ஆசாபாசங்களுக்கோ, மற்றவைகளுக்கோ ஆளாகிவிடக் கூடாது என்று கருதிக் கொண்டு, ஒரு கட்டுப்பாடுடைய தொண்டனாகத்தான் என்னை நான் வரித்துக்கொண்டேன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

ஆசாபாசங்களுக்கோ, மற்றவைகளுக்கோ ஆளாகிவிடக் கூடாது என்று கருதிக் கொண்டு, ஒரு கட்டுப்பாடுடைய தொண்டனாகத்தான் என்னை நான் வரித்துக்கொண்டேன்

தமிழர் தலைவர் ஆசிரியரின் தன்னிலை விளக்கவுரை



சென்னை, அக்.6- குருசாமி அவர்கள் மறைந்த நேரத்தில், நான் ‘விடுதலை‘ ஆசிரியராக இருக்கிறேன். அந்தப் பொறுப்புக்குப் போகின்ற நேரத்தில், மேற்கண்ட அனுப வங்களையெல்லாம் பல நேரங்களில் அறிந்தும், தெரிந்தும் இருந்த காரணத்தினால், அதே தவறை நாம் செய்து விடக்கூடாது - தவறிக்கூட அந்த ஆசாபாசங்களுக்கோ, மற்றவைகளுக்கோ ஆளாகிவிடக் கூடாது என்று கருதிக் கொண்டு, தந்தை பெரியார் அவர்கள், யாரைப் பார்க்கச் சொல்லுகிறார்களோ, பெரிய நிலையில் இருக்கக் கூடியவர்களை - அவருடைய உத்தரவு இல்லாமல் நான் சந்தித்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை உருவாக்கி வைத்துக் கொண்டிருந்தேன். எதையும் அய்யா வைக் கேட்டே செய்வது என்ற ஒரு கட்டுப்பாடுடைய தொண்டனாகத்தான் என்னை நான் வரித்துக்கொண்டேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.


கடந்த 25.7.2020 மாலை 6 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘ஒப்பற்ற தலைமை'' (பொழிவு-5) எனும் தலைப் பில் காணொலிமூலம் கழகத் தோழர்களிடையே சிறப்புரை யாற்றினார்.


அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை 1949 ஆம் ஆண்டு ஆரம்பித்து, அதற்குத் துணைத் தலைவராக தி.பொ.வேதாசலம் அவர்களை நியமித்திருந்தார். குருசாமி அவர்களும் உறுப்பினராக இருந்தார்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் அல்லவா?


அவர்கள் இயக்கத்தைவிட்டு வெளியேறும் சூழல் வரும்போது அதற்காக சில பல காரணங்களைச் சொன் னார்கள். இவரின் ராஜினாமா கடிதங்களை வாங்கி விட்டார்கள்.


ஏனென்றால் சட்ட எரிப்புப் போரில் சிறைக்குச் சென்ற குருசாமி போன்றோர் சிறையை விட்டுத் திரும்பும்போது, சென்னையில் கட்சியில் இரண்டு குழுவாக வெளியே வந்தார்கள், அவர்களை அதனைப் பெரிதாக்கியபொழுது, இரண்டு குழுக்கள்மீதும் அய்யா அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்.


1963 ஆம் ஆண்டு


வருமான வரித்துறைக்குக் கடிதம்


நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்கள் இயக்கத்தைச் சார்ந்தவர் அல்ல. எனவே, அவரை ஒதுக்கி, மற்றவர்களின் மீது நடவடிக்கை எடுத்தார். இப்படியெல்லாம் நடந்த பிறகு, மறுபடியும் குருசாமியைச் சேர்த்தார்கள். சேர்த்த பிறகும் அவர்கள் 1962 இயக்கத்தைவிட்டு விலகி, பிறகு 1963 ஆம் ஆண்டு வருமான வரித்துறைக்குக் கடிதம் எழுதுகிறார்கள்.


தி.பொ.வேதாசலமும், குருசாமி ஆகிய இருவரும் கையெழுத்துப் போட்டு அனுப்பிய கடிதத்தால்தான், வருமான வரித் தொல்லை இந்த இயக்கத்திற்கு வந்தது.


கடைசிவரை அந்தப் பிரச்சினை தொடர்ந்தது. இந்தச் சொத்தை மணியம்மையாரும், மற்றவர்களும் அனுபவிக் கப் போகிறார்கள் என்றெல்லாம் அவர்கள் ஜாடை மாடையாக சொன்னார்கள்.


பெரியாரிடம் பணியாற்றியபொழுதுகூட, அவரைக் கிண்டல் செய்யக்கூடிய அளவிற்கு, இவருக்குத் தைரியம் வந்தது என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.


பெரியாரை அருகில் வைத்துக்கொண்டே...


திருவாளர் குருவிக்கரம்பை வேலு அவர்கள் எழுதி யிருக்கின்ற புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.


‘விடுதலை' அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கம்பாசிடர் ஒருவரின் மகளை, கல்கி அச்சகத்தில் கம்பாசிட ராக இருந்த இளைஞர் ஒருவருக்கு, குருசாமியின் சிபாரி சின் பெயரில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த மாப்பிள்ளை குருசாமியின் பக்தர். அந்த மாப்பிள்ளையின் மாமனார்தான் ‘விடுதலை'யில் முக்கியமான கம்பாசிடர் என்பது ‘கல்கி' அலுவலகத்திற்குத் தெரியாது.


அந்த மாப்பிள்ளைக்குக் ‘கல்கி' அலுவலகத்தில் கொடுத்த சம்பளம் போதவில்லை. மேலும் சுயமரியாதைக் காரராக இருந்ததினால், ‘கல்கி'யில் தொடர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை.


எனவே, வேலையை விட்டு விலகி, 2, 3 எருமை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்ய விரும்பினார். இந்த எண்ணத்தை, ‘விடுதலை'யில் வேலை செய்கின்ற மாமனாரிடம் கூறினார்; மாமனாருக்கு அது பிடிக்கவில்லை. எருமை மாடு வளர்ப்பதைக் கேவலமாக எண்ணினார்.


ஒரு நாள் குருசாமியிடம் ‘விடுதலை' கம்பாசிடர், ‘‘அய்யா, தாங்கள் பார்த்த மாப்பிள்ளை எருமை மாடு வளர்க்கவேண்டும் என்றும், அதனால் வரும் பால் வரு மானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தப் போவதாகக் கூறுகிறார்; அது எனக்குக் கேவலமாகத் தெரிகிறது. தாங் கள் அவரைக் கூப்பிட்டு, புத்தி சொல்லவேண்டும்'' என்று கூறினார்.


அப்பொழுது, அடுத்த அறையில், தலைவர் பெரியா ரும் இருந்தார்.


எருமை வளர்ப்பது கேவலம் என்று சொன்னது குத்தூசியாருக்குப் பிடிக்கவில்லை. மேலும், பெரியாரைக் கிண்டல் செய்ய எண்ணினார்.


குத்தூசியார், கம்பாசிடரும் கூறியது, ‘‘எருமை வளர்ப்பது கேவலம் அல்ல; எருமை மாட்டின் வருமானம், நமது அலுவலகத்தில் வேலை செய்யும் எழுத்தரின் சம்பளத்தைவிட அதிகமானது.


இரண்டு எருமையின் வருமானம், கம்பாசிடர் சம் பளத்தைவிட, அதிகமான கூடுதலாகும்.


மூன்று எருமையின் வருமானத்தைவிட, நமது மேனேஜரின் சம்பளம் குறைவு.


நான்கு எருமையின் வருமானம், ‘விடுதலை' ஆசிரியரின் ஊதியத்தைவிட அதிகம்.


அய்ந்து எருமையின் வருமானம், நமது தலைவரின் வருவாய்க்குச் சமம்.


இப்படிப்பட்ட தொழிலையா கேவலம் என்கிறீர்கள்'' என்றவுடன்,


குபீரென்று சிரிப்புச் சத்தம் கேட்டது, சிரிப்புச் சத்தம் கேட்ட திசையை நோக்கினால், அங்கே பெரியார் தெரி கிறார்" என்று சொல்லி, பெரியாரை வைத்துக்கொண்டே இதனை சொன்னார் என்ற அளவிற்கு அந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்! என்னே கொடுமை! தலைமையை மதிப்பதா இது!


பிறகு, அய்யா இவைபோன்ற நிலைமைகள் வந்தவு டன், அவர்கள் என்னைக் காப்பாற்றுவது மணியம்மை - கழகமும், துரோகமும் என்ற தலைப்பில், நெல்லையில், வேலூரில் மற்ற இடங்களில் தொடர்ந்து பேசியது புத்த கமாக வெளிவந்திருக்கிறது. அதனை விளக்கவேண்டிய அவசியமில்லை.


வருமான வரித்துறைக்கு எழுதிப் போட்டு, "ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றுக்கும் பயன்படப் போவதில்லை;" "திராவிடர் கழகத்தையே கலைத்துவிடப் போகிறார்; இயக்கத்திற்குப் பிரச்சாரமே இனி கிடையாது" இதுபோன்ற அறிக்கைகளைவிட்டு இருக்கிறார்கள்.


இப்படியெல்லாம் துரோகங்களை சந்தித்தபொழுதுகூட அய்யா அவர்கள் அதனைப்பற்றி கவலைப்படாமல், தன் னுடைய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.


என்றாலும்கூட, இவ்வளவு காலத்திற்குப் பயன்பட்ட வர்கள்கூட எப்படி மாறிவிட்டார்கள் என்று நினைக்கின்ற நேரத்தில், இந்தத் துரோகத்தையும் தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார்கள், வேதனைப்பட்டார்கள்.


ஒரு செய்தியைக் கூறி, இந்தப் பொழிவினை நிறைவு செய்யக் கடமைப்பட்டு இருக்கிறேன்.


‘குத்தூசி‘ குருசாமி அவர்கள் மறைந்த நேரத்தில், சென்னையிலே நான் ‘விடுதலை‘ ஆசிரியராக இருக்கி றேன். அந்தப் பொறுப்புக்குப் போகின்ற நேரத்தில், மேற் கண்ட அனுபவங்களையெல்லாம் முந்தைய பல நேரங் களில் அறிந்தும் தெரிந்தும் இருந்த காரணத்தினால், அதே தவறை நாம் செய்துவிடக்கூடாது - தவறிக்கூட அந்த ஆசாபாசங்களுக்கோ, மற்றவைகளுக்கோ ஆளாகிவிடக் கூடாது என்று கருதிக் கொண்டு,


ஒரு கட்டுப்பாடுடைய தொண்டனாகத்தான் என்னை நான் வரித்துக்கொண்டேன்


தந்தை பெரியார் அவர்கள், யாரைப் பார்க்கச் சொல்லு கிறார்களோ, பெரிய நிலையில் இருக்கக் கூடியவர்களை - அவருடைய உத்தரவு இல்லாமல் நான் சந்தித்தது கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை மன உறுதியை உருவாக்கி வைத்துக் கொண்டிருந்தேன்.


எதையும் அய்யாவைக் கேட்டே செய்வது என்ற ஒரு கட்டுப்பாடுடைய தொண்டனாகத்தான் என்னை நான் என்னை வரித்துக்கொண்டேன்.


எனவே, அதில் எனக்கு சிரமமே இல்லை. பெரியார் தந்த புத்தி என்பதுதான் அதிலும் பயன்படக் கூடிய அள வில் இருந்தது.


இதுவரை வெளியிடாத ஒரு செய்தி!


இதுவரை வெளியிடாத ஒரு செய்தியைச் சொல்கிறேன்.


குருசாமி அவர்கள் மறைந்தவுடன், இரங்கல் தலையங் கம் எழுதவேண்டும். அப்பொழுது திருச்சியில் அய்யா அவர்கள் இருக்கிறார். அவரைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டேன், தொலைப்பேசியில் பேசினால், அய்யாவிற்குக் காது கேட்காது, அன்னை மணியம்மையார் தான் நாம் சொல்வதைக் கேட்டு, பெரியாரிடம் சொல்வார். உடனே பெரியார் அவர்கள் துணைத் தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார்.


அய்யா என்ன சொன்னாரோ, அதன்படி நான் துணைத் தலையங்கம் எழுதினேன். குருசாமி அவர் களுடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும்பொழுது, அண்ணா அவர்களை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்தித் தேன். இறுதிவரை இருந்து நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் வந் தேன். எனக்கு எந்தவிதமான ஆசாபாசங்களும் கிடை யாது.


அப்படிப்பட்ட சூழ்நிலையில், பெரிய விமர்சனங்கள் வந்தன. ஆனால், என்னுடைய தலைவர்தான் சொன்னார் என்று நான் சொல்ல முடியுமா? அந்த விமர்சனங்களுக் கெல்லாம் நான் பதில் சொல்லவில்லை. எவ்வளவு வசவு கள் வந்தாலும் பரவாயில்லை, அதனை வாங்கிக் கொள் வோம் தாங்கிக் கொள்வோம் என்று. ஏற்றுக் கொண்டேன்.


