ஒற்றைப் பத்தி - கடவுளானாலும்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

ஒற்றைப் பத்தி - கடவுளானாலும்...

கடவுளானாலும்...?



கடவுளானாலும், காந்தியார் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படுகிறவரைதான் - பயன்படவில்லை என்றால் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி அவை குப்பைக் கூடையில்தான்.


இதோ ஒரு தகவல்:


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞர் அவர்களோ 'எங்கள் ஆட்சியில் அய்யா பெரியார் போராட்டம் நடத்துவதா?' என்று கூறி,  அதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். ஒருமுறையல்ல, இருமுறை சட்டம் இயற்றினார்.


இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து ஜாதியில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிப் பள்ளிகளும் தொடங்கப்பட்டு 206 மாணவர்கள் 18 மாதங்கள் பயிற்சி பெற்று தீட்சையும் பெற்றனர் (2008).


திருவண்ணாமலை அருணாசல ஈசுவரர் கோவில் வளாகத்தில்தான் அர்ச்சகர் பயிற்சி நடந்தது. கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற அர்ச்சகர்ப் பயிற்சி மாணவர்களின் சங்கத் தலைவர் ரெங்கநாதன், அப்படியே தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளிக்கும் சென்றார்.


சென்றவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. பயிற்சி பெற்றபோது பிள்ளையார் வைக்கப்பட்டுப் பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தது. அந்தச் சிலைகள் எல்லாம் கேட்பாரற்றும், உடைந்தும், சிதைந்தும் கிடந்தன.


இதுபற்றி கோவில் அலுவலரிடம் ரெங்கநாதன் கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான் முக்கியமானது. 'நீங்களெல்லாம் பூஜை செய்த கடவுள் சிலையை அய்யர் பூஜை செய்யமாட்டார்!' என்று முகத்தில் அடித்ததுபோல் பதில் சொன்னார்.


மேலும் பயிற்சிப் பள்ளியின் உள்ளே சென்று பார்த்தபோது, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பள்ளி  - திருவண்ணாமலை' என்று எழுதப்பட்டு இருந்த பெயர்ப் பலகை உடைக்கப்பட்டுக் கிடந்தது. பயிற்சி மாணவர்கள் பயன்படுத்திய சிறுசிறு சிலைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கிடந்தன.


ஆம், 'சூத்திரன்' வழிபட்டால் அது கல்லு - 'பிராமணன்' வழிபட்டால் அது கடவுள்!


ஆம், காந்தியானாலும், கடவுள் ஆனாலும் பார்ப்பனர்களுக்குப் பயன்படும்வரைதான் - தெரிந்துகொள்வீர்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment