போகாத ஊருக்கு வழி!
இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் முடிவு.
நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தால், ஜி.எஸ்.டி.யையும் எதிர்ப்பார் - 'நீட்'டையும் எதிர்ப்பார் - பிரதமரானால் பச்சைக் கொடி காட்டுவார். ஜி.எஸ்.டி.யில் மாநிலத்தின் பங்கைக் கேட்டால், ரிசர்வ் வங்கியிடம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாமாம்; அல்லது வெளிச்சந்தையிலும் பெற்றுக் கொள்ளலாமாம்.
போகாத ஊருக்கு வழி என்பார்களே, அது இதுதானோ!
ஊர் அடங்காதா?
ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு சென்னையில் 2.7 சதவிகிதம் கரோனா பாதிப்பு அதிகம்.
இதில் அடங்காப் 'பிடாரி' யார்? நோயா - மக்களா - அரசா அல்லது ஆட்சியாளர்கள் சொல்லும் கடவுளா?
பா.ஜ.க. என்றாலே...
உ.பி. இளம்பெண் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.எல்.ஏ., வீட்டில் ஆலோசனை.
பா.ஜ.க. என்றாலே மனு நீதிதானே - ஒரு குலத்துக்கொரு நீதிதானே! ஜம்மு காஷ்மீரில் ஆசிபா என்ற சிறுமியை கோவிலில் வைத்து, ஒரு கும்பல் வன்புணர்ச்சி செய்து அடித்துக் கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் பக்கம் நின்று பா.ஜ.க. அமைச்சரே ஊர்வலமாக செல்லவில்லையா?
(ஏ)மாற்றம்!
செடி, கொடிகளின் வேர்கள் பூமிக்குள் செல்லுவதும், அதன் தண்டுப் பகுதிகள் பூமிக்கு மேல் நோக்கி வளர்வதும்தான் எல்லோருக்கும் தெரியும். இப்பொழுது தொட்டிகளைத் தொங்கவிட்டு, தண்டு மற்றும் விளைச்சல் பகுதிகளைக் கீழ்நோக்கிப் பயிரிடலாம்: - ஓர் அமெரிக்கத் தகவல்.
மாற்றம் என்பதுதான் மாறாதது - அதுவும் தலைகீழ் மாற்றமே! இன்னும் குழவிக் கல்லைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறோமே என்ன செய்வது!
பறிபோனதுதான் மிச்சம்!
பொறியியல் கலந்துரையாடலில் 4000 இடங்கள் காலியாக வாய்ப்பு!.
ஆண்டுக்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் பி.ஜே.பி.யின் சார்பில் நரேந்திர மோடி - அதை நிறைவேற்றியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா?
புதிதாக வேலை வாய்ப்பு இல்லை என்றாலும், இருந்த வேலையும் பறிபோனதுதான் மிச்சம்!
நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்ற கதைதான்! அல்லது குதிரை கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியும் பறித்த கதையையும் சேர்த்துக் கொள்ளலாம் அல்லவா!
ஆட்டைப்பற்றி ஓநாயின் கவலை!
அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டுமானால் அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்: - இல.கணேசன், பா.ஜ.க.
சும்மா ஆடுமா அய்யர்வாள் குடுமி? பா.ஜ.க.வுக்கு கொஞ்ச நஞ்சம் கிடைக்கும் வாக்கும் அ.தி.மு.க. தயவினால்தானே!
ஆம்! ஆடு நனைகிறதே என்று ஓநாய்க் கண்ணீர் உகுக்குகிறது, நம்புங்கள்!
என்று தணியும்
நகைப் பைத்தியம்?
வாட்ஸ் அப், முகநூலில் சேலை, நகை விளம்பரம் கொடுத்து 800 பெண்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி.
இவை சமூக வலை தளங்கள் அல்ல - சமூக விரோத இணைய தளங்கள். இதற்கொரு முடிவை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் அவசரக் கடமையாகும்.
ஆனாலும், பொதுவாகப் பெண்களுக்கு இந்த நகை - ஆடம்பரப் புடவை மீதான பைத்தியம் தெளியாதா?
No comments:
Post a Comment