வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, அக். 5-1962 இலே வெளிப்படையாக தந்தை பெரியார் அவர்களுக்கு எதிரியாக வந்த நண்பர் குருசாமி - ‘விடுதலை' ஆசிரியர் அவர்கள். அவர் மூத்தவர், உயரிய எழுத்தாளர், நீண்ட காலம் தந்தை பெரியார் அவர்களுடன் இருந்தவர். அவரை நம்பி, அய்யா அவர்கள் பல காரியங் களை ஒப்படைத்தார். இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். முக்கியமானவர்களைச் சந்திப்பதற்காக அனுப்பி வைப்பார். இப்படி பல காரியங்கள் நடைபெற்ற நேரத்தில், குருசாமி அவர்கள் மாறியதுதான், துரோகத்தி லேயே உச்சக்கட்டமான துரோகமாகும். இதுதான் வருத் தப்படக் கூடிய செய்தியாகும் என்ற தகவலை எடுத்துக் காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.
கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம், இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டால் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதிகள் இருக்காது. அதன் தலைவர்களைப்பற்றி நமக்குக் கவலையில்லை. அன்றியும், அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களின் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல. ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்து வரு கிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார் கள். 'மாமிசம் சாப்பிடுவதானால் எலும்பைக் கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டுமா?' என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதுபோல் நமது சமதர்மமும், பொது வுடைமையும் போலி புலி வேஷம் போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது.
சர்க்கார் உத்தரவு மீறுவதே சமதர்மமாகி விடாது. உத்தரவு மீறினவர்களின் கதியை நாம் பார்த்துவிட்டோம். ஆரம்பத்தில் மேல் ஜாதி, கீழ் ஜாதி கூடாதென்று சுயமரி யாதை இயக்கம் ஆரம்பித்தோம். அதற்கு அனுகூலமா கவே ஏழை பணக்காரத்தன்மை கூடாதென்றோம். அதைத் தான் நாம் சமதர்மம், பொதுவுடைமை என்கி றோம். சர்க்கார் பொதுவுடைமை கூடாதென்றால் விட்டு விட்டு மேல் ஜாதி கீழ் ஜாதி கூடாதென்கின்ற வேலைச் செய்வதில் என்ன தடை இருக்கிறது.
மற்றும் மூடப்பழக்க வழக்கம் ஒழித்தல், மதத்தொல்லை ஒழித்தல் முதலிய காரியம் செய்வதற்கு மார்க்கமில்லாமல் போகவில்லை.
ஆதலால் எனது நிலை இன்னது என்பதை ஒருவாறு விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.
- திருத்துறைப்பூண்டியில் 21, 22.03.1936 நாட்களில் நடைபெற்ற தஞ்சை ஜில்லா 5 ஆவது சுயமரியாதை மகாநாட்டில் ஆற்றிய சொற்பொழிவு
‘குடிஅரசு', சொற்பொழிவு, 29.03.1936
ஒரு சோதனை ஏற்படுகின்ற நேரத்தில், இயக்கமா? கொள்கையா? ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு அதுதான். அன்னை மணியம்மையார் அவர்கள், நெருக்கடி காலத்தில் இந்த இயக்கத்தை எப்படி காப்பாற் றினார்கள். நமக்கு முன் எவ்வளவு அடக்குமுறைகள், எவ்வளவு சங்கடங்கள்? நாளைக்கும் தோழர்களே, இந்தச் சூழல் வரலாம். அப்படி வந்தாலும், அதனை எதிர்கொள் வோம் - அதிலும் வெற்றி பெறுவோம். அதற்கும், தந்தை பெரியாருடைய பாடங்கள் நமக்கு மிகத் தெளிவாக வழிகாட்டியாக இருக்கிறது. திருத்துறைப்பூண்டி மாநாட்டு உரை ஒன்றே, அதற்கு மிகத் தெளிவான ஒரு கைடுலைன்.
நம்முடைய சொந்தப் புத்தியைப் பயன்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. பெரியார் தந்த புத்தி என்பது அதுதான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனை மிகத் தெளிவாக எடுத்துப் பார்க்கவேண்டும்.
