'நீட்' தேர்வு என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தலை எடுக்காமல் செய்வது, முதல் தலைமுறையாகக் கல்விச் சாலைகளில் நுழைந் தோர், ஏழை எளியோர், கிராமப்புறத்தைச் சார்ந்தோர் நீட்டினால், மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலைக்குத் தள்ளப்படு கின்றனர்.
கல்வியிலும், சமூகநிலையிலும் ஏற்கெனவே உயர்ந்த நிலையில் இருப்போர் இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பயிற்சி மய்யங்களில் சேர்ந்து ஓராண்டு, ஈராண்டு காத்து இருந்து பயிற்சி பெற்றோர்தான் நீட் தேர்வில், மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்திடும் அளவுக்கு அதிக மதிப்பெண் பெற முடியும்; 'நீட்' சமூகநீதிக்கு எதிரானது என்று நாம் திருப்பித் திருப்பி படித்துப் படித்துச் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை, அப்பட்டமான உண்மை என்று இப்பொழுது வெளி வந்துள்ள தகவல்கள், புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக பல லட்சங்களை செலவு செய்து, நீட் தேர்விற்கான பயிற்சி மய்யங்களில் பயிற்சி பெற்றவர்களே அதிகம் இந்த ஆண்டு நீட் தேர்வில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான அதிக மதிப்பெண்ணைப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக தனியார் பயிற்சி மய்யத்தின் தென் பகுதி இயக்குநர் சந்தன்சாந்த் என்பவர் கூறும் போது, "கடந்த ஆண்டு எங்களது பயிற்சி வகுப்புகள் சேலம் மற்றும் நாமக்கல்லில் துவக்கப் பட்டது, இந்த பயிற்சி வகுப்புகளில் அதிகம் பேர் சேரத் துவங்கினர். இவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேர்விற்குப் பயிற்சி அளிக்க நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்" என்று கூறியுள்ளார்.
பவன் குமார் என்ற மற்றொரு தனியார் நீட் பயிற்சிப் பள்ளி இயக்குநர் கூறும் போது, "வடக்கே மிகவும் குறைவான மாணவர்கள் தான் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதே ஆண்டு நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற முயல்கிறார்கள். ஆனால் தெற்கே 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு நீட் என்று இரண்டு ஆண்டுகள் வரை பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற பயிற்சி மய்யங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது,
எங்களிடம் பயிற்சி பெறுவதற்கு 4,202 மாணவர்கள் சேர்ந்தனர், இவர்களில் 2,916 பேர் 2019 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள். இதே போல் 2018 ஆம் ஆண்டும் 12 ஆம் வகுப்பு முடிந்து ஓராண்டு பயிற்சி எடுத்தவர்கள் அதிகம் சேர்ந்தனர்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"சிபிஎஸ் இ புதிய பாடத்திட்டத்தின் படி அனைவருக்கும் சிறப்பான பயிற்சிகள் எடுத்தோம், அதே போல் தொடர்ந்து தேர்வுகளை வைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்,
இதற்காக ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் மகாராட்டிராவில் இருந்து சிறப்பான ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு தங்கும் வசதிகள் செய்துகொடுத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தோம்" என்று திருச்சியைச் சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் பி. சுவாமிநாதன் கூறினார்
சில பயிற்சி மய்யங்களே மாணவர்களை கேரளா மற்றும் ராஜஸ்தானிற்கு அனுப்பி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வசதி செய்து கொடுத்தது,
நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கட் ஆப் மார்க் எனப்படும் தகுதி மதிப்பெண்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு அரசுக் கல்லூரிகளில் கட் ஆப் மதிப்பெண் திறந்த போட்டியில் 720க்கு 520 ஆகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 470 ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 435 ஆகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 360 மற்றும் பழங்குடியினருக்கு 267 ஆகவும் இருந்தது,
ஆனால் இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளதால் கட் ஆப் மதிப்பெண்களும் அதிகம் இருக்கும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
2020 ஆண்டு 400 முதல் 449 மதிப்பெண்கள் எடுத்தவர் 3,662 பேர் ஆகும். இதுவே 2019-ஆம் ஆண்டு 2658 ஆக இருந்தது.
600 மதிப்பெண் பெற்றவர்கள் இந்த ஆண்டு 824 பேர், கடந்த ஆண்டு இது 123 ஆக இருந்தது,
700க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இந்த ஆண்டு 7 பேர் ஆவர்; கடந்த ஆண்டு யாருமே 700 மதிப்பெண்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் முதலிடம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர், மற்றொரு தனியார் பள்ளி மாணவர் இருவருமே கடந்த ஆண்டு தேர்வு எழுதி குறைவான மதிப்பெண்களைப் பெற்று பிறகு சேலம் மற்றும் கோவையில் உள்ள தனியார் பயிற்சி மய்யங்களில் பெரும் செலவு செய்து படித்துத் தேர்ச்சி பெற்றோம் என்று பேட்டிகளில் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தெரிவிப்பது என்ன?
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. 'நீட்'டின் காரணமாக மருத்துவக் கல்லூரிக்குள் நுழையும் தகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு அறவே மறுக்கப் பட்டு கதவடைக்கப்படுகிறது என்று தெரிந்திருந்தும் 'நீட்' தொடரலாமா?
மக்கள் நல அரசு (Welfare State) என்பதற்கு என்ன பொருள்? ஆண்டாண்டுக் காலமாக பாதிப்புக்கு ஆளான மக்களைக் கை தூக்கி விட வேண்டாமா?
மத்திய அரசு சிந்திக்குமா? சமூகநீதியைக் காப்பாற்றுமா என்பதுதான் வெகு மக்களின் கேள்வியும் - எதிர்பார்ப்பும் ஆகும். ‘நீட்’ தொடர்ந்தால் அது வெகு மக்கள் நலனுக்கு எதிரானதே!
No comments:
Post a Comment