண்டு தேர்வு தொடர்பான விவரங்களும் ஒப்பீட்டுத் தேர்ச்சி விகிதம்  அளவில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப் படையில் இந்தியாவிலேயே மிக அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உள்ள மாநிலம் திரிபுராதான்.


திரிபுராவில் 88,889 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாகவும். இதற்கு அடுத்த இடத்தில்தான் மகாராஷ்டிரா இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர் கள் மொத்த எண்ணிக்கையே 3,536 பேர் மட்டும்தான் என அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்  88,889 பேர் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது


இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கையைவிட தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை மிகமிக அதிகம். உத்தரகாண்ட் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 12,047. ஆனால் இந்த மாநிலத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையோ 37,301 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தெலங்கானாவில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித் தவர்கள் 54,872. நீட் தேர்வு எழுதியவர்கள் 50,392. இம்மாநிலத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1,738. ஆனால் தேர்ச்சி விகிதம் 49.15% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பல குளறுபடிகளுடன் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.


மக்கள் மத்தியிலிருந்து கடுமையான அதிருப்திகள் வெடித்த நிலையில், வேறு புள்ளி விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.


மத்திய பிஜேபி அரசின் நிருவாகத் திறன் எந்த அளவுக்குப் பொறுப்பற்ற தன்மையாலும், சீர்கெட்ட தன்மையாலும் நோய் வாய்ப்பட்டுக் கிடக்கிறது என்பதற்கு எத்தனையோ, எடுத்துக்காட்டுகள் உண்டு என்றாலும், இந்த ‘நீட்‘ தொடர்பான பிரச்சினையில் மேலும் வெளிச்சமாகவே தெரிய வந்துள்ளது.


இந்த முடிவுகள் அடிப்படையிலேயே மக்கள் மத்தியில் பெரும் அய்யப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய தாகும்.


No comments:

Post a Comment