அதேபோன்று, அடுத்து தந்தை பெரியார் திருமணம் என்ற ஏற்பாடு. நல்ல வாய்ப்பாக, அண்ணா அவர்கள், பிரிந்தவர்களிலேயே மிகவும் கெட்டிக்காரத்தனமானவர் அண்ணாவைப் பொறுத்தவரையில் அய்யா அவர்கள் தான் தலைவர். அய்யாவினுடைய கொள்கைதான் அவ ருடைய கொள்கை என்று சொன்னார்கள். பிறகு அவர்கள், அரசியலுக்காகப் போனாலும்கூட, கடைசி நேரத்தில் வெற்றிபெற்று மிகத் தெளிவாக எப்படித் திரும்பி வர வேண்டுமோ அந்த இடத்திற்கு வந்தார்கள்.
அய்யா அவர்கள் பல நேரங்களில்,
ஒரு வரியிலேயே பலரைப்பற்றி சொல்கிறார்கள்
இதுவரையில், தந்தை பெரியார் அவர்களைவிட்டு வெளியே போனவர்களில், தோழர் ஜீவானந்தம் போன்ற வர்கள் நல்லுறவைத்தான் கொண்டார்கள். அதேபோன்று, அய்யா அவர்களை நிந்தித்தவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைப்பற்றி சொல்லும்பொழுது, அய்யா அவர்கள் பல நேரங்களில், ஒரு வரியிலேயே பலரைப்பற்றி சொல் கிறார்கள்.
இவ்வளவையும் தாண்டிதான், அய்யா அவர்கள் இந்தக் கட்டத்திற்கு வந்திருக்கிறார்கள், 1962 இல் வேலூரில் பேசியபோது அய்யா சொல்கிறார்:
"அடுத்து ஜஸ்டிஸ் கட்சிக்கு வந்தேன். திரு. ஜே.எஸ். கண்ணப்பர் என்னுடன் நெருக்கமாக இருந்தார். அன்று நமக்கு அரசாங்கத்தில் செல்வாக்கு இருந்தது. முக்கியமான காரியங்களுக்கு மந்திரியிடம் இவரைத்தான் நான் அனுப்புவேன். அதன் காரணமாகவே செல்வாக்குப் பெற்று நமக்கு கடைசியில் எதிரியானார். வேறு பத்திரிகை ஆரம்பித்து நம்மையே அதில் குறை கூறினார், திட்டினார்.
அடுத்து திரு. எஸ்.ராமநாதன் அவரும் எனது நம்பிக் கைக்குப் பாத்திரமானவர். இருவர் கருத்தும் ஒரே மாதிரி யாகவே இருக்கும். அவர் வெகுநாள் எங்கள் வீட்டிலேயே இருந்து இயக்க காரியங்களைக் கவனித்தார். கடைசியில் அவரும் எதிரியானார், குறை கூறினார்.
அடுத்து திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் நம்முடன் மிக்க அன்பு பூண்டவராகத்தான் இருந்தார். அவரும் எதிராக கருத்து வேற்றுமை கொண்டு நண்பர் சவுந்தரபாண்டியன் போன்றோருடன் சேர்ந்து எதிர்த்தார்.
திரு. சவுந்தரபாண்டியன் முதலானவர்கள் சுயமரி யாதை சங்கம் தங்களுக்குத்தான் உரியது என்று எனக்குத் தெரியாமலே வேலை செய்து சில ஆட்களைச் சேர்த்துக் கொண்டு சங்கத்தை ரிஜிஸ்டரே செய்து கொண்டு விட்டார். இதற்கு சவுந்தரபாண்டியன் தலைவர்; பொன்னம்பலனார் செகரட்டரி.
அடுத்து பொன்னம்பலனார் 10 வருஷத்துக்கு மேலாகவே நமது வீட்டிலேயே இருந்தார். பணம் காசு புழங்கும் அளவுக்கு பவர் பட்டம் கொடுக்கும் அளவுக்கு நம்பி இருந்தேன். பிறகு அச்சாஃபீசே தன்னுடையதென்று பூட்ட அல்லவோ ஆரம்பித்தார்! அவரும் எதிரியானார்.
அடுத்து பி. பாலசுப்பிரமணியம். இவர் நான்தான் பெரியார் அவர்களின் தத்துப்பிள்ளை என்று மேடையி லேயே கூறிக் கொள்ளுவார். அவரையும் ரொம்ப நம்பினேன். அந்தக் காலம் அட்வைசர் ஆட்சி நடைபெற்ற காலம். இரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள் சாப்பிடும் இடம், சூத்திரர் சாப்பிடும் இடம் என்று போடப்பட்டு இருந்ததை நீக்கும்படி அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்து, அப்படி நீக்கவில்லையானால் முக்கியமானவர்களே முன்னின்று தார்கொண்டு அழிக்க நேரிடும் என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து இருந்தோம்.
