சிங்கப்பூரில், தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறந்த நாள் விழா ஏன் கொண்டாடவேண்டும்?
சிங்கப்பூரில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவனின் 142 ஆம் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவரின் விளக்கவுரை
சென்னை, அக். 7 சிங்கப்பூரில், தந்தை பெரியார் அவர்க ளுக்குப் பிறந்த நாள் விழா ஏன் கொண்டாடவேண்டும்? பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில்தானே, இந்தியாவில் தானே பிறந்தவர். இது வேறு நாடு ஆயிற்றே, இங்கே ஏன் அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடவேண்டும் என்று புதிய தலைமுறையினராக இருக்கக்கூடிய, பெரியாரைப் பார்த்திராத, பெரியாரின் உரையைக் கேட்டிராத, பெரியா ரைச் சரியாகப் புரிந்திராத சிலருக்கு அய்யம் ஏற்படலாம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
கடந்த 27.9.2020 இந்திய நேரப்படி காலை 8.30 மணியளவில் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய சிங்கப்பூர் வாழ்மக்களே, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில், பகுத்தறிவுப் பகலவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே சிந்தனையாளர், புரட்சியாளர், அறிவுப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்ததோடு, அதற்குத் தலைமை தாங்கி நம் அனைவரையும் வரவேற்ற பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் ஆற்றல்மிகு தலைவர் அருமை நண்பர் கலைச்செல்வம் அவர்களே,
இந்நிகழ்ச்சியில், அருமையான ஓர் உரையை இங்கு வழங்கிய ஆசிரியர் திருமதி லீலாராணி அவர்களே,
பெண்ணுரிமையினுடைய உயர்ந்த தத்துவங்களை மிக அழகாக அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். எப்படி பெரியாருடைய பெண்ணியம் தன்னை உயர்த்திற்று, தன் குடும்பத்தை உயர்த்திற்று, சமுதாயத்தை உயர்த்தியது என்பதை மிக அழகாகச் சொன்னார்கள்.
தன்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தே
மிக அருமையாக...
அதுபோலவே, பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி என்பதை மிக அழகாக, ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். பெரியாரைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள் நாட்டில் ஏராளம்; பிறகு திருந்தியவர்கள் ஏராளம் என்பதற்கு எடுத் துக்காட்டாக, இதோ நானே இருக்கிறேன்; அதுமட்டுமல்ல, ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒருவன், இன்றைக்கு அமெ ரிக்காவில் ஒரு பொறியியல் வல்லுநராக, ஓர் அமைப்பின் தலைவராக இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடியவர் களாக இருக்க முடியும் என்பதை மிகத் தெளிவாக இன்றைக்கு உணர்த்தக் கூடிய அளவிற்கு, தன்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்தே மிக அருமையாக எடுத்துச் சொன்னார் மிகப் பெரிய நிறுவனத் தலைவராகப் பணியாற்றும் பொறியாளர் இரவிச்சந்திரன் சோமு அவர்கள்.
அதுபோலவே இங்கு பகுத்தறிவினுடைய பயன் என்ன என்பதைப்பற்றி அருமை மாணவச் செல்வம் மிகச் சிறப்பான வகையில் எடுத்துச் சொன்னார்.
அதைவிட இன்னும் சிறப்போடு, இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ச்செல்வி அவர்கள், அனைவரையும் சிறப்பான வகையில் அறிமுகப்படுத்திய தோடு, ஆங்காங்கே கருத்துச் சிதறல்களையும் சிறப்பாக வைத்தார்கள்.
சிங்கப்பூரில் நடைபெறுகின்ற தந்தை பெரியார் அவர்களுடைய 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் மேடையில் கலந்துகொள்கின்றவர்கள் மட்டுமல்ல, காணொலிமூலமாக பங்கேற்றுள்ள உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்துத் தமிழ் அறிஞர்களே, அன்பர் களே, பெரியோர்களே, நண்பர்களே, தோழர்களே, கழகக் குடும்பத்தினர்களே, கொள்கைக் குடும்பத்தினர்களே, பகுத்தறிவாளர்களே, மனிதநேயர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
சிங்கப்பூரில், தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறந்த நாள் விழா ஏன் கொண்டாடவேண்டும்?
சிங்கப்பூரில், தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறந்த நாள் விழா ஏன் கொண்டாடவேண்டும்? பெரியார் அவர் கள் தமிழ்நாட்டில்தானே, இந்தியாவில்தானே பிறந்தவர். இது வேறு நாடு ஆயிற்றே, இங்கே ஏன் அவருக்குப் பிறந்த நாள் கொண்டாடவேண்டும் என்று புதிய தலைமுறையினராக இருக்கக்கூடிய, பெரியாரைப் பார்த்திராத, பெரியாரின் உரையைக் கேட்டிராத, பெரியாரைச் சரியாகப் புரிந்திராத சிலருக்கு அய்யம் ஏற்படலாம். அவர்களுடைய தகவலுக்காகச் சொல்கிறோம். பெரியார் சமூக சேவை மன்றம் ஆரம்பித்த பிறகுதான், தந்தை பெரியாருக்குப் பிறந்த நாள் விழாவினை - கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடத்தி, வாழ்வியல் உரைகளை அவர்கள் நடத்தி, பயனுறு மக்களாக சிங்கப்பூர் மக்களுக்கு கருத்தொளியை அவர்கள் ஊட்டி வருகிறார்கள் - வெளிச் சத்தைப் பாய்ச்சி வருகிறார்கள் என்பது மட்டுமல்ல நண்பர்களே!
62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை நடத்தியிருக்கிறது சிங்கப்பூர்!
சிங்கப்பூரின் வரலாற்றினை நீங்கள் பின்னோக்கிப் பார்த்தீர்களேயானால், 1940 ஆம் ஆண்டிலேயே பெரியார் பிறந்த நாள் விழாவாக 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை - சிங்கப்பூர் கொண்டாடி இருக்கிறது.
இந்தத் தகவல், உங்களில் சிலருக்கு, அப்போது பிறக் காதவர்களுக்கு அல்லது புதிய தலைமுறையினருக்குப் புதிய செய்தியாகக்கூட இருக்கலாம். ஏதோ கற்பனை செய்தியல்ல இது. சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளேடு வெளியிட்ட ஒரு செய்தியை தமிழ்நாட்டிலிருந்து வெளிவந்த 'குடிஅரசு' ஏடு அப்படியே எடுத்துப் போட்டு பதிவாகியுள்ள செய்தி இதோ:
சிங்கையில் பெரியார் தினம் கொண்டாட ஏற்பாடுகள்:
சிங்கப்பூரில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் 62 ஆம் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக ஏற்படுத்தப்பட் டிருந்த கமிட்டிக் கூட்டம் 12-08-40 திங்கட்கிழமை மாலை தலைவர் தோழர் உ.ராமசாமி நாடார் ஜெ.பி. அவர்கள் தலைமையில் கூடி கீழ்கண்ட தீர்மானங்களைச் செய்தது.
தீர்மானங்கள்
- முன்வருடத்திய இக்கொண்டாட்டத்தின் வரவு செலவு கணக்குகளை முன்வருடத்திய காரியதரிசி அவர் கள் இவ்வருடக் கமிட்டியாரிடம் 20-08-1940க்குள் ஒப்புக்கொடுத்து விடவேண்டும்.
- இவ்வருடத்திய கொண்டாட்டத்தை நடத்த நியூ வோர்ல்ட் அல்லது ஹேப்பிவோர்ல்டில் இடம் கேட்டு நிச்சயிக்க வேண்டும்.
- இவ்வருடக் கொண்டாட்டத்தை வெள்ளி 150 செலவிற்குள் நடத்துவது.
- பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு அடங்கிய ஒருசிறு புத்தகம் அச்சிட்டு இக்கொண்டாட் டத்தில் வழங்குவது.
- நன்கொடைகள் வசூலித்து 1000 ரசீதுகள் அச்சிடுவது.
- பெரியார் பிறந்ததினக் கொண்டாட்டத்தை 22-09-40 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரம்பிப்பது.
- இந்த விழாவிற்கு வசூலிக்கப்படும் நன்கொடையிலிருந்து ஒரு தொகையை பெரியார் நடத்திவரும் ‘விடுதலை’ப் பத்திரிகைக்கு உதவிநிதியாக அனுப்புவது பற்றி இக்கமிட்டி பின்னர் யோசித்து முடிவு செய்வது.
பெரியார் அவர்கள் 'விடுதலை'ப் பத்திரிகையை அதிக சிரமத்தோடு தமிழர் முன்னேற்றத்திற்காக நடத்திக் கொண் டிருப்பதால் அவரின் பிறந்ததின விழாவை கொண்டாடும் மலாய் நாட்டுத் தமிழர்கள் அவரின் சிரமத்திற்கு கொஞ்சம் உதவியாய் இருக்கும் வண்ணம் சிரமம் எடுத்து நன் கொடைகள் வசூலித்து விழாக் கொண்டாட்டத்தை சிக்கனமாய் முடித்து மீதப்படும் பணத்தை விடுதலைப் பத்திரிகைக்கு உதவிநிதியாகப் பெரியார் அவர்களுக்கு அனுப்பிவைப்பது பெரியாருக்கும் மிகவும் விருப்பமான காரியமாக இருக்குமென்பதை மலாய் நாட்டுத் தமிழ்ப் பெருமக்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வரவும் இக்கமிட்டியினர் விரும்புகின்றனர்.
தலைவர் தோழர் உ. ராமசாமி நாடார் அவர்கள் தமது முடிவுரையில் பெரியார் அவர்கள் இரவு பகல் கஷ்டநஷ் டங்களைப் பாராமலும், தமது உடல்நலனைக்கூட கொஞ்சமும் கருதாமலும் தமிழர்களுக்காக உழைத்து வருவதை தமிழ்நாட்டில் நேரில் காணும்போது நம் மனம் குழைகிறது. பெரியார் மாசற்ற சேவைக்கு நம்மால் இயன்ற அளவு உதவி செய்துகொண்டிருக்க வேண்டுவது தமிழர்கள் ஒவ் வொருவரின் கடமை. 'விடுதலை'ப் பத்திரிகையைப் பெரியார் அதிக கஷ்ட நஷ்டங்களோடு நடத்திக் கொண் டிருக்கிறார்கள். ஆதலால் இந்நாட்டிலுள்ள நாம் அதற்கு உதவி செய்ய வேண்டியது அவசியத்திலும் அவசியம். 'விடுதலை'ப் பத்திரிகைக்கு என் சொந்த முறையில் நான் ஆயிரம் ரூபாய் தருகிறேன். நீங்களும் முயற்சி எடுத்து மற்றவர்களிடமும் கொஞ்சம் கூடுதலாய் பணம் வசூலித்து ஒரு தொகையாய் பெரியாருக்கு அனுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன் உங்கள் முயற்சிகளுக் கெல்லாம் என்னால் இயன்ற அளவு துணை நின்று உதவி செய்கிறேன் என்று பேசி கமிட்டியார்களுக்கு வந்தனம் செலுத்திக் கொண்டார்கள். தோழர் சு.கோபால் அவர்கள் தலைவர் அவர்களுக்கு வந்தனோபசாரம் கூற கூட்டம் மாலை 8 மணிக்குக் கலைந்தது.
- “தமிழ் முரசு"
'குடிஅரசு', 01.09.1940
சிங்கப்பூர், மலாய் நாட்டோடு இணைந்திருந்தபோதும் கூட, அதற்குப் பிறகு சிங்கப்பூர் சுதந்திரமடைந்த பிறகும் கூட, இரண்டு முறை அங்கே வந்திருக்கிறார்.
முதல் முறையாக அங்கே வருவதற்கு முன்பு இருந்த சூழல்களைத் தந்தை பெரியார் அவர்கள் பார்த்து, தோட் டப் புறங்களில் இருக்கக்கூடியவர்கள் அவதிகளையும் சரி, அல்லது நகர்ப்புறங்களில் இருக்கக்கூடியவர்களாக இருந் தாலும், தமிழ்நாட்டில் இருந்து வந்து பயன்பெற்றவர்கள் - குடியேறியவர்கள் தங்களுடைய கல்வியில் நாட்டம் செலுத்தவில்லை. ஏதோ வெறும் தொழிலாளர்களாக, புலம்பெயர்ந்தவர்களாக அவர்கள் அங்கே தோட்டத் தொழில் செய்து வந்தார்கள்.
அவர்களுடைய வாழ்க்கை முறை என்பது ஒரு திட்டவட்டமான இலக்கோடு இருக்கக்கூடியதாகவோ அல்லது சிக்கனத்தையும், சேமிப்பையும் அடிப்படையாகக் கொண்டதாகவோ ஒருபோதும் அமையவில்லை. பகுத்த றிவுச் சிந்தனைக்கு இடமே இல்லாமல் அவர்கள் இருந் தார்கள்.
அவர்கள், தமிழ்நாட்டில், இந்தியாவில் எதை விட்டு விட்டு, கப்பலேறி வரவேண்டுமோ, அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
அதுதான், ஜாதிய அமைப்பு, அதுதான் தீண்டாமை, அதுதான் மூடநம்பிக்கை.
சரியான புரிதல் இல்லாத காரணத்தினால்....
அந்தக் காலகட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு, அவருடைய 'குடிஅரசு' ஏடு மிகப்பெரிய அறிவுப்புரட்சியை உருவாக்கியது. அந்தக் 'குடிஅரசு' ஏட்டினை சிங்கப்பூர் நாட்டில், மிகப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், மிகப்பெரிய வெறுப்பு களுக்கிடையே பரப்பினார்கள். இங்கே நண்பர்கள் சொன்னதுபோல சரியான புரிதல் இல்லாத காரணத்தினால், பெரியார் அவர்களுடைய சிந்தனைகளை மிகத் தெளிவா கப் புரிந்துகொள்ளவில்லை. பலாப் பழத்தின் மேற்புறத்தில் உள்ள முட்களை உறிக்க மாட்டேன் நான் என்று சொன் னால், உள்ளே இருக்கின்ற பலாச் சுளையின் சுவையை அனுபவிக்க முடியாது. மேலே இருக்கின்ற முட்களைப் பார்த்து, பலாப்பழத்தைத் தள்ளிவிட்டால், அது யாருக்கு நட்டம்? பலாப்பழத்திற்கு அல்ல நண்பர்களே, சுவையை அனுபவிக்கவேண்டியவர்களுக்குத்தான் நட்டமாகும்.
அதுபோலத்தான், பெரியார் அவர்களுடைய தோற்றம். மேலே முள் இருக்கிறதே - கரடு முரடாக இருக்கிறது என்பதைத்தான் இங்கே அழகாக எடுத்துரைத்து விளக்கம் சொன்னார்கள்.
பெரியார் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிர்ப் பானவரா?
பெரியார் கடவுள் மறுப்பாளரா?
ஏன் அப்படி ஆனார்கள்? என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.
கிருமிகளை அழித்தால்தான்,
நோய்களை ஒழிக்க முடியும்!
கிருமிகளை அழித்தால்தான், நோய்களை ஒழிக்க முடியும். கண்ணுக்குத் தெரியாத கரோனா கிருமிகளை நாம் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம் - இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். கண்ணுக்குத் தெரிகிற கிருமிகளை அழித்தால்தானே, நாம் நோயிலிருந்து காப் பாற்றிக் கொள்ள முடியும்.
எனவேதான், கிருமிகளுக்கு விரோதியா? என்று ஆச் சரியத்துடன் கேட்டார்கள். பெரியார் ஒருமுறை சொன்னார், என்னை "பிராமணத் துவேஷி" என்று சொல்கிறார்கள் - நான் கொசுவலை கட்டிக் கொள்கிறேன், கொசு கடிக்கக் கூடாது என்பதற்காக - சமத்துவத்தை வேண்டுகிறேன் - ஆகவே, நான் 'கொசுவுக்கு துவேஷி' என்று சொல்ல முடியுமா?
நான், என்னைப் பாதுகாக்க கொசுவலை கட்டிக் கொள்கிறேன்.
அதுபோல, பெரியார் அவர்கள், மனித குலத்தைப் பாது காக்கத்தான் மேற்கண்ட கருத்துகளுக்குத் தள்ளப்பட்டார்.
காரணம், எவை எவையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறதோ,
எவை எவையெல்லாம் பகுத்தறிவுக்குக் கேடாக இருக்கிறதோ,
பெரியாருடைய நோக்கம் மானுடம்
எவை எவையெல்லாம் சமத்துவத்திற்கு விரோதமாக இருக்கிறதோ - அவைகளை நீக்கவேண்டும். ஒரு பயணத் தில், எப்படி தடைகளை நீக்கிக்கொண்டு, நாம் பயணத்தைத் தொடருவோமோ - அதேபோன்று, குறுக்கிட்ட, அந்தக் குறுக்கீடுகள்தான் அவைகளே தவிர, அவருடைய நோக் கம், அவைகளை நோக்கிப் போவதல்ல. பெரியாருடைய நோக்கம் மானுடம்.
பெரியார் ஒரு மானிட நேயர் - மனிதநேயம் - மானிடப் பற்றாளர்.
இங்கே ஆசிரியர் திருமதி லீலாராணி அவர்கள் உரையாற்றும்பொழுது மிக அழகாகச் சொன்னார், மற்றவர்களும் சொன்னார்கள்.
மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று.
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு அல்ல - மனிதர்கள். அவர்கள் உயர்ந்த ஜாதி மனிதர்களாக இருந்தாலும் சரி - தாழ்ந்த ஜாதி மனிதர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் மேல்தட்டில் இருந்தாலும் சரி - கீழ்த்தட்டில் இருந்தாலும் சரி.
அவர்கள் மேலை நாடுகளில் இருந்தாலும் சரி - கீழை நாடுகளில் இருந்தாலும் சரி - மனிதர்கள் என்றால் மானிடம்.
என்னைவிட உயர்ந்தவனும் ஒருவன் இருக்க முடியாது - என்னைவிட தாழ்ந்தவனும் இருக்க முடியாது.
நான் உயர்ந்தவன் என்று மட்டும் நினைக்காதே - நீ உயர்ந்தவன் என்று மட்டும் உன்னை நிலை நிறுத்திக் கொள்ளாத - நீ, பிறரைத் தாழ்த்தாதே!
எனவேதான், சமத்துவம் - சம வாய்ப்பு என்று சமத்து வத்திற்காகப் போராடுகின்ற நேரத்தில், எவையெல்லாம் குறுக்கே வந்தனவோ, அவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்று நினைத்தார்.
எனவே, பலாப்பழத்திற்கு அந்த முள்தான் பாதுகாப்பு. பலாச்சுளை என்பது தந்தை பெரியாருடைய லட்சியங்கள். அதுதான் மானிடப் பற்று.
"எனக்கு அறிவுப்பற்று, வளர்ச்சிப் பற்றைத் தவிர, வேறு எந்தப் பற்றும் கிடையாது. மனிதப் பற்றுதான் மிக முக்கியம். அந்த மானுட நேயம்தான் மிகவும் முக்கியம்" என்று சொன்னார்.
மனிதத்திற்காகப் போராடியவர்
தந்தை பெரியார்
எனவே, "மனிதம்" எங்கே தாக்கப்படுகிறதோ - "மனி தம்" எங்கே பறிக்கப்படுகிறதோ அந்த மனிதத்திற்காகப் போராடியவர் தந்தை பெரியார் அவர்கள்.
மனிதர்கள், உருவத்தால் மனிதர்கள் - உள்ளத்தால், உணர்வால், சமத்துவத்தால், சம வாய்ப்பால் மனிதர்களாக இருக்கிறார்களா?
சரி பகுதியாக இருக்கின்ற பெண்களை ஏன் படிக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள்?
உடலில், ஒரு பகுதி இயங்கி, மற்றொரு பகுதி இயங் காமல் போனால், அதற்குப் பக்கவாதம் என்று பெயர் அல் லவா? அதுபோல, மக்கள் தொகையில் சரிபகுதியாக இருக் கின்ற பெண்ணினம் ஏன் அடிமைப்பட்டு இருக்கவேண்டும். பெண் ஏன் அடிமை ஆனாள்? என்று கேட்டார்.
ஒப்பற்ற பகுத்தறிவாளர் என்பதற்கும், மனிதநேயர் என்பதற்கும் இதைவிட மிகப்பெரிய வாய்ப்பில்லை.
- தொடரும்
No comments:
Post a Comment