உ.பி. கொடூரம் : நீதிமன்றக் கண்காணிப்பில்தான் விசாரணை நடைபெற வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

உ.பி. கொடூரம் : நீதிமன்றக் கண்காணிப்பில்தான் விசாரணை நடைபெற வேண்டும்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



சென்னை,அக்.6, உத்தரப் பிர தேசத்தில் நடந்த இளம்பெண் பாலியல் வன்முறையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி மெழுகு வத்தி ஏந்தி பேரணி நேற்று (5.10.2020) மாலை நடைபெற்றது.


பேரணியை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-


உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண்ணை, அங்குள்ள நான்கு கயவர்கள் பல் வேறு கொடுமைகளைச் செய்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கும் அக்கிரமத்தைக் கண்டிக்கும் வகை யில், நியாயம் கேட்க - நீதி கேட்க இதுபோன்ற கொடுமைகள் உடனடி யாக தடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகையை நோக்கி மகளிரணியினரின் பேரணியை - அணிவகுப்பைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.


 தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவிப் பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தோடு மட்டுமல்லாமல்; தங்கை கனிமொழி அவர்கள் சொன்னது போல், அது (பெண்களின், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு) மறுக்கப் பட்டிருக்கிறது. மறுக்கப்பட்டது மட்டுமல்ல; அந்தப் பெண்ணினுடைய உடலை, அவருடைய பெற்றோர் களுக்குக்கூடக் காட்டாமல், அவசர அவசரமாக அவர்களே எரித்து, அடக்கம் செய்திருக்கிறார்கள். அவ ருடைய தந்தையைக் கடத்திக் கொண்டுபோய் வைத்துவிட்டு, இந்தக் கொடுமையைச் செய்திருக் கிறார்கள்.


அதைத் தட்டி கேட்க - இது நியாயமா என்று எடுத்துச் சொல்ல -அந்தப் பெண்ணை பறிகொடுத்திருக் கும் அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக,  ராகுல் காந்தி அவர்களும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி அவர்களும் நேரடியாகச் சென்றிருக்கிறார்கள். அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். தடுத்தது மட்டுமல்ல; அவர்களைப் பலவந்தமாகத் தாக்கியிருக்கிறார்கள் - கீழே தள்ளியிருக்கிறார்கள். ராகுல் காந்தியைக் கீழே தள்ளியிருக் கிறார்கள் என்று மட்டும் நீங்கள் கருதிடக் கூடாது; ஜனநாயகத்தையே கீழே தள்ளியிருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!


இன்றைக்கு நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோம்; உத்தரப்பிரதேச மாநிலத்தில் இது நிகழ்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்களையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, பெண்கள் அதிகம் சித்ரவதைக்கு - பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படக் கூடியதைக் கணக் கெடுத்துப் பார்த்தால், அதில் முத லிடம் உத்தரப் பிரதேசம்; அதற்கடுத்த இடம் நம்முடைய தமிழ்நாடு. இந்தக் கோலத்தில் தான் நாம் இன்றைக்குச் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறோம்.


இதே தமிழகத்தில் - இப்போது நடந்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் பலாத்கா ரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்; பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதை வீடியோ காட்சிகளாகப் பதிவு செய்து - அதை செல்போனில், இண்டெர்நெட் போன்றவற்றில் போட்டு அசிங்கப் படுத்தி - கேவலப்படுத்தி - கொச்சைப் படுத்தி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கும் கொடுமைகளை யெல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் - பொள்ளாச்சிப் பகுதியில் நடந்ததை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.


இதுவரையில் இதற்கு நீதி கிடைத் திருக்கிறதா - நியாயம் கிடைத்திருக் கிறதா? இல்லை!


காரணம்; அதில் சம்பந்தப்பட்ட வர்கள் ஆளும்கட்சிக்கு உட்பட்டவர் களாக - ஆளும்கட்சியில் முக்கிய இடத்தில் இருக்கின்ற காரணத்தால், இதுவரையில் அதற்கு, நீதி - நியாயம் வழங்கப்படவில்லை!


உத்தரப்பிரதேசம் இன்றைக்கு இரத்தப் பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்தாக வேண்டும் என்பதற்காகத்தான் நாடு முழுவதும் இதுபோன்ற போராட் டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  ஆகவே, நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும் புகிறேன், நியாயம் கிடைக்க வேண்டு மென்றால்; ஏதேதோ விசாரணை என்றெல்லாம் சொல்கிறார்கள். சி.பி.அய். விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் நியாயமாக நடக்குமா?  அதுதான் கேள்விக்குறியாக இருக் கிறது. அதனால், நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, எந்த விசாரணையாக இருந்தாலும் நீதி மன்றத்தின் கண்காணிப்பில்தான் நடைபெற வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்பதை நான் இங்கும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்.


அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரைவில் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். எதிர்நோக்கிக் காத்திருக்கும் தேர் தலில் நாம்தான் - திராவிட முன்னேற் றக் கழகம் தான் ஆட்சிக்கு வரப் போகிறது. அப்படி வரும் நேரத்தில் உடனடியாக, தமிழ்நாட்டில் பெண் களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்க மாவட்டந்தோறும் சிறப்புத் தனி நீதி மன்றங்கள் அமைக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரி விக்கிறேன்.


இந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டும் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி; ‘புறப் படுங்கள் போருக்கு’ என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி!


இவ்வாறு அவர் பேசினார்.


 


கனிமொழி எம்.பி., உட்பட தி.மு.க.வினர் கைதாகி விடுதலை


உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். காவல்துறையினரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.


இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக கனிமொழி எம்.பி. “பெண்களின் பாதுகாப்புக்கான சூழலை நிச்சயம் திமுக உருவாக்கித் தரும். ஹத்ராஸ் சம்பவம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆளுநரிடம் மனு அளிக்க செல்வதைக் கூட தடுக்கும் ஆட்சிதான் தமிழகத்தில் உள்ளது. ஆளுநரை சந்திக்க சென்றதை ஏன் தடுத்து நிறுத்தினார்கள் என்று தெரிய வில்லை” என்று அவர் தெரிவித்தார்.


கைதுக்கு கண்டனம்


பேரணியில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ததை கண்டித்து தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஹாத்ரஸ் அராஜகத்தைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உத்தரப்பிரதேச கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறதா?  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment