அண்ணல் அம்பேத்கர் தனித் தொகுதி உரிமை கேட்டது - ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 6, 2020

அண்ணல் அம்பேத்கர் தனித் தொகுதி உரிமை கேட்டது - ஏன்

அண்ணல் அம்பேத்கர் தனித் தொகுதி உரிமை கேட்டது - ஏன்?


இந்தியாவின் குடிஅரசு தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் - இதற்கு முன்பும் கே.ஆர். நாராயணன் குடியரசு தலைவராக இருந்தார் - அவரும் தாழ்த்தப்பட்டவர்.


இவை எல்லாம் பெருமைக்குரிய அலங்காரப் பதவிகளாகக் கருதப்படுகிறதே தவிர அதிகாரம் உள்ள பதவியாக இல்லை என்பது எதார்த்தமானது.


குடியரசு தலைவராக உள்ள மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் வடக்கே இரு கோயில்களில்  தடுக்கப்பட்டும், அவமதிக்கப்பட்டும் பிரதமரிடத்தில் இருந்தோ, நாடாளுமன்றத்தில் இருந்தோ ஓர் அசைவுகூட இல்லை. கீழ்த்தரமான ஒன்றைக் குறிப்பிட 'பறையன்' என்ற சொல்லைப் பயன்படுத்திய முரளிமனோகர் ஜோஷி மத்திய அமைச்சராகவே இருந்ததுண்டு.


இப்பொழுதுகூட நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த 131 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேச சட்டப்  பேரவையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 126 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. கொலை என்றால் பெண்ணின் நாக்கை அறுத்தும், முதுகெலும்பை உடைத்தும், குதியாட்டம் போடும் வெறிச் செயல் கொடூரத்தில், காட்டுமிராண்டித்தனத்தில் உச்சத்தை எட்டுகிறது. இவ்வளவு எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தும் எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லையே - ஏன்?


தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித் தொகுதி அண்ணல் அம்பேத்கர் கேட்டதன் உண்மையான பொருள் இப்பொழுது புரிகிறதா?


தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில், சட்ட மன்றங்களிலும் கணிசமாக இருந்தும், அவை எல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் சுருண்டு கிடப்பதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இதற்குமேல் கொடுமை செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு - உ.பி.யில் நடைபெற்ற பிறகும் இவர்களால் வாய்த் திறக்க முடியவில்லையே - குறைந்தபட்சம் உணர்வுகளைக் கூட வெளிப்படுத்த முடியவில்லையே!


தாங்கள் சார்ந்த கட்சி என்ன முடிவு எடுக்கிறது, கொறடா என்ன உத்தரவு பிறப்பிக்கிறார் என்று பார்த்து அல்லவா - இவர்கள் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது.


தனித் தொகுதி முறையில் வெற்றி பெற்று இருந்தால், முதுகெலும்போடு, பிரச்சினையைப் புயல் வேகத்தில் எழுப்பி நாட்டையே கிடுகிடுக்க வைத்து விடலாமே!


இந்திய அளவில் எடுத்துக் கொண்டால், ஒரு பிரிவு என்று கணக்கிடக் கூடிய கண்ணோட்டத்தில், ரிசர்வ் தொகுதி என்று கூறப்படும் தொகுதிகளில் வெற்றி பெற்ற தாழ்த்தப்பட்டவர் - பழங்குடியினர் மக்கள்தானே அதிகம்.


இவ்வளவுப் பெரிய எண்ணிக்கைப் பலம் - வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு இருந்தும், என்ன பயன் - என்ன பலன்?


குறைந்தபட்சம் கட்சி மட்டத்திலாவது பிரச்சினையைக் கிளப்ப முடியுமா என்று கேட்டால், அங்குகூட அவர்களை ஏதோ 'தீண்டத்தகாதவர்களாக'க் கருதுகிறார்களே தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்ற மதிப்பு கொடுக்கப்படுவதில்லையே!


உ.பி.யில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிஜேபி கட்சி அலுவலகத்தில் தரையில் உட்கார வைக்கப்படுவதும், உள்ளூர் பா.ஜ.க. உயர் ஜாதிக்காரர் நாற்காலியில் அட்டகாசமாக அமர்ந்திருப்பதும் பச்சையான தீண்டாமையின் வெளிப்பாடு இல்லையா?


உ.பி. முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் உ.பி.யில் பழங்குடி பெண்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைபற்றி எவ்வளவு சர்வ சாதாரணமாகக் கருத்துக் கூறுகிறார்.


தாக்கூர் சமுதாயக்காரர்கள் கொஞ்சம் கோபக்காரர்கள், சில சமயங்களில் இது போன்ற சிறு தவறுகளைச் செய்து விடுகிறார்களாம், என்னே ஆணவம், என்னே மூர்க்கத்தனம்!


பழங்குடிப் பெண்ணைக் கூட்டாக பாலியல் வன்கொடூர வேட்டையாடியதோடு, அந்தப் பெண்ணின் நாக்கை அறுத்ததும், முதுகெலும்பை உடைத்ததும், கொலை செய்ததும் எல்லாம் சிறு தவறுகளாம்! இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முதல் அமைச்சரின் உறவினர்களாம்.


சட்டம் கண் திறக்குமா? தாக்கூர் சமுதாயப் பெண்ணுக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் உ.பி. பற்றி எரிந்திருக்காதா? பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தப் பெண் அந்தப் பழங்குடி பகுதியில் கல்லூரி படிப்புக்குத் தகுதியான ஒரே  பெண் ஆவார்.


தந்தை பெரியார் கேட்டாரே, "சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பிறப்பிலேயே பேதம் உள்ள ஒரு நாட்டை சுதந்திர நாடு என்று எப்படி அழைக்க முடியும்?" என்று கேட்டாரே - அதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும் - இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரும்!


No comments:

Post a Comment