‘விடுதலை' ஆசிரியராக இருந்த குருசாமி அவர்களின் மறைவிற்கு, துணைத் தலையங்கம்தான் எழுதுவதா? என்று பல பேர் விமர்சனம் செய்தார்கள்.


ஆனால், அதற்குப் பிறகு உங்களுக்கெல்லாம் தெரியும், 80 லட்சம் ரூபாய் வருமான வரிப் பிரச்சினைகளை சந்திக்கக் கூடிய அளவிற்கு வந்தது.


அதனுடைய அழுத்தம், சுமை என்பது தந்தை பெரியாருக்கு மிகப் பெரிய அளவிற்கு மனச்சுமையாகியது.


அன்னை மணியம்மையார் காலத்தில், அது 60 லட்சம் ரூபாயாகி, அதற்குப் பிறகு நான் பொறுப்பேற்ற நேரத்தில், நாம் எல்லோரும் சேர்ந்து இயக்கத்தை நடத்திக் கொண்டி ருக்கிற காலகட்டத்தில் 80 லட்சம் ரூபாயாகி, 1978 ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பிரச்சினைகளை சமாளித்து, வழக்கு நடத்தி வந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.


துரோகங்கள், இந்த இயக்கத்தை அழித்துவிடவில்லை!


பிறகு அந்த வழக்கிலிருந்து வெளியே வந்து, இன் றைக்கும் அது நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இயக் கம் நடக்கிறதா? இல்லையா? இன்றைக்கு இயக்கத்தை எதிரிகள் எப்படி பார்க்கிறார்கள்? இன்றைக்கும் இன எதிரிக்கு மிகப்பெரிய அளவிற்கு பெரியார் அவர்களின் இயக்கத்தைக் கண்டு அச்சப்படக் கூடிய அளவில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்தால், இந்தத் துரோகங்கள், இந்த இயக்கத்தை அழித்துவிடவில்லை. சிதைத்துவிடவில்லை. காரணம் கழகத் தோழர்களின் உண்மை உழைப்பும் கட்டுப்பாடும்தான்.


அதையும் தாண்டி, இந்தக் கொள்கை நிலைபெற்று இருக்கிறது என்றால், தந்தை பெரியாரின் ஒப்பற்ற தன்னல மற்ற திராவிட சமுதாயத்தை நேசித்ததுதான் என்றார்கள்.


துரோகம் நாளைக்கு வந்தாலும் - தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகு, அன்னை மணிம்மையார் காலத்தில் துரோகங்கள் வந்தன. அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், நம்முடைய கொள்கை, நம்முடைய உறுதி, அய்யா அவர்கள் எப்படி அந்தப் பாதையில் கொஞ்சம் கூட சிந்தாமல், சிதறாமல் தன் லட்சியத்தை எடுத்துக் கொண்டு போனார்களோ, அதே பாதையில் நாமும் செல்லவேண்டும்.


‘ஒப்பற்ற தலைமை‘ என்று சொன்னால், எடுத்துக் கொண்ட குறிக்கோள், அந்த லட்சியம், அந்தப் பாதையில் இருந்து நழுவக் கூடாது என்பதுதான் அவருடைய எண்ணம் என்ற பாடத்தைத் தெரிந்துகொள்வோம். நன்கு கற்போம். அதன்வழி நடப்போம்!


நமக்குப் பாடமாக இருக்கிற அளவிற்குத் தான் நமக்குப் பயன்பட வேண்டும்


இது பழைய செய்திகள் என்பது, நமக்குப் பாடமாக இருக்கிற அளவிற்குத்தான் நமக்குப் பயன்பட வேண்டுமே தவிர, அதனை நினைத்துப் பார்த்து வருத்தப்படுவதற்கோ, அதனை மற்றவர்களிடம் பரப்புவதற்கோ அல்ல - நமக்குப் புரிந்துகொள்வதற்காக என்பதை மட்டும் எடுத்துச் சொல்லி, என்னுரையை முடிக்கிறேன்.


நன்றி, வணக்கம்!


வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வருக நம் முடைய லட்சியமுள்ள ஒரு சமுதாயம்!


- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


 


No comments:

Post a Comment