மனுதர்மத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் பங்கேற்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 23, 2020

மனுதர்மத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாளை நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத்தினர் பங்கேற்பீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை



ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் மனுதர்ம சாஸ்திரத்தை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள்  கட்சி நடத்தும் போராட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற் குமாறு கழகத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


காலம் காலமாகப் பெண்களை இழிவு செய்யும் மனுதர்மம் என்னும் சனாதன நூலைத் தடை செய்ய வலியுறுத்தி நாளை (24.10.2020) சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழ்நாடெங்கும்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இது  வரவேற்கத்தக்க,  பாராட்டத்தக்க நட வடிக்கையே!


மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பதை தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தொடர்ந்து பிரச்சாரம்  செய்து வருகிறது.


கழகத்தின் மனுதர்ம எதிர்ப்பு - எரிப்பு வரலாறு


ஏன், பல முறை நமது இயக்கத்தின் சார்பில் எரிக்கவும் பட்டுள்ளது. 17.10.1927 அன்று காட்பாடியில் நடைபெற்ற ஆதி திராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜா எரித்தார். 4.12.1927 அன்று குடியாத்தத்தில் நடைபெற்ற வடாற்காடு மாவட்ட சுயமரியாதை மாநாட்டிலும் எரிக்கப்பட்டது.


17.5.1981 அன்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தால் மகளிர் அணியினர் தலைமையில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மீண்டும் 7.2.2019 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.


1927 டிசம்பர் 25இல் மகாராட்டிர மாநிலம் மகத்நகரில் அண்ணல் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம சாஸ்திரம் எரியூட்டப்பட்டது.


இன்னும் சொல்லப் போனால் 1922ஆம் ஆண்டில் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் மனுதர்மத்தையும்,  இராமாயணத்தையும் எரிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் முழங்கினார்.


எனவே, மனுதர்ம எதிர்ப்பு - எரிப்பு என்பது - நமது இயக்கத்தின் தொடர் நடவடிக்கையாகவே இருந்து வந்திருக்கிறது.


மனுதர்மம் கூறுவது என்ன?


"மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே,  ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக வேண்டி  அவர்களைப் புணருகிறார்கள்"  (மனு அத்தியாயம்- 9 - சுலோகம் - 14)


"மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையா மநமும், நண்பின்மையும் இயற்கையாக உடையவ ராதலால் கணவனால் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கிறார்கள்."  (மனு அத்தியாயம் - 9 - சுலோகம் - 15)


"படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்." (மனு அத்தியாயம் - 9 - சுலோகம் -17)


இப்போதைக்கு இவை போதும் என்று கருதுகிறோம்.  மனித உரிமை, பெண்ணுரிமை, சமத்துவ உரிமை விரும்பும் ஒரு நாகரிக சமுதாயத்தில் மனுதர்ம சாஸ்திரம் என்ற நூல் அனுமதிக்கப் படலாமா?


கழகத் தோழர்களே, பங்கேற்பீர்!


இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள்  மனுதர்மத்தைத் தடை செய்யக் கோரி நாளை நடத்த இருக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் வரவேற்கிறது. கழகத் தோழர்களும், குறிப்பாகப் பெண்களும்  (கரோனா - பாதுகாப்பு வழி முறைகளுடன்) இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.


 


 


 


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


23.10.2020


No comments:

Post a Comment