உடனே கவர்னர் திரு.ஹோப், சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார், ராஜா சர். முத்தையா செட்டியார் ஆகியவர் களை விட்டு பத்து நாள் பொறுத்து இருக்கச் சொல்லுங்கள். நான் மேலே எழுதி இருக்கின்றேன் என்று சொல்லி அனுப்பியதோடு கடைசியாக பி.பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சொல்லி அனுப்பினார். மற்ற இருவர் சொன்னதற்காக நான் பிராமணாள் அழிப்பை நிறுத்திக் கொள்ளவில்லை. பாலசுப்பிரமணியம் சொல்லுகின்றாரே என்பதற்காக நிறுத்திக் கொண்டேன் என்றால், அவர் எவ்வளவு நெருக்கமாக இருந்து இருப்பார் என்பதை யோசித்துப் பாருங்கள்.
பிறகு கொஞ்ச நாளில் ஒரு மணி நேரத்தில் தந்தி மூலம் எல்லா ரயில்வே உணவு விடுதியிலும், பிராமணாள், சூத்திரர், பெயர்ப் பலகைகள் எடுத்து விடப்பட்டன.
அட்வைசர் ஆட்சியில் நமது ஆலோசனைப்படி தான் ஆளப்பட்டதாகையால் கவர்னர் எனக்கு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டுமானாலும் பாலசுப்பிரமண்யம் மூலம் தான் சொல்லி என்னிடம் அனுப்புவார். நானும் பாலசுப் பிரமண்யம் மூலம் பதிலோ வேறு தகவலோ கவர்னருக்கு அனுப்புவேன். அப்படி எல்லாம் இருந்தவர்தான் எனக்கு எதிரியானார். நான் ஜஸ்டிஸ் கட்சியையே கெடுத்து விட்டேன் என்று கூறி, தனிப் பத்திரிகை, தனிக் கட்சி ஆரம்பித்து திட்டிப் பார்த்தார். அவரும் வெற்றி பெறவே இல்லை. இப்படி நான் மேலே கூறியவர்களின் எதிர்ப்பிரச் சாரத்தினால் நானோ, எனது பிரச்சாரமோ, எனது கழகமோ பாதிக்கப்படவே இல்லையே.
அடுத்தபடியாக அண்ணா அவர்கள் இயக்கத்திலி ருந்து பிரிந்தாலும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்லி, அதற்குப் பிறகு வெற்றி பெற்றவுடன், அய்யா விடம் சென்றார். இடையில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமேயில்லை.
கொள்கை ரீதியானவைகளே தவிர,
வேறொன்றும் இல்லை!
தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டிருக்கி றோம் என்று அண்ணா அவர்கள் சொல்லி, கடைசிவரை அந்த உணர்வோடு இருந்துகொண்டு, மிகப்பெரிய அள விற்கு அவர்கள் மாறுபட்டு இருந்த காலகட்டத்தில்கூட, இடையில் சில உரசல்கள் தாக்குதல்கள் வந்தாலும்கூட - அவைகள் எல்லாம் கொள்கை ரீதியானவைகளே தவிர, வேறொன்றும் இல்லை.
தேர்தலுக்கு முன்பு அவ்வளவு வேகமாக எதிர்த்தார் - அண்ணா அவர்கள் தந்திரமாக, சாமர்த்தியமாகச் சொன்னார் - தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னால் கூட, தாங்கள் பதவிக்கு வந்தால், இராஜாஜி சொல்படி ஆளுவோம் என்றார். இராஜாஜி சொல்படி ஆண்டால், குலக்கல்வித் திட்டத்தைத்தானே கொண்டு வருவார் என்றெல்லாம் கேள்வி கேட்டார் தந்தை பெரியார்.
ஆனால், தேர்தல் முடிந்தவுடன் என்ன நடந்தது என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
ஆகவேதான், அந்தப் படலம் வேறு விதமாக உருவ மெடுத்துவிட்டது.
அரசியல் கட்சி, ஒரு சமூக இயக்கம், ஒரு தாய்க் கழகம் என்ற அளவில், அதற்கு வேறு உருவம் உருவாகிவிட்டது.
அதற்குப் பிறகு பெரியாருடைய சிந்தனைகளும் பெரியார் அவர்களுமே வழிநடத்தக் கூடிய அளவிற்கு வந்து, அய்யாவும், அந்த இடத்தில் பல நேரங்களில் நீக்குப் போக்கோடு நடந்துகொள்ளக் கூடிய கட்டம். ஆகவேதான், அதை ஒரு பெரிய நிலையாக நாம் கருதவேண்டிய அவசியமில்லை.
துரோகத்திலேயே உச்சக்கட்டமான துரோகமாகும்
1962இலே வெளிப்படையாக தந்தை பெரியார் அவர்களுக்கு எதிரியாக வந்தவர் 'குத்தூசி' குருசாமி - ‘விடுதலை' நிர்வாக ஆசிரியர் அவர்கள்.
அவர் மூத்தவர், உயரிய எழுத்தாளர், நீண்ட காலம் தந்தை பெரியார் அவர்களுடன் இருந்தவர். அவரை நம்பி, அய்யா அவர்கள் பல காரியங்களை ஒப்படைத்தார். இயக்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். எப்படி பி.பாலசுப்பிரமணியத்தைப்பற்றி சொன்னார்களே, அது போலவே, குருசாமி அவர்களை, முக்கியமானவர் களைச் சந்திப்பதற்காக அனுப்பி வைப்பார். இப்படி பல காரியங்கள் நடைபெற்ற நேரத்தில், குருசாமி அவர்கள் மாறியதுதான், துரோகத்திலேயே உச்சக்கட்டமான துரோகமாகும். இது தான் வருத்தப்படக் கூடிய செய்தியாகும்.
அண்ணா அவர்கள் பிரிந்து சென்றபொழுது, சம்பத் உயிர் கொடுத்தார். திரு.எஸ்.குருசாமி தைரியம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். குருசாமிதான், இந்த இயக்கத்தை நடத்தவேண்டும் என்று அண்ணாவிடத்தில் பக்கத்தில் நின்று செய்தவர். பிறகு அவர் பின்வாங்கிக் கொண்டார். அண்ணாவை மிகக் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாளும், ‘கண்ணீர்த் துளிகள்' என்ற தலைப்பில், தந்தை பெரியாரைவிட கடுமையாக தான் எழுதும் தலையங்கத்தில் எதிர்த்து எழுதுவார் குருசாமி அவர்கள்.
அண்ணாவின் பதில்!
ஒரு காலகட்டத்தில் நண்பர்களே, ‘திராவிட நாடு' பத்திரிகையில் அண்ணா அவர்கள் ஒரு செய்தியை சொன்னார்.
தம்பிக்கு மடல் எழுதும்பொழுது, "இன்றைக்குக் கடுமையாகத் தாக்குகிற நண்பர் குருசாமி அவர்கள், என்னிடத்தில் என்ன சொன்னார் தெரியுமா?" என்று சொல்லி, அந்தக் கடிதத்தில் எழுதுகிறார்.
‘‘ஏன் யோசிக்கிறீர்கள் அண்ணா? யார் இருப்பார்கள் இனிமேல் பெரியாருக்குப் பின்னால்? மணியம்மையும், சீட்டா நாயும் தவிர வேறு யார் இருப்பார்கள்? ஏன் தயங்குகிறீர்கள்?'' என்று வேகமாகப் பேசினார்.
அதற்கு நான் பதில் சொன்னேன் என்று அண்ணா அவர்கள் பத்திரிகையில் எழுதியிருக்கிறார், ‘‘இருப்பார்கள் குருசாமி; இருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக இருப்பார் கள், பெரியாரை இன்னமும் நேசிக்கக் கூடியவர்கள். நீங்கள் தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள்'' என்று நான் பதில் சொன்னேன்.
ஒரு தலைவர்மீது கருத்து மாறுபாடுகள் ஏற்படுவது என்பது தவறல்ல; அது இயல்புதான். ஆனால், அந்தத் தலைவரைவிட்டு விலகிய நேரத்தில், மறுபடியும் சேரக்கூடிய அளவிற்காவது அந்த வாய்ப்புகளோ அல்லது திருத்தக் கூடிய வாய்ப்போ இருக்கவேண்டும். அல்லது அந்தத் தலைவருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங் களை நாம் ஒதுக்கிவிட்டு, வேகமாகச் செல்ல வேண்டும்.
