இரண்டு தகவல்களும் - பின்னணிகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

இரண்டு தகவல்களும் - பின்னணிகளும்

'நீட்' தேர்வு முடிவுகள் மிகப் பெரிய அளவிலான குளறுபடி களுக்கிடையே வெளி வந்தன. 'சிஸ்டம்' சரியில்லை என்று சொல்லும் கிளப்பிள்ளைகள் இதுபற்றி எல்லாம் மூச்சுவிடக் காணோம். வெளியிடப் பட்டுள்ள 'நீட்' தேர்வின் முடிவுகளை முன்னிறுத்தி உயர்ஜாதி பார்ப்பன ஏடுகள் ஒரு செய்தியைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றன.


ஒரு தகவல், தேனி மாவட்டத்தில் ஆடு வளர்க்கும் தொழிலைச் செய்ப வரின் மகனும் - அரசுப் பள்ளியில் படித்தவருமான ஜீவித் குமார் பற்றியது.


இந்த மாணவனின் ஏழ்மைக் குடி - பிற்படுத்தப்பட்ட சமூகம் - அரசுப் பள்ளி - இவற்றை முன்னிறுத்தி - 'பார்த்தீர்களா, பார்த்தீர்களா?' 'நீட்' தேர்வில் யார் யார் எல்லாம் வெற்றி பெற்றுள்ளார்கள்! ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள், அரசு பள்ளியில் படித்தோர் - ஒடுக்கப்பட்ட மக்கள் 'நீட்'டால் பாதிக்கப்படுவர் என்று பிரச்சாரம் செய்வது எல்லாம் பொய் - இது அரசியல்வாதிகளால் கிளப்பி விடப்படும் ‘புரளி' என்ற ஒரு தகவலைப் பரப்பும் நோக்கம்தான் இதன் பின்னணியில் உள்ளது.


ஜீவித்குமார் 'நீட்டில்' அதிக மதிப்பெண் பெற்றது எப்படி என்பதை - இந்த மாணவனின் வெற்றிக்குப் பின்னணியில் உள்ள முக்கிய தகவலை இன்றைய ‘இந்து' ஏடு (தமிழ்) விரிவாக வெளியிட்டுள்ளது.


"அவரது வெற்றிக்குப் பின்னால் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பின்,தனது அரசு பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து மாணவர் நலனில் வாழ்வை அர்ப்பணித்துள்ள சபரிமாலாவின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்தான், ஜீவித் குமாருக்கு கடந்த ஓராண் டாக தகுந்த வழிகாட்டுதல் வழங்கி நீட் தேர்வுக்கு தயார் செய்துள்ளார்.


இதுகுறித்து சபரிமாலா கூறியதாவது: அனிதாவின் மரணத்துக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 7 லட்சம் மாணவர்களைச் சந்தித்தேன். அப்போது தான் தேனி மாவட்டம் சில்வார்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் அருள்முருகன் என்பவர், ஜீவித்குமாரை பற்றி என்னிடம் தெரிவித்தார்.


படிப்பில் சிறந்த மாணவரான ஜீவித்குமார் 2019-இல் நடந்த நீட் தேர்வில் உரிய பயிற்சியும், வழிகாட்டுதலும் இல்லாமல் தோல்வி யடைந் திருந்தார். அவருக்கு ஊக்கமளித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள நீட் பயிற்சி மய்யத்தில் சேர்த்தேன். அவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் காட்வின் என்பவர் நிதி உதவி அளித்தார்.


நீட் தேர்வை நான் எதிர்க்கிறேன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரம், நீட் தேர்வு நடைமுறையில் இருக்கும்போது, அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை ஜீவித்குமார் வெற்றி மூலம் உணர்த்தியுள்ளோம். தமிழகம் முழுவதும் தகுதியான அரசு பள்ளி மாணவர்களை நீட் தேர்வில் வெற்றிபெற வைக்க சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்."


கிராமப்புற ஏழை எளிய மாணவன் 'நீட்டில்' வெற்றி பெற இவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டுள்ளன. இந்த மாணவன் வெற்றிக்குக் காரண மான ஆசிரியைச் சொன்ன கருத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.


"நான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பாளர்தான்" என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருப்பதைக் கவனிக்கத் தவறலாமா?


அதேபோல தெலங்கானா மாநிலத்தில் பட்டியலின மக்கள் 190 பேர் நீட்டில் வெற்றி பெற்றுள்ளனர் (இந்த 'நீட்'டில் தகுதி மதிப்பெண் பெற்றுவிட்டதாலேயே இவர்களுக்கு எல்லாம் மருத்துவக் கல்லூரியில் இடம் உறுதி என்று யாரும் மனப்பால் குடிக்கக் கூடாது. மதிப்பெண் வாரியாகப் பட்டியலிடும் போது - இவர்கள் அகில இந்திய அளவில் தகுதி (Rank) மதிப்பெண் பெற்று இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இடம் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்).


தெலங்கானாவில் பட்டியல் இன மாணவர்கள் 190 பேர் 'நீட்' தேர்வில் தகுதி மதிப்பெண் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்? அவரின் செயல்பாடு யாது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.


தெலங்கானா சமூக மற்றும் பழங்குடி நலன் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலாளராக டாக்டர் ஆர்.எஸ். பிரவீன்குமார் பொறுப்பேற்றது முதல் இந்தத் துறையில் உள்ள 268 சமூக நலப் பள்ளிகளில் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.


குறிப்பாக 2014ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.பிரவீன்குமாரின் வழிகாட்டுத லில் தெலங்கானா பழங்குடியின சிறுமி மாலவத் பூர்ணா, தாழ்த்தப்பட்ட மாணவர் ஆனந்தகுமார் ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்தனர். இதுதவிர கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘சாமுராய் முகாம்’களை கோடை விடுமுறையில் பட்டியலின மாணவர் களுக்கு பிரத்யேகமாக பிரவீன்குமார் நடத்தி வருகிறார். இம் முகாமில் பல்வேறு தனித்துவமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.


டாக்டர் பிரவீன்குமாரின் பெற்றோர் ஆசிரியர்களாக பணியாற்றியவர் கள். இருப்பினும், ஜாதி காரணமாக அவர்கள் ஒடுக்கப்பட்ட சம்பவங்களை பிரவீன்குமார் நினைவுகூர்ந்தார்.


தன்னுடைய கல்லூரி நாட்களில்கூட ‘இடஒதுக்கீட்டு நபர்கள்’ என்று அச்சிட்ட காகிதம் ஒட்டப்பட்ட குளியலறைகளை பயன் படுத்த, தான் நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறுகிறார். இந்நிலையில் கல்வி மட்டுமே விடுதலைக்கான வழி என்று உறுதிபூண்டார். தான் அய்பிஎஸ் அதிகாரியாக முன்னேறியதோடு நில்லாமல் ஒடுக் கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளின் வளர்ச்சிக்காக துடிப்புடன் செயலாற்றி வருகிறார்.


தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கும் தெலங்கானா பட்டியலின மாணவர்கள் குறித்து அவர் கூறியதாவது:


நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கும் தெலங்கானா பட்டியலின மாணவர்களின் பெற்றோர் பீடி தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு விவசாயிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டு வேலைசெய்யும் பணிப்பெண்கள், காவலாளிகள், கடைநிலை ஊழியர்கள் போன்றோர்களே.


இப்படியான பின்தங்கிய சமூகப் பின்னணியில் இருந்து வந்து, நீட் தேர்வில் வெற்றி அடைவது என்பதுமிகப் பெரிய சாதனை. ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்விஅளித்து அவர்களை சாதனையாளராக உயர்த்த கடின உழைப்பை செலுத்தியவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களே. கே.ஜி.-பி.ஜி. திட்டம் என்பதன் வழியாக தெலங்கானா மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய பழங்குடி கிராம மற்றும் நகர குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.


இதன் மூலம் அவர்கள் நாட்டின்தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் நிலைக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறார்கள். தெலங்கானாவின் சமூக பொருளாதார வளர்ச்சியை இது காட்டுகிறது.


காலம் காலமாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒருவர் மேலே உயர்வதற்கு - எவ்வளவுத் தடைக் கற்களைத் தாண்டி வர வேண்டியுள்ளது என்பதற்கு பிரவீன்குமார் ஓர் எடுத்துக்காட்டே! இவ்வளவுக்கும் இவரின் பெற்றோர்கள், ஆசிரியர்களது துணை இருந்தாலும் அவர் உயர்ந்து நிற்பதற்குப் பல்வேறு தடைகள்.


தான் பட்ட தடைகளை, இடையூறுகளைக் கணக்கில் கொண்டு தான் - தான் பொறுப்பேற்றுள்ள துறையின்கீழ் மாணவர்கள் 'நீட்'டில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறுவதற்குக் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.


இந்த இரு எடுத்துக்காட்டுகளை சொல்லி ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் 'நீட்'டில் வென்று காட்டுவார்கள் என்று பூதக் கண்ணாடி காட்டி மக்களிடத்தில் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவது பச்சையான மோசடியாகும்.


இந்த இரு நிலைகளில் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், உதவியும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்குமா - கிடைக்கச் செய்வார்களா என்பது முக்கியமான கேள்வி.


இரண்டாவது முக்கியமானது -


பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் குப்பைக் கூடையில் வீசி எறிந்து விட்டு உயர்தட்டு மக்கள் படிக்கக் கூடிய கல்வித் திட்டத்தின் அடிப் படையில் 'நீட்' நடத்துவது அறிவு நாணயமா என்பது இரண்டாவது கேள்வி.


'நீட்'டே தவறான அணுகுமுறை என்று ஆகி விட்டபிறகு அதில் பெறும் மதிப்பெண்களைப்பற்றி விவாதிப்பதே அடிப்படை தவறு - தவறேயாகும்!


No comments:

Post a Comment