ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி: வட மாநிலம் போல தமிழகத்திலும் ஆங்காங்கே பெண் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகின்றனரே, இக்கொடுமையை தடுப்பது எப்போது?


- வெங்கட.இராசா, ம.பொடையூர்.


பதில்: சட்டம் - ஒழுங்கு இவற்றைக் காக்க இரும்புக் கரத்துடன் நிர்வாகம் நடத்தும் திண்மை மிக்க ஆட்சி அமையும் போது இக்கொடுமை முற்றாக ஒழியும். விரைவில் எதிர்பார்ப்போமாக!


கேள்வி: “மருத்துவ இடம் கிடைக்கலைன்னு தற்கொலை செய்த அனிதாங்கிற மாணவியின் சீட் யாருக்குப் போயிருக்கு? அவங்களை விட அதிக மார்க் எடுத்த அவங்க சமூகத்தைச் சார்ந்த இன்னொரு மாணவிக்கு தான் போகுது. ‘நீட்'டினால் 69% இட ஒதுக்கீடு மாறலையே? விவசாயி தற்கொலை செய்தா விவசாயமே கூடாது என்று சொல்ல முடியுமா? அது போல தான் இது!” என அக்.21 தேதியிட்ட ‘ஆனந்த விகட'னில் ரங்கராஜ் (பாண்டே) கூறியுள்ளாரே?


- மன்னை சித்து, மன்னார்குடி - 1.


பதில்: மூட்டை தூக்கி கூலி வேலை பார்த்து, தன் மகளின் மருத்துவராகும் கனவுக்கு முதுகு ஒடிய உழைத்த ஒரு தாழ்த்தப்பட்டவர் பற்றியோ,  சமூகத்தின் அடித்தளத்திலிருந்து படித்து உயரத் துடித்த அந்தப் பெண் பற்றியோ, இந்த சமூகத்தின் வலியோ, விவசாயம் "பாவகரமான தொழில்” என்ற மனுதர்ம அடிப்படையில் வாழும் ஒட்டுண்ணி இனங்களுக்கு புரியாது. போட்ட வேடத்திற்கு ஏற்ப வசனம் பேசுகிறார்கள், அவ்வளவுதான். இதை பொருட்படுத்தாது அலட்சியப்படுத்துங்கள்.


கேள்வி: வேதகாலத்தில் நடைபெற்ற ஆரிய-திராவிடப் போராட்டங்களுக்கும், கணினி காலத்தில் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே போன்ற போராட்டங்களுக்கும் என்ன வேறுபாடு?


- நெய்வேலி க.தியாகராசன்,


கொரநாட்டுக் கருப்பூர்.


பதில்: சூழ்நிலை மாற்றம்! தத்துவத்தில் எந்த மாற்றமும் இல்லை!


போராட்ட வடிவத்திலும், பயன்படும் கருவிகளிலும் மாற்றமே தவிர, கருத்து மாற்றம் ஏதுமில்லை!


கேள்வி: பீகாரில் எப்படியேனும் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. துடிக்கும் சூழலில், பஸ்வானின் மறைவு பீகார் தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?


- வா.செல்வம், திருப்பூர்


பதில்: பஸ்வானின் மறைவுக்கு முன்பே பா.ஜ.க. இரட்டை வேடம் போட்டுள்ளது! பஸ்வானின் மகன் மூலம் தனியே ஒரு ரூட் போட வைத்து, நிதிஷ்குமாரை அணைத்தே அழிக்க வியூகம் வகுத்துவிட்டதால், ராம் விலாஸ் பஸ்வான் அவர்களது மறைவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. பீகார் அரசியலும், மக்களும் இன்று வரை தெளிவாக இல்லை.


மூன்று நான்கு அணிகளாகவும் உள்ளதால், கேள்விக் குறியே!


கேள்வி: இந்தியாவின் பிற மாநிலங்களில் நடந்த சமூகநீதிக்கான போராட்டங்களைச் சிறப்பாகத் தேடித் தொகுத்து வழங்குகிறீர்கள். இப்படி பல தரப்பில் நடைபெற்ற போராட்ட வரலாற்றிலிருந்து சமூகநீதிப் போராளிகள் கற்க வேண்டிய பாடம் என்ன?


- கவிச் சூரியன், திருமுதுகுன்றம்.


பதில்: அரசியல் வேட்கையும், தன்முனைப்பு மிக்க, சுயநல பதவி வேட்டையும் பெரிய இயக்கங்களைக் கூட 'சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிடும்' என்ற பாடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் சமூக நீதிப் போராளிகள்.


கேள்வி: அண்ணா பல்கலைக் கழகமும், அய்.அய்.டி.யைப் போல நமக்கு எட்டாக் கனியாகி விடுமா?                           - க.தென்றல், ஆவடி.


பதில்: இன்றைய அதிமுக அரசு தொடர்ந்தால்! எதிலும் இரட்டை வேடம், முதுகெலும்பின்மை காரணமாக, ‘அண்ணா' காணாமற் போனது போல, அண்ணா பெயரில் உள்ள பல்கலைக்கழகமும் காணா மற்போகும். அலட்சியமாய் இல்லாமல், அதனை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் நாம்!


கேள்வி: தமிழ்நாடு அரசுப் பணியிடங்களில் வடவர்களை நிரப்புவதும், ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டத்தை ஏற்பதும், சமூகநீதிக்கும், தமிழர் உரிமைக்கும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் ஓட்டு மூலம் ஆட்சியை நிர்ணயிக்கும் அரசியல்-சமூகச் சூழலுக்கும் ஆபத்தானது என்பதை ஆளும் அதிமுக அரசு உணரவில்லையா?


- முகிலா, குரோம்பேட்டை.


பதில்: மடியில் கனம்; வழியில் பயம். டில்லி அரசிடம் உள்ள அச்ச உணர்வு - அடிமைகளின் குரல் போன்ற நிலைப்பாடு - இவைகள் இருக்கும் போது எப்படி உணர முடியும்?


கேள்வி: இயக்க நிகழ்வுகளில் நீங்கள் பாடியிருக் கிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக் கிறோம். இயக்க நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டா?


- சு.மணிமொழி, வேலூர்.


பதில்: புதுச்சேரியில் 1946இல் நாகை திராவிட நடிகர் சங்கம் சார்பில், கலைஞர் எழுதிய "போர்வாள்"  நாடகம் நடத்தப்பெற்றது. அந் நாடகத்தின் ஒரு காட்சியில் திருமணத்திற்குத் தலைமை தாங்குபவனாக நடித்துள்ளேன்.


(அடுத்த நாள் புதுச்சேரி மாநாடு - அதில் தான் கலவரம் எல்லாம் நடந்தது)


No comments:

Post a Comment