வாஸ்துபடுத்தும் பாடு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

வாஸ்துபடுத்தும் பாடு!

மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்து கிறது (51-A(h)). முதலில் மக்களுக்கு விஞ்ஞான மனப் பான்மையை ஊட்டுவதைவிட ஆட்சியாளர்களுக்குத்தான் தேவைப்படுகிறது.


மத்திய பிஜேபி அரசு என்பது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையின் முழு உருவம் என்பது உலகம் அறிந்த உண்மை.


இந்தப் பட்டியலில் தெலங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ் இதில் முற்றிப் போய் வாஸ்து என்ற பெயரால் மக்கள் பணத்தை கோடிக் கோடியாக வாரி இறைப்பதை என்ன சொல்ல!


வாஸ்து சாஸ்திரத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ள சந்திரசேகரராவ், மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ரூ.8.10 கோடி செலவில் கட்டிய அலுவலகத்தில் குடியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டார்.


ஏனெனில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சடங்குகள் செய்யாமல் இதில் குடியேறியதால்தான் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் என்று நம்பப்பட்டதால் சந்திரசேகர ராவ் வாஸ்து ஜோதிடர்களைக் கொண்டு புதிய இல்லத்தை வடிவமைத்தார்.


ராஜசேகர ரெட்டிக்கு அடுத்தபடியாக பதவி வகித்த ரோசையாவும் தனது பதவிக்காலத்தை முடிக்க முடியவில்லை, மேலும் பிரிவினையடையாத ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கடைசி முதல்வரான கிரண் குமார் ரெட்டியும் இங்கு பல பிரச்சினைகளைச் சந்தித்தார். இதற்கு கட்டடத்தின் வாஸ்து சரியாக இல்லாததே காரணம் என்று வாஸ்து ஜோதிடர்கள் சந்திரசேகர ராவுக்கு அறிவுரை வழங்கினார்களாம்.


இதனை அடுத்து   10 ஏக்கர் நிலப்பரப்பில்,   1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பேகம்பேட்டை கட்டடத்தில் சந்திரசேகர ராவ் அடியெடுத்து வைத்தார். 


இந்தக் கட்டடத்தில் சின்ன ஜீயரின்  மேற்பார்வையில் நடைபெற்ற சுதர்சன யாகத்தில் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர். கிரகப்பிரவேசம் தவிர, தெய்வ பிரவேசம், பசுப்பிரவேசம் ஆகிய சடங்குகளை புரோகிதர்கள் செய்து வைத்தனர்.


ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், அவரது மனைவி விமலா நரசிம்மன், சந்திரசேகரராவின் மகளும், எம்.பி.யுமான கே.கவிதா, உறவினரும், மாநில அமைச்சருமான ஹரிஷ் ராவ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் புடை சூழ புதுமனை புகுவிழா களை கட்டியது.


'பிரகதி பவன்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ‘அரண் மனை’ சுமார் ரூ.55 கோடி செலவில் கட்டப் பட்டதாகத் தெரிகிறது. இதில் முதல்வர் வசிப்பில்லம், அலுவலகம், மாநாட்டு அரங்கம் மற்றும் ஏற்கெனவே உள்ள 2 கட்டடங்களும் அடங்கும்.


இந்த வளாகத்தில் இவரது மகனும், அய்.டி. துறை அமைச்சருமான கே.டி.ராமாராவுக்கும் தனி வீடு கட்டப்பட்டுள்ளன. மேலும் சுமார் 1,000 பேர் அமரக்கூடிய அரங்கமும் கட்டப்பட்டுள்ளன. இது தவிர அமைக்கப்பட்ட முதல்வர் அலுவலகமோ பிரம்மாண்டமானதாகும்.


மேலும் இந்தப் பகுதியில் சபாநாயகர், அமைச்சர்களுக்கான குடியிருப்புகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன. தெலங் கானா முதல்வருக்கு நக்சலைட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதால், 24 மணி நேரமும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாம்.


இதன் காரணமாக இந்த புதிய வீட்டின் குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கையறைகள் குண்டு துளைக்காத சுவருடன், அதே போன்ற கண்ணாடிகளும் பொருத்தப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவால் நடத்தப்பட்ட  யாகத்திற்கு ரூ.8.5  கோடி  செலவிடப்பட்டதாக அரசு தணிக்கை வாரியத்திற்குக்  அவர் கணக்குக் கொடுத்துள்ளார்.  இந்த பங்களா கட்டு வதற்கு ரூ.55 கோடி மொத்தமாக செலவாகி யுள்ளது என்று அரசு இணையதளத்தில் தகவல் உள்ளது


வாஸ்து பார்ப்பதற்காக ரூ.8 கோடி வாஸ்து சாஸ்திரம் கூறியவர்களுக்கும், சோதிடர்களுக்கும் கொட்டிக் கொடுக்கப் பட்டுள்ளது.


தன்னுடைய 'நல்லாட்சி'க்குக் குந்தகம் இல்லாமல் இருப்ப தற்காக ரூ.10 கோடி செலவில் சண்டிஹோமம் நடத்தினார். யாக சாலையில்  தீ வளர்த்தபோது பந்தல் தீப்பற்றி எரிந்து சாம்பல் ஆனது. அந்த யாகத்தில் பங்கேற்க அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அய்தராபாத்துக்கு வந்து சேர்ந்தார். தீபற்றிய தகவல் அறிந்து அப்படியே திரும்பிப் பறந்தார். 


படித்தவர்களே பக்தியின் காரணமாகப் பாமரராக இருக்கும் நாடு வளர்வது ஏது, வாழ்வது ஏது? அரசுப் பணத்தை மூடத் தனங் களுக்குச் செலவிடும் பணத்தை நட்ட ஈடாக வசூலிக்க வழி செய்தால்தான் - கொஞ்சம் அச்சமாவது பிறக்கும்.


No comments:

Post a Comment