தந்தை பெரியார் அவர்களைப் பொருத்தவரையில், ஒதுங்கியவர்களைப்பற்றி அந்த நேரத்தில் ஏதாவது சொல்லியிருப்பாரே தவிர, அடுத்து தன்னுடைய செயல் என்ன? தன்னுடைய இயக்கத்தின் பணி என்ன? என்று வேகமாக செல்லக்கூடிய அளவிற்கு இருந்தவர்.
அப்படி செல்லக்கூடிய அந்தச் சூழ்நிலையில், ஆரம்பத்தில் இருந்து இதில் மிகப்பெரிய சங்கடமான கட்டம் என்னவென்று சொன்னால், அன்னை மணியம் மையார் அவர்களை, இந்த திருமணம் என்ற ஏற்பாட்டை மனதார குருசாமி அவர்கள் துவக்கத்திலிருந்தே ஏற்றுக் கொள்ளவேயில்லை. அதற்கு எதிர்ப்பாகவே இருந்தார்கள்.
பெரியாருடைய திருமண ஏற்பாடு என்பது நியாயம்தான் என்பதை, இரண்டாவது இடத்தில் இருந்த குருசாமி அவர்கள், ஏற்றுக்கொண்டு செய்யாத நிலைதான், இறுதிவரையில் இருந்தது. இதுதான் இந்தக் கருத்து வேறுபாட்டுக்கே அடிப்படையானது, மூலகாரணமாகும்.
இதை ஒரு மிகப்பெரிய அளவிற்குக் கொண்டு போன வர்கள், குருசாமி அவர்களும், முதுபெரும் இயக்கத்தவர் என்று மதிக்கப்பட்ட திருச்சி வக்கீல் அய்யா திரு.தி.பொ. வேதாச்சலம் அவர்களும் ஆவார்கள்.
குருவிக்கரம்பை வேலுவின்
‘‘எல்லாம் குருசாமிதான்''
இவர்கள் கடைசியில் எந்த அளவிற்குப் போனார்கள் என்றால், ‘‘எல்லாம் குருசாமிதான்'' என்ற தலைப்பில் அவரது வரலாற்றை குருவிக்கரம்பை வேலு அவர்கள் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
அதில், பெரியாருடைய தனிக் கருத்துகள் எதுவும் கிடையாது, எல்லா குருசாமியினுடையதுதான். பெரியார், ஒரு பெயருக்குத்தான் இருந்தார்; குருசாமிதான் மூளையாக செயல்பட்டவர். பெரியார் திடலை வாங்குவதற்குக்கூட காரணம் குருசாமிதான் என்றெல்லாம் அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்!
எல்லாவற்றையும்கூட பெரியார் அவர்கள் மறந்து விடலாம்; பெரியாரைவிட்டுப் பிரிந்தவர்கள், மறுபடியும் சந்திக்கும் பொழுது, கே.ஏ.பி.விசுவநாதனாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும், ஆகாசவானி போராட்டத் தைத் தொடங்கி வைக்குமாறு சொன்னார்; அதுதான் அய்யா விற்கு இருந்த பெருமையாகும்.
அதேபோன்று, அண்ணா அவர்கள் பிரிந்து, 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தபொழுது என்ன நடந்தது என்றெல்லாம் உங்களுக்குத் தெரியும். பிறகு வழிகாட்டியாக பெரியார் அவர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் உங்க ளுக்கும் தெரியும்.
ஆனால், அந்த சூழ்நிலையைப் புரிந்து குருசாமி அவர்கள் ஏன் பயன்படுத்தவில்லை? இந்தக் கட்டம்தான் மிக முக்கியம் நண்பர்களே! இதில் எளிதில் செரிமானம் ஆக முடியாத ஒன்றாகும்.
அது என்னவென்றால், இதுவரை பெரியாரை விட்டு வெளியே போனவர்கள், தனியே ஓர் அமைப்பை உருவாக்கினார்கள்; அந்த நேரத்தில் பெரியாரை கடுமை யாக விமர்சித்திருப்பார்கள். இது எல்லா இயக்கங்களிலும் இருக்கக்கூடிய ஒரு சூழல்தான். அதைப்பற்றி பொருட் படுத்தாமல், பெரியார் அவர்கள் தன் பணிகளைச் செய்து கொண்டே தொடர்ந்தார்.
ஆனால், நண்பர்களே! வருமான வரித் துறைக்கு இருவரும் (குருசாமியும், தி.பொ.வேதாசலமும்) சேர்ந்து கையெழுத்துப் போட்டு கடிதம் எழுதி அனுப்பினார்கள்.
- (தொடரும்)
No comments:
Post a Comment