தி.க. தலைவரும், தி.மு.க. தலைவரும் காலத்தாற் சொன்ன கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

தி.க. தலைவரும், தி.மு.க. தலைவரும் காலத்தாற் சொன்ன கருத்து

"திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி, எஃகு போன்ற உறுதியானது. இதில் பூசல்களையும், வதந்திகளையும் பரப்பி ஓட்டைப் போடலாம் என்று நினைத்தால் அத்தகையவர்களுடையது அற்பக் கனவே!" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்றைய 'விடுதலை'யில் (13.10.2020) அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களும் எதிர்க்கட்சிகளின் கலகம் மூட்டும் வேலையை அம்பலப்படுத்தியிருந்தார் - எதைச் செய்தாலும் திமுக கூட்டணி கலகலத்துப் போகாது என்றும் திட்டவட்டமாகவே தெரிவித்துள்ளார்.


இவ்விரு தலைவர்களின் அறிக்கை மிகவும் சரியானதே - இந்தக் கால கட்டத்தில் தேவையானதே - அவசியமானதே என்பதற்கு வெகு தூரம் சென்று சாட்சியங்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. பார்ப்பன வார ஏடான 'துக்ளக்'கின் இவ்வார இதழை (21.10.2020) ஒரு புரட்டுப் புரட்டினாலே 'துக்ளக்'கின் புரட்டும், விஷமமும், சிண்டு முடியும் வேலையும் விளங்கும்.


எடுத்த எடுப்பிலேயே முதல் பக்கத்தில் 'எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு, 'துக்ளக்' இதோ எழுதுகிறது.


"திமுக - கூட்டணியில் மிகவும் சொற்ப அளவிலான தொகுதிகள்தான் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் என்பது மாதிரியான செய்திகளை திமுக தலைமையே திட்டமிட்டுக் கசிய விடுகிறது என்று தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் நினைக்கிறார்கள், ஆட்சிக்கு வந்துவிட்ட மாதிரியே திமுக நினைக்கத் துவங்கி, கூட்டணிக் கட்சிகளைப்பற்றி சர்வ அலட்சியமாகப் பேசுகிறது என்கிற அதிருப்தி அந்த அணியிலுள்ள வேறு சில கட்சிகளிடமும் உருவாகி இருக்கிறது" என்று 'துக்ளக்' எழுதுகிறது.


சிலர் சொன்னார்கள், பல பேருடைய நினைப்பு என்கிற பாணியில் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யாரும் எழுதலாம், சொல்லலாம், ஏடுகளும் இந்தப் பாணியைப் பின்பற்றலாம்.


குறிப்பிட்ட ஒருவரின் பெயரைச் சொன்னால், அவர் சாட்சியத் துக்கு வந்து விடுவாரே!


சிண்டு முடிவதற்கும், வதந்திகளைப் பரப்புவதற்கும் அறிவு நாணயமற்றவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவது புரிகிறது - அதுவும் பார்ப்பனர்களுக்கு இது கைவந்த கலையே!


பா.வே. மாணிக்கநாயக்கர் தந்தை பெரியாரின் நண்பர் - பொறியாளர். மேட்டூர் அணை உருவாக்கத்தில் இவர் பங்களிப்பு முக்கியமானது. இவரிடம் வேலை பார்த்த ஓவர்சியர் 'நீங்கள் இலஞ்சம் வாங்குகிறீர்களாம்' என்று கூற, பொறியாளர் யார் அப்படி சொன்னது என்று கேட்க, ஊரார் பேசிக் கொள்கின்றனர் என்று சொல்ல, கோபம் கொண்ட பொறியாளர் மாணிக்க நாயக்கர். ‘வாழாமல் உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் மகளுக்கும், லஸ்கர் நாராயணசாமிக்கும் சம்பந்தம் உண்டு என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார்களே!' என்று சொன்னபோது 'எந்த அயோக்கியப் பயல் அப்படிசொன்னான்?' என்று ஆத்திரப்பட, பொறியாளர் மாணிக்க நாயக்கர் காலில் இருந்ததைக் கழற்றி, அந்த ஓவர்சியர் தலையில் இரண்டு மூன்று போட்டார். இதைத் தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் சொன்னதுண்டு. ஊரார் பேசுகிறார் கள், சொல்லுகிறார்கள் என்கிறவர்களுக்கு இதுதான் பதில்.


'துக்ளக்' ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள் திமுக தலைவருக்குச் சில அறிவுரைகளைச் சொல்லிப் பார்த்ததுண்டு. "தி.க.வுடன் நெருங்காதீர்கள், வீரமணியிடமிருந்து விலகி நில்லுங் கள்" என்று இதோபதேசம் செய்து பார்த்தார்.


இத்தகைய கருத்துக்களை வளர விடாமல், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் "தி.மு.க.வின் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்!" என்று மட்டை இரண்டு கீற்றாகத் தெளிவுபடுத்தி விட்டார்.


இது சரிபட்டுவராது என்ற நிலையில், ஒவ்வொரு இதழிலும் திமுகவையும், அதன் தலைவரையும் பற்றி அக்கப் போராக எழுதுவது என்பதையே தன் வயிற்றுப் பிழைப்பாக ஆக்கிக் கொண்டு விட்டது ‘துக்ளக்‘.


தமிழக வாக்காளர்கள் எல்லாருமே 'துக்ளக்'கின் வழிகாட்டு தலுக்காகக் காத்திருக்கிறது என்பது போன்ற அசாத்திய நினைப்பு இதுகளுக்கு! "நினைப்புப் பொழப்பைக் கெடுக்கும்" என்ற பழ மொழிதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.


இவ்வார 'துக்ளக்' பதிலில் (பக்கம் 23) திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி எழுதுகிறார்:


"1996 வெற்றி சோ மக்களின் ஆதரவைத் திரட்டிப் பெற்ற வெற்றி, சோவின் கூட்டணித் தத்துவத்தால் கிடைத்த வெற்றி, 2011 வெற்றி சோ உருவாக்கிய 'துக்ளக்' செல்வாக்கை பயன்படுத்தி பெற்ற வெற்றி" என்று எவ்வளவு 'அசட்டுத் துணிச்சலாக' இவர்களால் எழுத முடிகிறது.


"கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்ளான் ஓட்டியது" என்பார்கள். அதுதான் நினைவிற்கு வருகிறது.


ஏன் 1996, 2011 தேர்தலோடு நிறுத்துகிறது 'துக்ளக்'. 1971 தேர்தலை சாமர்த்தியமாகத் தவிர்ப்பது ஏன்?


1971 சேலம் - ராமன் பிரச்சினையை வைத்து அடேயப்பா 'துக்ளக்' சிறப்பு இதழை வெளியிட்டு போட்ட 'நிர்வாண ஆட்டத்தை' மறக்க முடியுமா? அந்தத் தேர்தலில் ராஜாஜி - காமராசர் கூட்டணி யின் மேலே விழுந்து விழுந்து, புரண்டு புரண்டு ஆதரிக்கவில்லையா, பிரச்சாரம் செய்யவில்லையா? முடிவு என்னாயிற்று? அதுவரை கண்டிராத அபார வெற்றியல்லவா திமுக பெற்றது. 1967இல் 138 இடங்களை மட்டும் பெற்ற திமுக 1971இல் 184 இடங்களைப் பிடிக்க வில்லையா?


அக்ரகாரத்தின் ராஜகுரு ஆச்சாரியார் (ராஜாஜி) "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. வெளிநாடு செல்ல மகா புருஷர்கள் எல்லாம் முடிவு கட்டி விட்டனர்" என்று கையொப்பம் போட்டு சரணாகதி அறிக்கை வெளியிடவில்லையா?


சோவுக்கு எந்த அளவு மக்கள் செல்வாக்கு என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது உண்டே!


2008 மார்ச்சில் ரஜினிபற்றிய ஆங்கில நூல் வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்ட சோ சொன்னது என்ன?


"என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை" என்று சொன்னாரா இல்லையா? இந்த நிலையில்  இந்த சோவின் பேச்சைக் கேட்டு, மக்கள் ஓட்டளித்தனர் என்பது கடைந்தெடுத்த 'அக்மார்க்' தமாஷ்தான். அதைவிட சோவின் இன்னொரு வாக்கு மூலம் ஆம், "நான் ஒரு அரசியல் புரோக்கர் - தரகு வேலையாள்!" ('ஆனந்தவிகடன்' 1.2.2012) என்றாரே - புரோக்கர்களுக்கு நாட்டில் என்ன மரியாதை என்பது ஊரறிந்ததே!


No comments:

Post a Comment