‘‘இந்து மதத்திலிருந்து அனுபவித்த கொடுமை போதும்'' பவுத்தத்தை தழுவிய ‘வால்மீகி’ பிரிவு தாழ்த்தப்பட்டோர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

‘‘இந்து மதத்திலிருந்து அனுபவித்த கொடுமை போதும்'' பவுத்தத்தை தழுவிய ‘வால்மீகி’ பிரிவு தாழ்த்தப்பட்டோர்

லக்னோ, அக்.21 உத்தரப்பிரதேச மாநிலத்தில், வால்மீகி பிரிவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் 236 பேர் இந்து மதத்திலிருந்து வெளியேறி, பவுத்த சமயத்தைத் தழுவியுள்ளனர்.


தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொலை சம்பவமும், அதனை மாநில அரசு கையாண்ட விதமும் தங்களை இந்த முடிவுக்கு மாற்றியதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


உயர்ஜாதி இந்துக்கள் தங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; மாநிலத்தை ஆளும் சாமியார் யோகிஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை போய் விட்டது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். காசியாபாத்தில் உள்ள கரேரா கிராமத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த அக்டோபர் 14 அன்று பவுத்தம் தழுவியுள்ளனர். இந்த நாள் குறியீட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் 64 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான், டாக்டர் அம்பேத்கர் 3 லட்சத்து 65 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் பவுத்த மதத்தைத் தழுவினார்.


இந்து மதத்திலிருந்து வெளியேறும்வரை, ஜாதிய ஒடுக்குமுறை யிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுதான் அன்றைய தினம் அம்பேத்கரின் பவுத்தம் தழுவுதலுக்குக் காரணம். இன்றும் அதே காரணத்திற்காகவே கரேரா கிராமத்தைச் சேர்ந்த தாங்கள் 236 பேரும் பவுத்தத்தைத் தழுவியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.


தங்களின் கரேரா கிராமத்தில் உயர்ஜாதி இந்துக்களான சவுகான்கள் 5 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் வசிப்பதாக வும், தாங்கள் 2 ஆயிரம் பேர் இருப்பதாகவும் கூறும் அவர்கள், தங்களின் கிராமத்தில் கடுமையான ஜாதிய ஒடுக்குமுறை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகல்


சண்டிகர், அக்.21 நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நான்கு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப் பா.ஜ.க. பொதுச்செயலாளர் மால்விந்தர்சிங் பதவியிலிருந்து விலகினார்.


மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தற்போது வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், இடதுசாரிகள் மட்டுமன்றி பாஜக கூட்டணி கட்சிகளும்கூட வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானவை என்று கூறி, அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. சிரோமணி அகாலிதளம் கட்சி மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியதுடன், பாஜக கூட்டணியிலிருந்தும் அண்மையில் வெளியேறியது.


பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாஜக தலைவர்கள் பலரும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களில் சிலர் பதவி விலகலும் செய்தனர். அந்த வரிசையில், பஞ்சாப் மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்து வந்த மால்விந்தர்சிங் என்பவரும், மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது கட்சிப் பதவியிலிருந்து விலகியுள்ளார்.


இதுதொடர்பாக, மால்விந் தர் சிங், கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


“விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் குறித்து பலமுறை எனது எதிர்ப்பையும், எச்சரிக்கை யையும் விடுத்து விட்டேன். ஆனால், அதற்கு உரிய மதிப்பும், பதில்களும் கிடைக்காத நிலையில், விவசாயிகளுக்காக, நான் வகித்து வந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகு கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment