இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் மறைந்த எம். கோபாலகிருஷ்ணன் பெயரில் அவரது தொண்டற நினைவு , பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் போற்றப்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 19, 2020

இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் மறைந்த எம். கோபாலகிருஷ்ணன் பெயரில் அவரது தொண்டற நினைவு , பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் போற்றப்படும்

 நினைவேந்தல் நிகழ்வில், உருவப் படத்தை திறந்து வைத்து பல்கலை வேந்தர் தமிழர் தலைவர் புகழுரை



சென்னை வளர்ச்சி சங்கம் (Madras Development Society)  முன்னெடுப்பில்  30.9.2020 அன்று மறைந்த, இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் எம். கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு நினைவேந்தல் இணைய வழியில் நடைபெற்றது. 18.10.2020 அன்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மறைந்த எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் உருவப்படத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்து உரை ஆற்றினார்.


நினைவேந்தல் நிகழ்விற்கு வேலூர் தொழில் நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கல்விக்கோ கோ. விசுவநாதன் தலைமை வகித்தார். நிகழ் வினை ஏற்பாடு செய்திருந்த சென்னை வளர்ச்சி சங்கத்தின் நிறுவனர் - தலைவர் சட்டக்கதிர் ஏட்டின் ஆசிரியர் முனைவர் வி.ஆர். சம்பத் அறிமுக உரை ஆற்றினார்.


பல்கலைக் கழக வேந்தர்  தமிழர் தலைவரின் உரை


மறைந்த எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் உருவப் படத்தினை திறந்து  வைத்து தமிழர் தலைவர் ஆற்றிய நினை வேந்தல் புகழுரை   ( 3ஆம் பக்கம் காண்க).


நினைவேந்தல் உரைகள்


நினைவேந்தலில்  கல்வியாளர்கள், பல்துறை சார்ந்தோர் ஆற்றிய உரைகளின் சுருக்கம் பின்வருமாறு:


அறிமுக உரை: முனைவர் வி.ஆர். சம்பத்


இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன்   வங்கிச் சேவையினை மக்களுக்கு வழங்கிய அதிகாரி மட்டும் அல்ல; அதனையும் தாண்டி சமுதாய நோக்கில், நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்திட, பல் தொழில் நிறுவனங்கள் பெருகிட, கல்வி நிலையங்கள் உருவாகிட வங்கிப் பணியினை சரியான வகையில் பயன்படுத்திய சமுதாயச் சேவையாளர்.  இன்று தமிழ் நாட்டில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கையில் - குறிப்பாக உயர்கல்வி நிலையங்களின் கல்விப் பணி அதிக அளவில் கிடைத்திடுவதற்கு உரிய வங்கிச் சேவையினை வழங்கியவர். நிதி உதவி வேண்டி வந்தவருக்கும், வேண்டுபவரிடமிருந்தும் எந்தவித பலனையும் எதிர்பாராமல், வங்கிக் கிளை மேலாளராக இருந்த காலத்திலிருந்து 'வங்கியின் தலைவர்' எனும்   உயர்நிலைக்கு வந்து பணி ஆற்றி ஓய்வு பெறுகின்ற வரையில் சேவை செய்து வந்த செம்மல் ஆவார். பணி ஓய்விற்குப் பின்னர் பல்வேறு வழக்குகள் அவர்மீது போடப்பட்டு அதனை நேர் கொண்ட காலங்களிலும் பிறருக்கு உதவிடும் குணம் அவரிடம் நீடித்து நிலைத்தே வந்தது. ஒரு வங்கியில் அடிப்படை அதிகாரியாகப் பணியில் சேர்ந்து அதே வங்கியின் தலைவர் பதவி வரைக்கும் பணி உயர்வு பெற்றுச் சென்ற முதல் தென்னக வங்கி அதிகாரி அவர்தான். வங்கிப் பணியை - சேவையை முழுமையாக சமுதாய முன்னேற்றத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்திட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த  பெருமகனார் எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரது சேவை மனப்பான்மை என்னென்றைக்கும் போற்றப்படும்.


தலைமை உரை ஆற்றிய கல்விக்கோ


கோ. விசுவநாதன்


தமிழ்நாடு, பிற மாநிலங்களைக் காட்டிலும் கல்விப் பணியிலும் கல்வி நிலையங்கள் நடத்துவதிலும் முன்னணி மாநிலமாகத் திகழுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த தலைவர்கள் இருவர். ஒருவர்  - பள்ளிக்கல்வியை பரவலாக்கி, பலரும் படித்திடக் காரணமான பெருந் தலைவர் காமராசர். மற்றவர் - உயர்கல்வி நிலையங்கள் பெருகி, பலரும் உயர்கல்வி பயில வழி  ஏற்படுத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இருவரும் அரசியல் அதிகாரத்துடன் மக்களுக்கு கல்விப் பணி வழங்கியவர்கள். ஆனால் ஒரு வங்கி அதிகாரி, பின்னாளில் அந்த வங்கியின் தலைவர் என்ற நிலையில் தமிழ்நாட்டுக் கல்விப் பணிக்கு பெரும் பணியாற்றியவர் பெருந்தகையாளர் மறைந்த எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களாவார். வங்கியில் நிதி உதவி பெற விதிகளைக் கூறி மறுப்பு தெரிவிக்கும் நிலை பரந்துபட்டு இருக்கையில், உதவி வேண்டுவோருக்கு வங்கியின் எந்த விதி பொருந்தும் என தேடிப் பார்த்து செயலாற்றிய சேவையாளர் அவர். அவர் கடன் வழங்கிய எந்தக் கல்வி நிலையங்களும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதில்லை. பெரு நிறுவனங்கள்தான் சொன்னபடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை. அதனால்தான் அவருக்கு இன்னல்கள் ஏற்பட்டன.


1984ஆம் ஆண்டில் நாங்கள்  குறைந்த அளவு கட்டமைப்பு வசதிகளுடன் வேலூர் தொழில் நுட்பக் கல்லூரியைத் தொடங்கிய பொழுது எம். கோபாலகிருஷ்ணனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம். கல்லூரியின் நூலகம்  - பெரியார் ஈ.வெ.ரா. நூலகம் - சரியான கட்டடத்தில் இல்லாத நிலையினை பார்த்து விட்டுச் சென்றார். இரண்டு நாள்களில் அஞ்சலில் ரூ.5 லட்சத்திற்கு இந்தியன் வங்கியின் சார்பில் நூலகத்திற்கு நன்கொடை வந்து சேர்ந்தது. நிதி வேண்டும் என வேண்டாமலேயே நிலைமை அறிந்து - எங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு மட்டுமின்றி - அடித்தள மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் வங்கிப் பணி மூலம் சேவையாற்றியவர் கோபாலகிருஷ்ணன். பின்னர் பெரியார் ஈ.வெ.ரா. நூலகத்திற்கு அன்றைய தமிழக ஆளுநர் சென்னாரெட்டி வேலூருக்கு வர இயலாத சூழலில் எங்களது நூலகத்திற்கான அடிக்கல் நாட்டி சென்னை ஆளுநர் மாளி கையிலேயே ஆளுநர் சென்னாரெட்டியின் தலைமையில் கோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.


இந்த நாட்டிற்கு மருத்துவக் கல்வி கூடுதலாகத் தேவைப் படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் குறியீட்டின்படி


1  லட்சம் மக்களுக்கு 150 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் நமது நாட்டில் 1 லட்சம் மக்களுக்கு 80 டாக்டர்கள்தான் சேவையாற்றி வருகின்றனர். கோபாலகிருஷ்ணன் போன் றவர்கள் இன்று வங்கிப் பணியில் இருந்தால் நிச்சயம் தேவைப்படும் அளவிற்கு மருத்துவக் கல்லூரிகள் பெருகிட  முயற்சி எடுத்து நிதி உதவி செய்திருப்பார். வங்கியில் பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறந்த சமுதாய நோக்காளராகவும் அதற்குரிய வகையில், பணியாற்றக் கூடிய வராகவும் விளங்கிய பெருமகனார் - அவரது நினைவைப் போற்றுவோம். வாழ்க எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆற்றி வந்த வங்கிச் சேவையுடன் கூடிய சமுதாயச் சேவை!


தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி தலைவர்


கே.எஸ். அழகிரி



வங்கிப் பணியை மக்கள் சேவைக்கு முழுமையாகப் பயன்படுத்திய தலைவர் எம். கோபாலகிருஷ்ணன் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலையில் தாராளமாகக் கடன் வழங்கி விட்டார் என அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டில் அவரது நேர்மை குறித்த அய்யப்பாடு தெரிவிக்கும் வகையில் எதுவும் இல்லை. அவரது அல்லலுக்கு அரசியல் காரணம் பின்புலமாக  இருந்தது. கடன் வாங்கிய பெரு நிறுவன உரிமையாளர்கள்  வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் கடன் வழங்கிய அதிகாரி கோபாலகிருஷ்ணன் மீதான வழக்கு நீடித்தது. தண்டனைக்கு ஆளாகும் அவல நிலையும் வந்தது. ஆனாலும் வெளிவந்த பின்னும் மக்கள் சேவை ஆற்றுவதில் மனம்  தளராத மாண்பாளராக கோபாலகிருஷ்ணன் திகழ்ந்தார். அவரது தொண்டுள்ளத்தைப் போற்றுவோம்.


தி.மு.க. நாடாளுமன்ற


உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன்


எங்களது கல்வி நிலையங்கள் மட்டுமல்ல, பல கல்வி நிலையங்கள் இன்று சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றுவதற்கு முதன்மையாக வங்கிநிதி உதவி வழங்கியவர். அந்த உதவிக்கு, நன்றியளிப்பாக இன்று தமிழ்நாட்டில் உள்ள பல உயர் கல்விநிலையங்களில் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களின் திருவுருவம் படம் இருக்கிறது. வங்கிப் பணி நிறைவை ஒட்டி அவர்மீது தொடரப்பட்ட வழக்குகள் குறித்து கேள்விப்பட்டு ஒரு சமயம் அவருக்கு வழக்கு நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை என கேள்விப்பட்டு ஒரு கணிசமான தொகையை எடுத்துக் கொண்டு அவரது இல்லம் சென்றேன். அவர் பணியில் இருந்தபொழுது மிகவும் நேர்மையாக  நடந்து கொண்ட வெளிப்படைத் தன்மையான வங்கித் தலைவர் ஆவார். அவரைச் சந்தித்த பொழுது இல்லம் வந்து நிலவரம்  விசாரித்ததற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.  விடைபெறும் பொழுது கொண்டு வந்த பணத்தை அவரிடம் கொடுத்து வழக்கு நடத்திட வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன். மறுக்காமல் அதைப் பெற்றுக் கொண்டார். நமது முன்னிலையிலே தனது உதவியாளரை அழைத்து, கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து ஒரு பள்ளிக்கூட நிர்வாகத்தினர் வந்து பள்ளிக்கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதுபற்றி கூறினார்களே, அவர்களை வரச்சொல்லி இந்த பணத்தை அளித்து கட்டடம் கட்டிக் கொள்ளச் சொல்லுங்கள் எனக் கூறினார்.  நான் மலைத்துப் போனேன். தனக்கு பணப் பற்றாக் குறை என்ற நிலையில் வந்த பணத்தை பொதுக் காரியத்திற்கு வழங்கிடும்  பண்பைப் பார்த்து மலைத்து நின்றேன். அந்த மாண்பாளரிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பவதைத் தவிர வேறு எதையும் பேச முடியாத நிலையில் இருந்தேன். இத்தகைய கொடை உள்ளம், அல்லல்படும்பொழுதும் அடுத்தவர் கஷ்டத்தை புரிந்து செயல்படுகின்ற உள்ளத்தை எம்.கோபாலகிருஷ்ணன்  அவர்களிடம் பார்த்தது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. இது எனக்குத் தெரிந்து  நடந்தது; தெரியாமல் எத்தனையோ பொதுப்பணிகள் செய்த பெருந்தகையாளரின் நினைவுகள் வாழ்க.


வழக்குரைஞர் சண்முகசுந்தரம்


(மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்)



இந்தியன் வங்கியின் தலைவராக இருந்தபொழுது எம். கோபாலகிருஷ்ணனை சென்று நான் சந்தித்தது இல்லை. எனக்குப் பழக்கமில்லை. ஓய்வு பெற்ற பின்பு, எனது உறவினர் அவருடன் பழகியவர் மூலம்தான் அறிமுகம் கிடைத்தது. பின்னர் ஒருநாள் தன்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் குறித்த ஆவணங்களை எடுத் து வந்து அளித்து விட்டு மேல் முறையீடு செய்து பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் வைத்த  நம்பிக்கையை வழக்கின் முடிவில் வெற்றிகரமாக மாற்றித்தர என்னால் இயலவில்லை. வழக்கு களில் குற்றவியல் தன்மை (Criminality) என எதுவும் இல்லை. பெரு நிறுவனங்கள் வழக்கிலிருந்து விடுபட்டன. சேவை புரிவது என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத போக்கு கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் பார்க்க முடிந்தது. வழக்கிலிருந்து விடுதலை கிடைக்காதது குறித்த கவலையையும் வெளிப்படுத்தவில்லை; மக்கள் மனதில் வெற்றி வீரராக விளங்கி வருபவரை வழக்கிலிருந்து விடுவித்துக் கொண்டு வர முடியவில்லை என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இறுதிவரை மக்களுக்குச் சேவை ஆற்றியே வாழ்ந்தார்.


லீ மெர்டியன் விடுதி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் பழனி. ஜி. பெரியசாமி


வெறும் கடன் வழங்கிய வங்கி அதிகாரி  அல்ல கோபால கிருஷ்ணன் அவர்கள். சமூக வங்கியாளர். சமூக வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயலாற்றினார். வங்கியில் உள்ள பணம் வங்கியிலேயே முடங்கி விடக் கூடாது, மக்களுக்கு கடனாக வழங்கி, திரும்ப வங்கிக்கு செலுத்தப்பட வேண்டும் என வங்கியின் அடிப்படையை முழுவதுமாக புரிந்து கொண்டு செயலாற்றியவர். அமெரிக்காவிலிருந்து 1 மில்லியன் டாலரை முதலீடு செய்ய இந்தியா வந்திருந்த நிலையில் எனக்கு நிதியாக 60 லட்சம் ரூபாய்  தேவைப்பட்டது. பல வங்கி யாளர்கள் இழுத்தடித்தனர். எனது தேவை அறிந்து தொடர்பு கொண்டு உங்களுக்கு எங்களது வங்கியில் 60 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கிறோம். உங்களது 1 மில்லியன் டாலரை வங்கியில் செலுத்துங்கள் என  முன் வந்தார்.


 ஒரு முறை எங்களது தரணி சர்க்கரை ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை முழுவதும் விற்பனையா காமல் தேக்கமடைந்து விட்டன. கரும்பை வெட்டி ஆலைக்கு வழங்கிய விவசாயிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஆலையின் முன்பு போராட்டத்தில் இறங்கி விட்டார்கள் விவசாயிகள். நான் நேராக கோபாலகிருஷ்ணன்  அவர்களைச் சந்தித்து எனக்கு அவசரமாக 3 கோடி நிதி உதவி வேண்டும் என எனது நிலைமையைக் கூறினேன். உடனே 1 கோடி வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டு மூன்று நாள்களில் மீதி 2 கோடியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். ஒரு வித முழுமையான மனநிறைவில்லாமல், வீட்டிற்கு வந்தபொழுது ஆலை நிர்வாகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தியன் வங்கியிலிருந்து 3 கோடிப் பணத்தை வழங்கி விட்டார்கள் என செய்தியினைச் சொன்னார்கள். இப்படி இன்னல் புரிந்து சேவை செய்யும் மனப்பான்மை, நடைமுறை யாருக்கு வரும்! இயல்பாகவே உதவும் எண்ணம் கொண்ட மாமனிதர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரது புகழ் ஓங்குக.


வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் வி.ஜி. சந்தோசம்:


நிதி உதவி வேண்டுபவரின் தேவை அறிந்து, உணர்ந்து பூர்த்தி செய்திடத் தெரிந்தவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். மற்ற வங்கியாளர்களுக்கு தொழிலுக்காக கடன் வழங்கத் தெரியும். ஆனால் கோபாலகிருஷ்ணனுக்கு கடன் வழங்குவதோடு தொண்டு செய்திடவும் தெரியும். அதுதான் மற்ற வங்கியாளரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. மககள் சேவையாளராக மாற்றியது.


அமெத் (AMET) பல்கலைக்கழகவேந்தர்


நாசே. இராமச்சந்திரன்


இந்தியன் வங்கியின் கிளையினை வெளியிலிருந்து பார்த்த ஆரம்பக் காலங்களில், சென்னையில் அண்ணா சாலையில் படித்த வேலையில்லாதோருக்கு வருமானம் ஈட்டும் வகையில் ஒரு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினேன். அப்பொழுது ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது; 'இராமச்சந்திரன் இருக்கிறாரா?' என்று எதிர்முனையில் குரல் கேட்டது. 'ஆம்; நான்தான் பேசுகிறேன்' என்றதும், 'என் பெயர் கோபாலகிருஷ்ணன், இந்தியன் வங்கியின்  சேர்மன் பேசுகிறேன்; நான் உங்களை வந்து சந்திக்க வேண்டும்; எப்பொழுது வரலாம்?' எனக் கேட்டதும், மிகவும் வியப்படைந்தேன். உடனே, 'அய்யா, நீங்கள் இங்கு வர வேண்டாம்; நான் வந்து உங்களைச் சந்திக்கிறேன்' எனச் சொல்லி சந்திக்க நேரம் வாங்கி நேரில் சென்றேன்.


என்னைப் பார்த்ததும் உபசரித்து, 'உங்களது திட்டமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய வருமானம் ஈட்டும் திட்டத்தில் இந்தியன் வங்கி இணைந்து பணியாற்ற விரும்புகிறது' எனக் கூறி  ஒப்புதலைப் பெற்ற மறு நிமிடமே தமது உதவியாளரை  அழைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்தியன் வங்கிக் கிளைகளுக்கும் அனுப்பிட இதுகுறித்து  ஒரு சுற்றறிக்கை தயாரித்து வரச் சொன்னார். எனது முன்னிலையில் சுற்றறிக்கையின்  வரைவு வந்ததும் ஒப்புதல் அளித்தவிதம் எனது வாழ்நாளில் மறக்க முடியாதது. வங்கிக்குள்ளேயே செல்ல முடியுமா என்ற நிலையில் இருந்த என்னை, வங்கியின் தலைவரே    அழைத்து இப்படி ஒரு ஊக்கமூட்டும் வகையில் நடந்து கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது.


பின்னர், எனது இடத்தில் செயல்பட்டு வந்த கடல்சார் பயிற்சிக் கல்லூரி செயல்பட முடியாமல் போன நிலையில் அதன் உரிமையாளரே என்னை அந்தக் கல்லூரியை வாங்கி  நடத்த ஆலோசனை கூறியதும் கோபாலகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். ஏற்கெனவே கல்லூரி மற்றொரு வங்கிக்கு செலுத்த வேணடிய கடன் தொகையுடன், புதிதாகக் கல்லூரி வளர்ச்சிக்கான கடன் தொகையினையும் சேர்த்து வழங்கிட ஆவண செய்தார். அதுதான் இன்று  நான் வேந்தராக இருக்கும் அமெத் (AMET) பல்கலைக் கழகம். ஒவ்வொரு ஆண்டும் உலகமெங்கும் சென்று பணியாற்றக் கூடிய கடல்சார் பொறியாளர்களை நூற்றுக்கணக்கில் உருவாக்கி வருகிறோம். அப்படி தமிழ்நாடு பொறியாளர்களை உருவாக்கிட வேண்டும் என்று அவர் கண்ட  கனவு இன்று நனவாகிக் கொண்டு இருக்கிறது.


'Fire in the Belly'   எனும் ஆங்கிலத் தொடரைப் போன்று அடுத்தவருக்கு உதவ வேண்டும் எனும் எண்ணம்  அவரது ஆழ்மனதில் எப்பொழுதும் இருந்தது. அந்நாளில் ஒரு வழமை இருந்தது. 'பணக்கஷ்டம்/மனக்கஷ்டம் இருந்தால் ஒன்று  கோயிலுக்கு போக வேண்டும்; இல்லையென்றால் கோபாலகிருஷ்ணனிடம் போக வேண்டும்' - இதன்படி அல்லல்படுவோருக்கு உதவிக் கரம் நீட்டிய காவலராக அவர் விளங்கினார்.


நான், முதன் முதல் அவருடன் தொடர்பு கொண்ட பொழுது  என்ன உதவி வேண்டும்' என்றுதான் ஆரம்பித்தார். மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த பொழுதும் உங்களது கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு, கரோனா தடுப்பிற்கு ஏதேனும் உதவி வேண்டுமா? என விசாரித்த விதம் - எத்தகைய இன்னல் மிகுந்த  சூழ்நிலையிலும், பிறருக்கு உதவ வேண்டும் எனும் அவரது இயல்பு மாறவில்லை; மாறவே இல்லை. வாழ்நாள் முழவதும் போற்றுதலுக்குரியவராக  விளங்கிய மாமனிதர் அய்யா கோபாலகிருஷ்ணன் வாழ்க!


இந்தியன் வங்கியின் மேனாள்


செயல் இயக்குநர் ஜி.ஆர். சுந்தரவடிவேல்


இந்தியன் வங்கியின் நான் பணியாற்றிய பொழுது அய்யா கோபாலகிருஷ்ணின் நேரடிக் கட்டுப்பாட்டில், பணியாற்றிய காலம் முழுவதும் பரவலான வழிகாட்டுதலுடன் நான் வங்கிப் பணி ஆற்றியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். வங்கிச் சேவையினை எப்படி மக்களுக்குகொண்டு செல்ல வேண்டும் என எங்களுக்கு பாடமாகச் சொல்லிக் கொடுத் தவர். உதவி கேட்டு வருபவர்களுக்கு எப்படியாவது உதவி செய்திட வேண்டும் எனும் உளப்பாங்குதான் பொதுவெளியில் அவரை ஒரு வெற்றிகரமான வங்கியாளராகக் காட்டியது. வங்கி வட்டாரத்தில்  அவரைப்பற்றி ஒன்றை வழமையாகக் கூறுவார்கள். M.G. does not know, how to say 'No'    எம். கோபாலகிருஷ்ணனுக்கு தெரியாதது எதுவென்றால், (உதவி கேட்டு வருபவர்களுக்கு) 'இல்லை' என்று சொல்லத் தெரியாததே என்பார்கள்.


வாடிக்கையாளர்களிடமிருந்தும் பொது மக்களிட மிருந்தும் எந்த குறை தீர்க்கக்கோரியும் உதவி கேட்டும் அவருக்கு வரும் பெரும்பாலான கடிதங்களில் அவர் அடிக்கடிகுறிப்பிடும் வாசகம் -  'Yes, Please do'   (சரி, ஆவன செய்திடவும்) என்பதே .எங்களுக்கெல்லாம் வங்கிப் பணி ஆற்றுவதிலே ஆசானாகத் திகழ்ந்தார் - அய்யா கோபால கிருஷ்ணன் அவர்கள். என்றும் எங்களது நெஞ்சில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.


ஆடிட்டர் வி.முரளி


எனக்கு மாத சம்பளம் பெறக்கூடிய வகையில் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை கிடைத்தபொழுது எனக்கு அந்த வேலை வேண்டாம். பலருக்கு வேலை அளிக்கும் வகையில் பணி செய்யுங்கள் என இன்று நான் செய்து வரும் ஆடிட்டர் சேவைக்கு என்னை ஆயத்தப் படுத்தியவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள். அவரது குடும்ப பாரம்பரியமே பிறருக்கு உதவி செய்வது. அவரது தந்தையார் சென்னை நகர மேயராக (1944-45) இருந்த ராதாகிருஷ்ணன், தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பால் இலவசமாக வழங்கிட ஏற்பாடு செய்தார்.  'மில்க் மேயர்' (Milk Mayor)  என மக்களால் அறியப்பட்டார். அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பம் - சட்டநாத கரையாளரின் மூத்த மகள்தான்  அவரது மனைவி ஆவார். பொதுப்  பணி ஆற்றுவதில் பெயர் பெற்ற குடும்பம் அது.


வங்கியின் அதிகாரிகள் தொழிற்சங்கத்தினைப் பிரதிநிதித் துவப்படுத்திடும் வகையில் உயர்மட்ட நிலைக் குழு (Board of Directors)  வில் இயக்குநராக இருந்து, அந்த வங்கியில் செயல் இயக்குநர், அதன் தலைவர் நிலைக்கு உயர்ந்த வங்கியாளர் அய்யா கோபாலகிருஷ்ணன் மட்டுமே.


தமிழ்நாடு, இந்தியாவின் அறிவார்ந்தோர் தலைமையிட மாக (Intellectual  Capital)  மாறும் வகையில் உயர் கல்வி பெற்று இளைஞர்கள் வெளிக் கிளம்ப வேண்டும் என  கனவு கண்டார்.  எனவே கல்வி நிலையங்களுக்கு கடனுதவி வழங்குவதில் தனிப்பட்ட அக்கறை காட்டினார். இன்று பரவலாக, 'புதிது' எனப் பேசப்படும் 'முத்ரா' (MUDRA)  வங்கிக் கடன் திட்டத்தை அன்றே வடிவமைத்து செயல்படுத் தியவர் அவர். இன்று வங்கி மற்றும் கம்பெனிகளுக்கு கட்டாயம் எனச் சொல்லப்படும் சமூகப் பொறுப்பு (Corporate Social   Responsibility - CSR) திட்டத்தின் முன்னோடி அவர். போக்குவரத்தை  நெறிப்படுத்திடும் அரசு காவலர்களுக்கு நிழற்குடை பல அமைத்து பரிவு காட்டிய பெரு மகனார் ஆவார். பரிவும், திட்ட வெற்றியும் இணைந்த வங்கியாளர் அவர். அப்படிப்பட்ட நேர்மையாளருக்கு கடைசியில்  சொந்தமாக ஒரு கார்கூட இல்லை. ஆட்டோவில் பயணம் செய்த நிலைமையும் இருந்தது. 32 வழக்குகள் அவர்மீது போடப்பட்டன. ஒன்றில் கூட அவர் கையூட்டு வாங்கினார் எனக் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. ஊருக்கே உதவிய அந்த உத்தமருக்கு இறுதி வரை வங்கியில் பணியாற் றிய காலத்திற்கான ஓய்வு ஊதியம், இதர பணிக்கொடை, எதுவும் வழங்கப்படவில்லை என்பது இன்று நிலவிடும் வங்கி நெறிமுறைகளில் ஒரு கறையாகவே நீடிக்கிறது.  அய்யா கோபாலகிருஷ்ணன் போன்றவர்களை மீண்டும் பார்ப்பது அரிது. அவரது நினைவினை போற்றுவதைவிட வேறு எதையும் செய்யமுடியாவர்களாகி விட்டோம்.


மேலாண்மை ஆலோசகர் ஏ.டி. கிருஷ்ணகுமார்


(சர்.சி.பி. ராமசாமி அய்யரின் கொள்ளுப் பேரன்)


நான் தமிழகத்தைச் சார்ந்து   இருந்தாலும் பம்பாயில் பணியாற்றிய பொழுது தான் கோபாலகிருஷ்ணன் அவர்களை எனது    வங்கியின் உயர் அதிகாரிகளுடன் சென்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.  உயர் அதிகாரி உட்பட நானும் சந்தித்திராத வித்தியாசமான வங்கித் தலைவராக விளங்கியவர் கோபாலகிருஷ்ணன். வங்கிகள் கடன் வழங்கும் பொழுது பணக்காரர்களிடம் பாதுகாப்பு (Securityபிணை வாங்க வேண்டும்; ஏழை மக்களிடம் பார்க்க வேண்டியது அவர்களது   'மனசாட்சியையே' மனசாட்சியை விட மேலான பாதுகாப்பு, கடன்  வழங்கிடும் நிதி நிறுவனத்திற்கு இல்லை என்பதே அவர் வங்கியினர்களுக்கு சொல்லும் பாடம்.  காந்தியப் பொருளாதாரத் தத்துவத்தில் Mass Production  என்பது (பெருமளவு உற்பத்தி) அல்ல; Production by the Masses (பெருந்திரள் மக்களால் உண்டாக்கப்படும் உற்பத்தி) ஆகும். இதை வங்கிப் பணியில்  செயல்படுத்திக்காட்டினார். வசதி படைத்தவர்களுக்கு சிறிய எண்ணிக்கையில் பெரிய தொகைகளை கடனாக வழங்கி லாபம் ஈட்டுவதை விட, சிறிய அளவுக் கடன் தொகையை பலருக்கும், அடித்தள மக்களுக்கும் வழங்கி வருவாய் ஈட்டுவதே சமூக வங்கியியல் எனும் கோட்பாட்டை நடத்திக் காட்டினார் கோபாலகிருஷ்ணன். வாழ்க அவர் புகழ்!


நிகழ்ச்சியின் நிறைவாக மருத்துவர் க. காந்தராஜ் (தந்தை பெரியாரிடம் உதவியாளராக இருந்து பின்னர் தமிழக அமைச்சரான க. ராசாராம் அவர்களின் சகோதரர்) நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


வாழும் பொழுது  உண்மை நிலை முழுமையாக அறியப்படாமல், மறைந்த பிறகே அறியப்படும் பெரு மக்களின் வரிசையில் இந்தியன் வங்கியின் மேனாள் தலைவர் எம். கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து விட்டார். இருப்பினும் அய்யா எம்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயல்பான உளப்பாங்கு   நேர்மைத் திறம், பிறருக்கு உதவிடும் எண்ணம், செயல்திறன், அனைவரையும் அரவணைத்தைச் செல்லும் போக்குபற்றி பொது வெளியில் அதிகம் அறியப்படாத செய்திகளைப் பதிவு செய்திட்ட நிகழ்வாக நினைவேந்தல் - படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்திய சென்னை வளர்ச்சி சங்கத்தின் நிறுவனர் - தலைவர் முனைவர் வி.ஆர். சம்பத் அவர்களின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது. வாழ்க அய்யா கோபாலகிருஷ்ணன் போற்றிக்  கடைப்பிடித்த சமூகப் பண்புகள்!


- தொகுப்பு: வீ. குமரேசன்


No comments:

Post a Comment