சதிகாரர்கள் என்று தெரிந்தும், சதிக்காகவே கூட இருந்து கொண்டு நடிக்கிறார்கள் என்று தெரிந்தும், சதிக்கூட்டத்தில்
கலந்தவர்கள் என்று தெரிந்தும், அவர்களுடன் சாதாரணமாகவே, நட்புரிமையாகவே, நம்பிக்கை காட்டி வந்திருக்கிறேன்!
தந்தை பெரியாரின் கடிதத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் விளக்கவுரை
சென்னை, அக். 2- மனதார சதிகாரர்கள் என்று தெரிந்தும், சதிக்காகவே கூட இருந்து கொண்டு நடிக்கிறார்கள் என்று தெரிந்தும், சதிக்கூட்டத்தில் கலந்தவர்கள் என்று தெரிந் தும், ஒன்று, இரண்டு தடவை மோசடியாய் - நாணயக் குறைவாய் - நடந்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களு டன் சாதாரணமாகவே, நட்புரிமையாகவே, நம்பிக்கை காட்டி வந்திருக்கிறேன். இதற்குக் காரணம் ‘‘சராசரி மக் கள் இப்படித்தானே இருக்கிறார்கள்”, “பொதுக் காரியத்துக் குத்தானே இவர்களுடன் நேசமாக இருக்கிறோம்'', “நம் சுயநலனுக்கு ஆக நாம் கூடாத மக்கள். நேசம் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளவில்லையே” என்பது போன்ற ஒரு மன உறுதியேயாகும் என்றார் தந்தை பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் விளக்கவுரை யாற்றினார்.
கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப்பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
எனக்கு சுயநலமில்லை என்று நீங்கள் கருதாதீர்கள். நான் மகா பேராசைக்காரன். என்னுடைய ஆசையும், சுயநலமும் எல்லையற்றது. ஆனால், எனக்கு எந்த சுயநலம்? நான் என் சொந்த சுயநலம் என்பதை திராவிட சமுதாயம் என்று எண்ணியிருக்கிறேன். அச்சமுதாயத்தில் வேண்டிய செல்வமும், பதவியும் என்பவற்றில் அளவற்ற ஆசை கொண்டிருக்கிறேன். அந்த சுயநலத்திற்கே உழைக்கிறேன். அதைத் தவிர என் சொந்தம் என்று எண்ணுவதற்கு அவசியமான சாதனம் எனக்கு ஒன்றுமேயில்லை. இருந்தாலும், இதற்குமேல் எனக்கு என்ன?
நான், என்னைப் பொறுத்தவரையில் நல்ல தொண் டனாக, தாழ்த்தப்பட்ட, கொடுமை செய்யப்பட்ட மக்க ளுக்கு விடுதலை அளிப்பவர்களாக, அவர்களை செல்வ வான்களாகவும், பதவிவான்களாகவும் ஆக்குபவனாக இருப்பதினால், திறமையில்லாமல் போகாது என்பதை வாலிபருக்கு எடுத்துக்காட்டுவதே ஆகும்.
முன் சொன்னவர்களால் ஏற்படும் நன்மைகளைவிட, பின் சொன்னவர்களால் ஏற்படும் நன்மை குறைந்து போகாது. ஆதலால், வாலிபர்களுக்கு செல்வத்திலும், பதவியிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கக் கூடாது என்றும், பொதுத் தொண்டுக்கு இறங்கி, தொண்டனாகவே ஆக ஆசைப்படவேண்டும் என்றும், நம் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற செல்வமும், பதவியும் கருதாத தொண்டர்கள் அநேகர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெளிவான ஒரு கருத்தைச் சொன்னார்.
1944 இல் பேசினாலும் இதுதான், 1973 இல் அறிக்கை போன்று கடைசியாக எழுதினாலும் இதுதான்.
ஒரு தொடர்ச்சியான சிந்தனை - ஒருமித்த சிந்தனை - தளர்வற்ற சிந்தனை- அச்சமற்ற சிந்தனை எப்படி இருந் தது என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
தந்தை பெரியாருக்கு துரோகம் ஏன் ஏற்படவேண்டும்? எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் எல்லோரும் அந்தச் சூழ் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆனால், அந்தத் துரோகத் தைத் தந்தை பெரியார் அவர்கள் எப்படி எதிர்கொண் டார்கள் என்பதற்கு ஒரு செய்தியைச் சொல்கிறேன்.
அய்யா அவர்கள், அன்னை மணியம்மையார் அவர் களை, 'ஏற்பாடு' என்ற பெயரால், சட்டப்படி திருமணம் என்ற பெயரால் ஒரு பதிவை நடத்திய அந்தக் காலகட்டத்தில், சில பேருக்கு இந்தத் தகவல் தெரியும். வயதானவர்களுக்கு, மூத்தவர்களுக்கு இயக்க வரலாறு தெரிந்தவர்களுக்கு அந்த காலத்தில் 1949 இல் நடைபெற்ற செய்தி தெரியும்.
தந்தை பெரியார் பெயரில்
‘விடுதலை'யில் ஒரு கடிதம்!
‘விடுதலை'யில் ஒரு கடிதம் அய்யா அவர்கள் பெயரில் வருகிறது.
என் பேரால் “விடுதலை”யில் 28.07.1949 ஆம் தேதி பிரசுரிக்கப்பட்டிருந்த “வருத்தமும், விஞ்ஞாபனமும்” என் னும் சேதிக்கு ஆதாரமான பொய்க்கடிதத்தை அனுப்பிக் கொடுக்கும்படி சென்னைக்கு டிரங்க் டெலிபோன் பேசி வரவழைத்துப் பார்த்தேன். அது திராவிடர் கழகத் தலைமைக் காரியாலய (லெட்டர் பேப்பர்) காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அடியில் ‘ஈ.வெ.ராமசாமி, தலைவர், திராவிடர் கழகம்’ என்று கையொப்பமிடப்பட்டிருக்கிறது.
அக்கடிதத்தின் மேல் கவரில் (போஸ்ட் கவரில்) கோய முத்தூர் ஜில்லாவில், அவிநாசிக்குப் பக்கமான கரவலூர் - என்ற ஒரு பிராஞ்சு போஸ்டாபீசில் போஸ்ட் செய்த தபால் சீல் போடப்பட்டிருக்கிறது என்று தெரிய முடிகிறது. தமிழில் கருவலூர் என்று சொல்வார்கள். அக்கடிதத்தின் மேல் கவரின் பின்புறம் அவினாசி போஸ்டாபீஸ் முத்தி ரையுள்ள சீலும் (முத்திரை இடப்பட்டு) இருக்கிறது.
கடிதத்தில் தேதி 28.07.1949 என்று போடப்பட்டிருக்கிறது. இதில் 8 மாத்திரம் சிறிது விளம்பி எழுதப்பட்டதாக இருக் கிறது. கோயமுத்தூர் சீலில் 27ஆம் தேதி முத்திரையும், அவினாசி சீலில் 27ஆம் தேதி முத்திரையும், மதராஸ் மவுண்ட்ரோட் சீலில் 28ஆம் தேதி முத்திரையும் இடப் பட்டிருக்கிறது. அதில் அடியில் போடப்பட்டிருக்கும் கையொப்ப கையெழுத்து என்னுடைய கையெழுத்துப் போலவே, அதாவது என்னுடைய கையெழுத்து என்றே சொல்லத்தக்கதாக இருக்கிறது.
விஷயம் எழுதப்பட்ட கையெழுத்தானது தனித்தனி எழுத்தாகவும், யாருடைய கையெழுத்து என்று புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கின்ற கருத்தின் மீது ஜாக்கிரதையாக எழுதப்பட்டதாகவும் காணப்படுகிறது. அந்தக் கடிதமானது எனது கையொப்பமிட்ட வெறுங் காகிதம் எப்படியோ ஒருவருக்குக் கிடைத்து, அதில் இந்த விஷயங்கள் எழுதி அனுப்பப்பட்டிருப்பதாகக் கருதும்படி காணப்படுகிறது.
இதற்குச் சரியான ஆதாரம் என்னவென்றால், கையெழுத்துக்கும் சேதிக்கும் மத்தியில் கொஞ்சம் இடம் இருந்து அதைச் சரிசெய்ய பொருத்தமில்லாத ஒருவரி பொருத்தமற்ற இடைவெளிவிட்டு எழுதப்பட்டிருக்கிறது. அன்றியும் கையொப்பம் செய்த இங்க் வேறாகவும், விஷயம் எழுதின இங்க் வேறாகவும் இருக்கிறது.
இந்தக் கையொப்பமிட்ட வெத்துக்கடிதம் பெட்ரோல் வாங்கும் விஷயமாக, அவசரம் கருதி வெறும் காகிதத்தில் கையொப்பமிட்டு கோயமுத்தூரில் ஒரு தோழருக்கும், சென்னையில் இரு தோழர்களுக்கும் அனுப்பியதாகவும், நேரில் கொடுத்ததாகவும், எனக்கு ஞாபகம் இருப்பதோடு எனது காரியதரிசியும் இதைப் பார்த்து சென்னையிலிருந்து ஞாபக மூட்டி எழுதியிருக்கிறார்.
அன்றியும் அந்தக் காரியத்துக்கும் எழுதும் கடிதத்தில் தான் கையெழுத்துக்குக் கீழாக ’தலைவர், திராவிடர் கழகம்’ என்று எழுதுவது வழக்கம். ஏனெனில் திராவிடர் கழக (பொது)க் காரியத்திற்கு ஆக என்று சப்ளிமெண்டரி எண்ணெய்க்கு அனுமதிபெற்று இருப்பதால் அது சம்பந்த மான கரஸ்பாண்டன்சுக்கு ’தலைவர், திராவிடர் கழகம்’ என்று போடுவது அவசியமாயிற்று; வழக்கமுமாயிற்று. அப்படிப்பட்ட வெறுங்காகிதம் இந்தக் காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.
இக்காகிதத்தைப் போட்டோ எடுத்து பிளாக் செய்து பத்திரிகையில் பிரசுரிக்கும்படி தெரிவித்து இருக்கிறேன். சீக்கிரத்தில் வெளிவரலாம். இதே சமயத்தில் மற்றொன்றும் தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். என் கையொப்பமிட்ட வக்காலத்து (பூர்த்தி செய்யப்படாத வெத்து)ப் பாரங்கள் வக்கீல்களுக்கு அனுப்பப்பட்டவை சில வக்கீல்களிடமும், வக்கீல் குமாஸ்தாக்களிடமும் இருக்கின்றன. அதுபோலவே அபிடெவிட்டுக்கு ஆக என்று வெத்துக் காகிதத்தில் நான் கையெழுத்துப் போட்ட காகிதங்களும் சில அவர்களிடமும் இருக்கலாம். மற்றும் உதாரணமாகவும் சில சொல்ல இருக்கிறது. அதாவது 16.07.1949ஆம் தேதி உடுமலைப்பேட்டை விசாரணையின்போது ’குடிஅரசு’ காரியாலய உதவி ஆசிரியர் புலவர் மாணிக்கம் அவர்கள் உடுமலைப்பேட்டைக்கு விசாரணை யைப் பார்க்க வரும்போது எனது ஈரோட்டு வக்கீலிடம் எனக்கு ஆக சில சிவில் கோர்ட்டு பிராதுகள் எழுதித் தயார் செய்துகொண்டு கையெழுத்து வாங்க, பிராதுகளும், வக்காலத்துப் பாரங்களும் கொண்டுவந்தார்.
அவைகளில் கையெழுத்துச் செய்து அவரிடம் அவ சரத்தில் கொடுத்தேன். அவைகளை அவர் “ரயில் நெருக் கடியில் ஏறும்போது கை நழுவ விட்டுவிட்டதாக” வருந்தி மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார். என் சொந்தக் காரியங் களில் இப்படித் தவறுகள் சில இருப்பதோடு, கழக - பொதுக் காரியங்களில் சிறிதும் கவலை இல்லாமல் அனேக சந்தர்ப்பங்களில் பல தவறுகள், அதாவது என் கையெழுத்து உள்ள வெத்துக் காகிதங்கள் பல வெளியில் இருக்கலாம். ‘விடுதலை’ ஆபீசிலும் இருந்திருக்கலாம். இன்னமும் இருக்கலாம்.
அதிலும் என் கையெழுத்து (ஆட்டோ கிராப்) வாங் குகிற ஆட்கள், பெண்கள், மாணவர்கள் முதலியவர்கள் ஏராளமான துண்டுத்தாள்களிலும் வெற்றுத் தாள்களிலும் கையொப்பம் வாங்கி இருக்கிறார்கள். அவற்றுள் பலவற் றில் நான் கையெழுத்துப் போடும்போது, "இப்படி வெத் துக்காகிதத்தில் கையெழுத்து வாங்குகிறீர்களே, இது தர்ம மாகுமா?" என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே கையொப்பமிட்டு இருக்கிறேன். அதுவும் பலரிடம் இருக்கலாம். அதிலும் என் சொந்த விஷயத்தைவிட கழக விஷயத்தில் அநேக தோழர்களை அளவுக்கு மீறி நம்பி அவர்களுடன் மிக தாராளமாய் நடந்துகொண்டு வந்து இருக்கிறேன். அவைகள் விரைவில் பின்னால் வரும். அவற்றுள் இப்படிப்பட்ட காரியங்கள் இன்னும் குறிப் பிடத்தகுந்தவை பல இருக்கலாம்.
இவைகளில் மிகுதியும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மனதார சதிகாரர்கள் என்று தெரிந்தும், சதிக்காகவே கூட இருந்து கொண்டு நடிக்கிறார்கள் என்று தெரிந்தும், சதிக்கூட்டத்தில் கலந்தவர்கள் என்று தெரிந் தும், ஒன்று, இரண்டுதடவை மோசடியாய் - நாணயக் குறைவாய் - நடந்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் சாதாரணமாகவே, நட்புரிமையாகவே, நம்பிக்கை காட்டி வந்திருக்கிறேன்.
இதற்குக் காரணம் ‘‘சராசரி மக்கள் இப்படித்தானே இருக்கிறார்கள்”, “பொதுக் காரியத்துக்குத்தானே இவர் களுடன் நேசமாக இருக்கிறோம்'', “நம் சுயநலனுக்கு ஆக நாம் கூடாத மக்கள். நேசம் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளவில்லையே” என்பது போன்ற ஒரு மன உறுதியேயாகும். ஆதலால் இப்போது, எதிரிகள் போய்க் கொண்டிருக்கும் போக்கையும், துணிவையும் பார்த்தால் இன்னமும் என்ன என்ன தொல்லைகளும், ஆபத்துகளும் நேரலாமோவென்று கருத வேண்டியவனாகிறேன்.
“இந்த நெருக்கடியான சமயத்தில் நீங்களும் ஜெயிலுக்குப் போகப்போகிறீர்களே” என்று தோழர் குருசாமி சுட்டிக் காட்டியிருப்பது போல் இன்னும் பல தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் எனக்கொரு தெளிவு உண்டு.
யாருடைய தயவால் நமக்கு ஆகவேண்டிய காரியம் என்ன இருக்கிறது? நம்மைக் கொண்டு நம் உழைப்பால், நாம் அடையும் கஷ்டநஷ்டத்தால் நாட்டுக்கோ, மக்க ளுக்கோ, தனிப்பட்ட நபர்களுக்கோ செய்யவேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், இருந்திருந்தால், இருக்கவேண் டுமானால் இருக்கலாமே ஒழிய, யாரைக்கொண்டும் நமக்கு ஆகவேண்டிய காரியம் எதுவும் இல்லை என்கிற ஒரு பத்திரமான நிலையில், தன்மையில், நான் இருப்பதாகக் கருதிக் கொண்டு இருப்பதால், எனக்கு எந்தவித கஷ் டமோ, நஷ்டமோ, ஏமாற்றமோ, சொந்த மானம், மரியா தைக் குறைவோ ஏற்படப் போவதில்லை. அதுபோலவே தான் எனது உடல், உயிர்பற்றியும் இனிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாதவனாக ஆகிவிட்டேன்.
இனிதான் ‘‘எனது குதிரைஙக கடிவாளம் இல்லாமல்” போகக் கூடிய சுதந்திரம் பெற்றுவிட்டதாகக் கருதுகிறேன். எனக்கும் என்றுமே துணைவர்கள் இருந்ததில்லை. எதிரிகள், சதிகாரர்கள் மத்தியில் இருந்து பழகிப் பழகி (Enemy- Traitorஷீ என்பது போன்ற) எதிரிகளுடையவும், துரோகிகளுடையவும் கடுஞ்செய்கைக்குப் பாதிக்கப்பட முடியாத தன்மை உடையவனாக ஆகிவிட்டேன். என் முயற்சிகள், செய்கைகள் எதற்கும் எப்போதும் என்னையே எண்ணி, என்னையே பிணையாக்கிக் கொண்டு இறங் குவது என்பதல்லாமல், வேறு யாரையும் கருதக்கூட வேண்டியதல்லாத தன்மையிலேயே வாழ்ந்து வந்திருக்கி றேன்; நடந்து வந்திருக்கிறேன். இதை இன்று மாத்திரம் சொல்ல வரவில்லை. நான் இந்த 25 வருஷ காலமாக சுமார் 100 தடவை சொல்லி இருப்பேன். மற்றும் இது என்னைத் தலைவராகக் கொண்டதாகவும், நிபந்தனை இன்றி என்னைப் பின்பற்றுவதாகவும் நடித்து, பல வழிகளில் எனது ஆதரவை, ஆசியைப் பெற்றவர்கள் சுமார் ஆயிரம் தடவை சொன்ன சொற்களும், கூவிய கூப்பாடுகளுமாகும்.
கடைசியாகச் சொல்லுகிறேன். தோழர் சண்முகவேலாயுதம் அவர்கள் எடுத்துக் காட்டியதுபோல், சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பதாகவே நான் ஒரு இளைஞர்கள் மாநாட்டில், “தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிது சுதந்திரம் வேண்டும் என்பவர்களுக்கு எனது இயக்கத்தில் இடமில்லை; நான் சொல்லுவதை ஏற்று நடப்பவர்களுக்கே இங்கு இடமுண்டு”.
ஆதலால் “உங்கள் பகுத்தறிவைக் கொண்டு இதை நன்றாய் தீர யோசித்து முடிவுசெய்து இதில் சேருங்கள். சேர்ந்த பின் சிந்தியாதீர்கள்” என்று சொல்லி இருக்கிறேன். மேற்கொண்டும் இந்த இரண்டாண்டாய்ச் சொல்லியும் வருகிறேன்.
ஆதலால், என்னிடம் எந்த உரிமையில், என்னைப் பின்பற்றுவதாய் நடித்துவந்தவர்கள் தவறு காணுவது என் பதை யோசிக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.
‘குடிஅரசு' - துணைத்தலையங்கம் - 06.08.1949
தந்தை பெரியாருடைய பெருந்தன்மை - ஒப்பற்ற தலைவர் எப்படியெல்லாம் நிலைமைகளை ஏற்றுக் கொண்டு, ஒரு குடும்பத்தை அனுசரிப்பதைப்போல, பல பேருடைய ஆசாபாசத்தையும் அவர்கள் அளவறிந்து தெரிந்துகொண்டும்கூட, எவ்வளவு எல்லையற்ற சகிப்புத் தன்மையும், பொறுமையையும் காட்டியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.
வேறு யாராலும் சுலபமாகச் செய்ய முடியாது. அதனால்தான் அய்யா அவர்கள் பெரியாரில் பெரியார். தந்தை பெரியார் பகுத்தறிவுவாதியாயிற்றே துரோகத்தை ஏன் வளரவிடவேண்டும் என்று சிலர் கேட்கலாம்.
துரோகத்தை எதிர்கொள்வதில்கூட, அவருடைய அறிவார்ந்த சிந்தனை, எவ்வளவு தனித்த சிந்தனையாக, ஒப்பற்ற தலைமையாக இருக்கிறது என்பதை, ஒவ்வொரு எழுத்தும், எழுத்திற்குப் பின்னால் இருக்கின்ற கருத்தும், கருத்தில் இருக்கின்ற ஜொலிப்பும், அந்த ஜொலிப்பில் இருக்கக்கூடிய எல்லையற்ற ஒரு பாடமும் புரிந்து கொள் ளப்படவேண்டியவையாகும்.
நீதிக்கட்சி நொடிந்த நேரத்தில்,
அய்யாவிடம் வருகிறது!
கடைசி கட்டத்தில் நீதிக்கட்சி தோல்வியடைந்ததும்; அதனைக் காப்பாற்றுவதற்கு ஆளில்லை. அய்யாவிடம் தான் நீதிக்கட்சி வந்து சேருகிறது. நோய் முற்றிப் போன பிறகு, பெரிய மருத்துவமனைக்குப் போவதுபோல, நீதிக் கட்சி நொடிந்த நேரத்தில், அய்யாவிடம் வருகிறது. அந்த நீதிக்கட்சியை நிலை நிறுத்தவேண்டும் என்று நினைக் கின்ற நேரத்தில், சிலர் வெவ்வேறு விதமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பட்டம், பதவியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அய்யா அவர்கள் கொஞ்சம் கோபமாகவே பதில் சொல்லியிருக்கிறார்.
எந்த அளவிற்கு அய்யா அவர்கள் சில சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்?
1945இல் ‘குடிஅரசு' இதழில் ஒரு தலையங்கம்,
‘‘சில பச்சகானாக்களை, பொடியர்களை எல்லாம் ஏதோ சற்றுக் கிடந்து போகட்டும் என்று நாம் கருதினால், அதை நமது பலக் குறைவு, பயங்காளித்தனம் என்று கருதிக் கொண்டு வவ்வால்கள்போல் இருந்துகொண்டு, அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றால், அது பரிதபிக்கத் தகுந்த கேவல நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்து விட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
ஜஸ்டிஸ் சுயமரியாதைக் கட்சியும், யாருடைய தயவும், எந்த ஒரு தனி சுயநல ஆசையையும் கொண்டிருக்கவில்லை என்றும், எந்த எதிரிகளையும் அவை லட்சியம் செய்யாது என்றும், ஏதோ சுயநலம், சூழ்ச்சி, பொறாமை காரணமாய் முட்டுகிறவர்கள் எப்படியாவது அதற்குண்டான பலனை அடைந்தே தீருவார்கள்..’’
அய்யா அவர்கள் மேலும் சில செய்திகளைச் சொல்கிறார். அது என்னவென்றால், எப்படிப்பட்டவர்கள் இப்படி குறை சொல்கிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லாமல் இருக்கமாட்டார்.
துதிபாடிக் கூலி கேட்டவர்கள்
பெரியாருக்கு இங்கிலீஷ் தெரியாது; அரசியல் தந்திரம் தெரியாது என்று ஜஸ்டிஸ் கட்சியைப் பிரிக்க முயன்ற சிலர் சொல்லுகிறார்கள். இது யார் சொல்வது என்றால், பெரியாரே ஆயுள் தலைவராக இருக்கவேண்டுமென்று துதிபாடிக் கூலி கேட்டவர்களேயாகும்.
‘‘மற்றொரு கூட்டம் சொல்லுவது என்னவென்றால், பெரியார் பணத்துக்கு கணக்குக் காட்டுவதில்லை என்பது. கட்சிக்கு ஏது பணம்? யார் கொடுத்தார்கள்? யாருக்குக் கணக்குக் காட்டவேண்டும்? என்று யாராவது நேரில் கேட்டால் அதற்கும் பதில் நீங்கள் கண்மூடிக்கொண்டு தலைவரைப் பின்பற்றுகிற மூடநம்பிக்கைக்காரர்கள் என்று சுயமரியாதை பேசுவது, இவை சில்லறை ஆட்கள், புதுக்கோட்டை அம்மன் காசு ஆட்கள் சொல்லுகிற குற்றங்கள் என்றால், இனி பெரிய ஆட்கள், டாலர்கள் பவுன்கள் பேசுவது என்ன என்றால் ஜஸ்டிஸ் கட்சியால் சுயமரியாதைக் கட்சி கெட்டுப் போய் விட்டதென்றும், மற்றொரு மோசக்காரர்கள் கூட்டம் சுயமரியாதைக் கட்சியால் ஜஸ்டிஸ் கட்சி கெட்டுப்போய் விட்டது என்றும் சொல்லுவதும், கெட்டுப் போன காரியம் என்னப்பா நன்றாய் இருந்ததாக நீ கருதிக் கொண்டிருந்த காலத்தில் கட்சிகள் இருந்த நிலை என்ன? என்று கட்சிக்கு நீ செய்த தொண்டு என்ன? நீ கொடுத்த பணம் என்ன? என்று கேட்டு விட்டு மேலும், அப்பா நீ எத்தனை தடவை ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடினாய்? எத்தனை தடவை எனக்கு சொந்தக் காரியம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு விலகி இருந்தாய்? எத்தனை தடவை என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தலைவருக்கு எழுதினாய் இது யாருக்கும் தெரியாதா? என்று கேள்வி கேட்டால் அதற்குப் பதில் அப்போதைய நிலைமை அப்படி இருந்தது. அதனாலேயே இன்றும் அப்படித்தான் இருக்கவேண்டுமா என்றதல்லாமல் வேறு பதில் இல்லை.
- (தொடரும்)
No comments:
Post a Comment