காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்றுக!: வைகோ வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரைப் பெற முனைந்து செயலாற்றுக!: வைகோ வலியுறுத்தல்


சென்னை, அக். 3- மதிமுக பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளிட்டுள்ள அறிக்கை வருமாறு,


காவிரி நடுவர் மன்றம் 1991இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தென்மேற்கு பருவ மழை காலமான ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையில் தமிழ்நாட்டிற்கு 137 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக மாநிலம் திறந்துவிட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு இருந் தது. 2007 பிப்ரவரி 5இல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கிய போது, இதே காலகட்டத்தில் கர் நாடகம் 134 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசா ரணை செய்து, 2018 பிப்ரவரியில் அளித்தத் தீர்ப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரையில் 123.14 டி.எம்.சி. நீரை கருநாடகம் திறந்துவிட வேண்டும் என்று மேலும் குறைத்தது.


இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு, சுமார் 3 டி.எம்.சி. குறைவாக 120.24 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்து இருக்கிறது என்பதை இந்து ஆங் கில நாளேடு (02.10.2020) சுட்டிக் காட்டி இருக்கிறது.


கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நாளேடுகளில், உச்சநீதிமன்ற தீர்ப் பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களுக்கு திறந்துவிட வேண்டிய நீர் 86.38 டி.எம்.சி. என்றும், ஆனால் கரு நாடகம் 75.048 டி.எம்.சி. மட்டுமே திறந்துவிட்டது என்றும் செய்தி கள் வெளியாகின.


இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி திருவாரூரில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி செய்தியாளர்களிடம், உச்ச நீதிமன்றம் வரையறுத்த அளவுப் படி கருநாடகம் மாதந்தோறும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர வேண்டுமென்று கேட்டு வருகி றோம். கருநாகடமும் அதைத் தந்து வருகிறது” என்று தெரிவித் ததாக ஏடுகளில் செய்தி வந்தது. முதலமைச்சரின் கருத்து தமிழகத் திற்குப் பாதகத்தையே ஏற்படுத்தும்.


மத்திய அரசு பெயரளவுக்கு அமைத்த காவிரி ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அவ் வப்போது “உச்சநீதிமன்றத் தீர்ப் பின்படி தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும்” என்று கருநாடகத்திற்கு உத்தரவு போடுவதும், அதனை கருநாடக அரசு அலட்சியப் படுத்துவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் உண்மை நிலையை மூடி மறைத்துத் தகவல்களை வெளியிடுவது, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பலிகொடுத்துவிடுவது போல ஆகிவிடும்.


எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்புகளின்படி, காவிரியில் தண் ணீரைப் பெறுவதற்கு தமிழக அரசு முனைப்புடன் செயலாற்ற வேண் டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment